இனியொரு யுத்தம் வேண்டாம்
சிரியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும் உள்நாட்டுப்போரில் 652 சிறுவர், சிறுமிகள், குழந்தைகள் பலியாகியுள்ளனர் என யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


சிரியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும் உள்நாட்டுப்போரில் 652 சிறுவர், சிறுமிகள், குழந்தைகள் பலியாகியுள்ளனர் என யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. எந்த ஒரு பாவமும் அறியாத 850-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அந்நாட்டின் கிளர்ச்சியாளர்கள் படையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக யுனிசெப் நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது.
அண்மையில் போர் முனையில் சிக்கிய ஒரு சிறுவனின் இரு கால்களும் துண்டாகி ரத்தம் ஆறாக ஓடிக்கொண்டிருக்க அவன் கூக்குரலிடுவதை தொலைக்காட்சியில் கண்ட எந்த ஒரு மனிதனும் கண்ணீர் விடாமல் இருந்திருக்க முடியாது. பிஞ்சுகளைப் பயன்படுத்தி உலகளவில் ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களது வெறியைத் தணித்து வருகிறார்கள்.
உலகம் ஒரு பக்கம் புவிவெப்பமயமாதலால் பேரழிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ள தருணத்தில் ஏற்கெனவே ஒவ்வொரு நாடும் தனது சுய பலத்தை நிரூபிக்கும் வகையில் கடலில் அணுகுண்டுகளை தாங்கிச் செல்லும் ஏவுகணை சோதனை நடத்துவது, பாலைவனங்களில் அவற்றின் வீரியத்தைக் கண்டறிவது போன்ற இயற்கைக்கு மாறான செயல்களில் வேண்டுமென்றே ஈடுபட்டு வருவது உலக சுகாதார ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே இரு உலகப்போரை நாம் சந்தித்துவிட்டோம். 1914-18 வரை நடைபெற்ற முதல் உலகப்போரில் நேச நாடுகள் என்றழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும், மைய நாடுகள் என்றழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளும் எதிரெதிர் பக்கங்களில் நின்று போரிட்டன.
புதிய தொழில்நுட்பங்களின் வழிவந்த இயந்திரத் துப்பாக்கிகள், உயர்தரமான கனரக பீரங்கிகள், மேம்பட்ட போக்குவரத்து, வான்வழிப் போர்முறை, நீர்மூழ்கிகள் போன்றவை போரின் தாக்கத்தைப் பெரிதும் அதிகப்படுத்தின.
1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற 2-ஆம் உலகப்போரில் பொதுமக்கள், ராணுவத்தினர் என 50 லட்சத்துக்கும் மேல் இறந்தனர். எங்கு பார்த்தாலும் ரத்த ஆறு ஓடியது.
எனவே இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாத வகையில் உலக நாடுகளுக்கிடையே பரஸ்பர நல்லுறவு ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டது.
இருப்பினும் அமெரிக்கா - ரஷியாவின் பனிப்போர் காரணமாக மூன்றாம் உலகப்போர் நிகழுமோ என்ற அச்சம் நிலவி வந்தது. ஆனால் தற்போது அந்த அச்சம் மறைந்து வடகொரியா - சீனாவால் மீண்டும் உலகப்போர் நிகழ்ந்திடுமோ என்ற சூழல் உருவாகியுள்ளது.
உலகின் வல்லரசான அமெரிக்காவுக்கு எதிராக கொரிய தீபகற்பகத்தில் வட
கொரியாவும், அரபுநாடுகளில் ஈரானும் மறைமுக ஆயுதப்போட்டியை நடத்தி வருகின்றன.
அண்மையில் ஈரான், இராக்குக்கு எதிராக பாரசீக வளைகுடாவில் நவீன அதிவேக போர்க்கப்பலை நிறுத்தி பதற்றத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
வட கொரியாவோ தொடர்ந்து ஐ.நா.வின் அறிவுரையையும் ஏற்க மறுத்து ஐந்து முறை அணு ஆயுத ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது. இதனிடையே இரு மாதங்களுக்கு முன் வடகொரியா நிகழ்த்திய அணு ஆயுத சோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவில் தனது சக்திவாய்ந்த பி-1பி வகை குண்டு வீச்சு விமானங்களை அமெரிக்கா பறக்கவிட்டது.
இவை தவிர சிரியாவில் கடந்த 2011 முதல் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் உள்நாட்டுப்போர் நடந்து வரு
கிறது. இதுவரை அங்கு ராணுவ வீரர்கள் 59,006 பேரும், அரசுக்கு ஆதரவாக சண்டையிட்டு வரும் ஆயுதக்குழுவின் 48,048 பேரும், பயங்கரவாதிகள் 52,031 பேரும் பலியாகியுள்ளனர். சீனாவோ ஜப்பான் தீவுகளை சொந்தம் கொண்டாடி வரு
கிறது.
இந்த நாடுகளின் நடவடிக்கையால் மூன்றாம் உலகப்போர் மூழலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இனி அப்படியொரு போர் மூண்டால் உலக நாடுகள் தங்களிடம் குவித்து வைத்திருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும்.
அவ்வாறு பயன்படுத்தும்போது மனித இனமே அழிந்துவிடும். இதனைத்தான் சமூக ஆர்வலர்கள் மூன்றாம் உலகப் போர் என ஒன்று தோன்றி அணு ஆயுதங்களைக் கொண்டு போரிட்டால், நான்காம் உலக போரானது வில் அம்புகளைக்கொண்டோ, வெறும் குச்சிகளும் கற்களும் கொண்டு தான் நடைபெறும் என வர்ணிக்கிறார்கள்.
இதற்கு ஆதாரமானவையாக இரண்டாம் உலகப்போரில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த ஜப்பான் அமெரிக்காவின் "பியர்ல்' துறைமுகம் மீது நடத்திய தாக்குதலால் ஆவேசமடைந்த அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோசிமா நகரம் மீது 1945 ஆகஸ்ட் 6-இல் லிட்டில் பாய் எனும் அணுகுண்டினை எனோலோகே என்ற விமானம் மூலம் காலை 7 மணிக்கு வீசியதில் 78,000 பேர் மாண்டதும், அதன் பின்னரும் கதிர்வீச்சால் 12,000 பேர் இறந்ததும் சரித்திரம் கூறும் உண்மை.
மேலும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி பேட்மேன் (ச்ஹற்ம்ஹய்) அணுகுண்டை ஜப்பானின் துறைமுக நகரமான நாகசாகி மீது வீசியதில் 38,000 பேர் மரணம் அடைந்ததன் விளைவு, 1945 ஆகஸ்ட் 15-இல் ஜப்பான் சரணடைந்தது.
இன்னும் அந்நாட்டவர்கள் கதிரியக்க நோயால் அவதியுற்று வருகிறார்கள். இனியொரு யுத்தம் வேண்டாம். மனிதரில் நிறம் மட்டுமே மாற்றமே தவிர, குருதி அனைவருக்கும் ஒரே நிறம் தான் என்பதை உணர வேண்டும்.
மனிதர்கள் வன்முறையைக் கைவிட்டு அன்பு, கருணை போன்ற உணர்வுகளுக்கு மதிப்பளித்தாலே உலகெங்கும் அனைத்து உயிர்களும் இன்புறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...