தேவையற்ற தடுமாற்றம்...
முதுகலையை முடித்து ஆய்வுப் பணிகளால் முனைவர் பட்டம் பெற்ற ஒருவரிடம், மேல்நிலைப் பள்ளிப் படிப்பின் மேன்மையை போதிப்பதுபோல் உள்ளது


முதுகலையை முடித்து ஆய்வுப் பணிகளால் முனைவர் பட்டம் பெற்ற ஒருவரிடம், மேல்நிலைப் பள்ளிப் படிப்பின் மேன்மையை போதிப்பதுபோல் உள்ளது, இந்தியாவில் மதச்சார்பின்மையை வலியுறுத்துவது.
ஏனெனில், பல நூற்றாண்டுகளாகவே இந்தியர்களின் ரத்தத்தில் ஊறிப்போன விஷயம், மத வேறுபாடுகளைக் கடந்து இணக்கமாக வாழ்வது.
இந்தியர்களின் அடிப்படை சுபாவமே மதம் கடந்த நல்லிணக்கம் என்பதால்தான், அரசியல்சாசன சிற்பியான பாபா சாகேப் அம்பேத்கர், "செக்யூலர்' என்ற வார்த்தையை, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறச் செய்யவில்லை.
ஆனால், நெருக்கடி நிலையைக் கொண்டுவந்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசுதான், 1976-இல், மதச்சார்பின்மை என்று பொருள்படும் "செக்யூலர்' என்ற வார்த்தையை அரசியல் சாசனத்தில் புகுத்தியது.
கிறிஸ்தவ நாடான பிரிட்டனில் 19-ஆம் நூற்றாண்டில், ஆட்சியாளர்களான அரசர் - அரசிகளைவிட மதத் தலைவர்களான பிஷப்புகளின் ஆதிக்கம் மேலோங்கி, ஆட்சி நடைமுறையிலும் அது குறுக்கிட்டதன் காரணமாக, ஆட்சி நிர்வாகத்தில் மதத் தலையீட்டைத் தடுப்பதற்கான ஒரு விஷயமாக "செக்யூலரிஸம்' அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் நோக்கம், மக்களின் வழிபாட்டு முறையில் அரசு தலையிடாது, இதேபோல, அரசு நிர்வாகத்தில் மத போதகர்களான பிஷப்புகள் தலையிடக் கூடாது என்பதே.
ஆங்கில எழுத்தாளரும் அறிஞருமான ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியாக் என்பவர்தான், 1851-இல் முதன்முறையாக இந்த "செக்யூலர்' என்ற வார்த்தையை உருவாக்கிப் பயன்படுத்தினார். பின்னர் பிரிட்டிஷ் அரசும் பயன்படுத்தியது.
இந்தியாவில் "செக்யூலர்' என்ற வார்த்தை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் ஆதங்கம் நியாயமானதே. ஏனெனில் (அன்றைய) பிரிட்டனைப்போல இந்தியாவில் அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட மதம் ஏதுமில்லை.
பன்னெடுங்காலமாகவே இங்கு பல்வேறு மதங்களை அரவணைத்துச் செல்லும் போக்கே அரசர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்களிடம் இருந்து வந்துள்ளது (முகலாய ஆட்சியில் ஒளரங்கசீப் அரசாட்சி மட்டுமே இதற்கு விதிவிலக்கு).
சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னர் அசோகன் பெளத்த மதத்தைத் தழுவி அதனை பரப்புவதற்காக தமது மகன், மகள் ஆகியோரை அயல்நாடுகளுக்கே அனுப்பியபோதிலும், சொந்த நாட்டில் அனைத்து மதங்களுக்கும் உரிய மரியாதையைக் கொடுத்து வந்தார்.
பெளத்த மதத்தைத் தழுவிய ஹர்ஷ வர்த்தனன், சர்வ சமய மாநாடுகளை நடத்தி புகழ் பெற்றவர். சிவபாதசேகரன் என்று போற்றப்படுகின்ற ராஜராஜ சோழனும், மாமல்லன் நரசிம்மவர்ம பல்லவனும் சைவர்களாக வாழ்ந்தபோதிலும், மற்ற மதங்களை ஆதரிக்கத் தவறவில்லை.
இதேபோல்தான், வைணவர்களான கிருஷ்ணதேவ ராயரும், திருமலை நாயக்கரும் பல்வேறு மதங்களுக்கு இடையே இணக்கத்தை வளர்த்தனர். காலனியாதிக்கத்துக்கு முன்பே தமிழகத்தில் கிறிஸ்தவத்துக்கு வரவேற்பளித்தவர் திருமலை நாயக்கர்.
ஒளரங்கசீப்பை எதிர்த்து ஹிந்து சாம்ராஜ்யம் கண்ட மாவீரன் சிவாஜி, தமது ஆட்சியில் இஸ்லாத்துக்கு உரிய மரியாதையைக் கொடுத்தார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு உலகம் முழுவதும் அகதிகளாகத் திரிந்த யூதர்கள், இந்தியாவில் மட்டுமே கெளரவத்துடனும், கண்ணியத்துடனும் வாழ்ந்தது வரலாறு.
இதேபோல், சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு பாரசீகத்தில் (இன்றைய ஈரான்) இருந்து துரத்தியடிக்கப்பட்ட பார்ஸிக்கள், தற்போதுவரை இந்தியாவில்தான் தங்கள் மரியாதையையும் மதத்தையும் இழந்துவிடாமல் வாழ்ந்து வருகிறார்கள். இவையெல்லாம், இந்தியர்களின் ஆன்ம - உடலமைப்புக்குள் உறைந்து நிற்கும் சமய சமரச மனோபாவத்தால் விளைந்தது.
மதம் என்பதற்கு கருத்து என்று பொருள். ஒருவர் ஒரு கருத்தைச் சார்ந்து நிற்பதில் என்ன தவறு இருக்கிறது? அந்தக் கருத்துதான் சரி என்றுகூறி மாற்றுக் கருத்துகளே கூடாது என்று கருதுவதுதான் தவறு. அதனால்தான், பல்வேறு மதங்களைக் கொண்ட இந்தியாவில் வாழ்வோர், தான் ஒரு மதத்தைச் சார்ந்து நின்றபோதிலும் மாற்று மதங்களையும் மதித்தார்கள், மதிக்கிறார்கள்.
ஆனால், மற்ற நாடுகளில் ஒற்றை மதமே பெரும்பாலும் கோலோச்சுவதால் இந்த அடிப்படை சமரச மனோபாவம் அவர்களுக்கு வாய்க்கப் பெறவில்லை. ஆகையால், அங்கு "செக்யூலர்' என்பது போன்ற ஏற்பாடு தேவை. இந்தியாவில் அதன் அவசியம் இல்லாமலேயே அதன் பொருள் செயல்பாட்டில் இருக்கிறது.
"உண்மை ஒன்றே, அறிஞர்கள் அதனைப் பலவிதங்களில் மொழிகிறார்கள்' என்ற கருத்தாக்கத்தின் வடிவிலும் மத நல்லிணக்கம் இந்தியாவில் வாழ்கிறது.
இந்த மத நல்லிணக்கத்தைவிட பெயரிலும், பொருளிலும் செறிவு குறைந்த மதச்சார்பின்மை என்ற வார்த்தை இந்தியாவைப் பொருத்தவரை தேவையற்ற இடைச்செருகலே.
வெறும் "செக்யூலர்' என்ற வார்த்தையால் மதங்களைக் கடந்த மானுடம் கட்டிக் காப்பாற்றப்படுவதாக நினைப்பது மதியீனம். அதைவிட கொடூர வேடிக்கை, "சகிப்புத்தன்மை' என்ற வார்த்தையின் பயன்பாடு. பிற மதங்களும், மாற்றுக் கருத்துகளும் நம்மை அத்தனை துன்புறுத்தவா செய்கின்றன, வேறு வழியின்றி பொறுத்துக்கொள்வதற்கு?
"என் கருத்து எனக்கு, உன் கருத்து உனக்கு, அவர் கருத்து அவருக்கு. இவற்றைக் கடந்து நாம் அனைவரும் இணைந்து வாழ்கிறோம்' என்பதுதானே இந்தியாவின் "வேற்றுமையில் ஒற்றுமை' உலகுக்கு உணர்த்திடும் முன்னுதாரணம். சகிப்புத்தன்மையைத் தாண்டி சமரசத்தையும், சர்வ தர்ம சமபாவத்தையும் உயர்த்திப் பிடித்து நிற்கும் உன்னத நாடு இந்தியா.
இவற்றின் குணாதிசயங்களைப் போற்றி வளர்ப்பதை விடுத்து, அன்னிய நாடுகளில் இருந்து கடன் வாங்கிய "செக்யூலர்', "டாலரன்ஸ்' போன்ற வார்த்தைகளின் மொழியாக்கத்துக்காகவும், பயன்பாட்டுக்காகவும் தடுமாறுவது பெருமைமிகு பாரதத்தை சிறுமைப்படுத்துவதாகவே அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...