/

விற்பதற்கா இலவசம்?

நண்பர் ஒருவர் புதிதாக வாங்கியிருந்த மடிக்கணினி ஒன்றில் ஆனந்தமாக "விளையாடிக்' கொண்டிருந்தார். அதன் விலை என்ன? என்று நான் கேட்டபோது, ரூ. 11 ஆயிரம் என்றார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:19 am

ப. இசக்கி

நண்பர் ஒருவர் புதிதாக வாங்கியிருந்த மடிக்கணினி ஒன்றில் ஆனந்தமாக "விளையாடிக்' கொண்டிருந்தார். அதன் விலை என்ன? என்று நான் கேட்டபோது, ரூ. 11 ஆயிரம் என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்பாகும் அந்த மடிக்கணினி. ஆச்சரித்தோடு நான் விவரத்தைக் கேட்டபோது, "இது மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய இலவச மடிக்கணினி' என்றார். மாணவர் ஒருவரிடமிருந்து அந்தத் தொகைக்கு நண்பர் வாங்கி இருக்கிறார்.

நண்பர் "இரண்டாவது விற்பனை'யாக பணம் கொடுத்து அந்த மடிக்கணினியை வாங்கியது ஒருபுறம் இருக்கட்டும். அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல், அதை இப்படி வீணாக்குகிறார்களே என்பதை நினைத்தால்தான் மனம் வேதனை யடைகிறது.

அரசின் இலவசங்களை பெறும் மக்கள் அவை நமது வரிப்பணத்தில் இருந்து நமக்கு அளிக்கப்பட்டவை என்பதை எண்ணி, அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி தங்களின் சமூக, பொருளாதார வாழ்வை உயர்த்திக் கொண்டால் நல்லது. அதுதான் அரசின் நோக்கமும் கூட. ஆனால் அதைவிடுத்து, இலவசம்தானே என எண்ணி, இந்தப் பக்கம் வாங்கி அந்தப் பக்கம் விற்றுவிடும் "கைமாற்றும்' மன நிலை இருந்தால் அரசுதான் என்ன செய்ய முடியும்?

தாங்கள் வழங்கும் இலவச பொருள்களால் ஏழை, எளிய மக்களின் சமூக, பொருளாதார வாழ்வு எப்படியெல்லாம் முன்னேற்றம் கண்டு வருகிறது என்று ஆட்சியாளர்கள் மேடைதோறும் பேசி வருகின்றனர். ஆனால், அந்தப் பொருள்களோ சந்தையில் "அடிமாட்டு' விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த விஷயம் வெளியே தெரிய வரும்போது நடவடிக்கை எடுக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும், "விற்பனை' தொடர்வதுதான் வேதனை அளிக்கிறது.

முந்தைய ஆட்சியில் இலவசமாக தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்தார்கள். அதை பெற்றவர்கள் உள்ளூரிலும், பக்கத்து ஊர்களிலும், அண்டை மாநிலமான கேரளத்திலும் அவற்றை விற்று விட்டார்கள். நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி கடத்தப்படுவது இன்னமும் முடிவுக்கு வராத நிலை. அதிலும், நியாயவிலைக் கடைகளில் அரிசி இலவசம் என்று ஆன பிறகு சில கிராமங்களில் ஆடு, மாடு, கோழிகளுக்குக்கூட அதை முக்கியத் தீவனமாக்கி விட்டனர்.

அரசு வழங்கும் இலவச ஆடு, மாடுகள் சந்தையில் விற்கப்படுவதும் அவ்வப்போது ஊடங்களில் செய்தியாக வருகிறது. இலவச சைக்கிள்களுக்கும் அதே நிலைதான். இப்போது மடிக்கணினி.

மடிக்கணினியை பெறும் பள்ளி மாணவர்கள், அவற்றை முதலில் திரைப்படப் பாடல்கள் கேட்கவும், படங்கள் பார்க்கவும் பயன்படுத்துகின்றனர். சிலர் அதில் விதவிதமான "விளையாட்டு'களை பதிவேற்றம் செய்து விளையாடுகின்றனர். இணைய இணைப்பு பெற்று மடிக்கணியை பயன்படுத்த வேண்டுமானால் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ. 200 வேண்டும். அதற்கு பெற்றோரின் பொருளாதாரம் இடம் கொடுக்காத நிலையில் மாணவர்களின் முதல் தேர்வு "விற்பனை'தான். அவை, ரூ. 7 ஆயிரம் முதல் ரூ. 13 ஆயிரம் வரையிலான விலைக்கு விற்கப்படுகின்றன.

மடிக்கணினியை பெறும் கல்லூரி மாணவர்களின் பிரதான பயன்பாடு முகநூல்தான். அதன் பிறகுதான் இதர பயன்பாடு. எல்லா மாணவர்களுமே இப்படித்தான் என்று கூற முடியாது. சிலர் அந்த மடிக்கணினியை கிடைத்தற்கரிய பொருளாக பாவித்து நல்ல முறையில் பயன்படுத்தி வருவதையும் பார்க்க முடிகிறது. பெரும்பாலும், பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களே உடனே அதை விற்று பணமாக்கி விடுகின்றனர்.

இன்றைய நவீன உலகில், மாணவர்களானாலும் சரி, கல்வி அறிவு பெற்ற இளைஞர்கள் ஆனாலும் சரி, அவர்களை இரு வகைகளாக பிரிக்கலாம். முதலாவது வகை, மலர்களை தேடித்தேடிச் சென்று தேன் சேகரிக்கும் தேனீயைப் போல, உலக அறிவை தேடித்தேடி சேகரித்து செம்மைபெற்று நல்ல வேலைவாய்ப்புகள் மூலம் இளம் வயதிலேயே வளமான வாழ்வை எட்டிப் பிடித்து விடுபவர்கள். மற்றொரு வகை, உலக இன்பங்களில் மூழ்கி வாழ்வை தொலைத்துவிட்டு வீதிகளில் சுற்றித் திரிபவர்கள்.

ஒவ்வொரு மாணவரும் கல்வி கற்று முடிந்த பின்பு இந்த முதல் வகையான இளைஞராக வேண்டுமானால் இன்றைய சூழ்நிலையில் ஒரு கணினி கட்டாயம் தேவை. அதற்காகத்தான் அரசு அதை அவர்களுக்கு இலவசமாக அளித்து வருகிறது. ஆனால் அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் விலைக்கு விற்றுவிடுவது என்பது அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகும்.

கணினி மட்டுமல்ல, அரசு வழங்கும் எந்தவொரு இலவசப் பொருளையும் எவரும் விற்கக்கூடாது. அவற்றை விற்பதற்கு வறுமையை காரணமாக கூறுவது ஏற்புடையது அல்ல. வறுமையைப் போக்குவதற்காக அரசால் வழங்கப்படும் உதவியை தூக்கி எறிந்தால் வாழ்வில் வறுமை எப்படிப் போகும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.