தென் மாவட்டங்களில், அதிலும் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெட்டும், குத்தும் சகஜம்தான். ஆனாலும், ஒரு கல்லூரி முதல்வரை மாணவர்களே துடிதுடிக்க வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த மாவட்ட மக்களை மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது
இது ஒரு தனிப்பட்ட சம்பவம் எனக் கூறி ஒதுக்கிவிட முடியாது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகளில் பூமிக்கடியில் உள்ள எரிமலையைப் போன்று ஆங்காங்கே குமுறிக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்னையின் அடையாளமாகக்கூட இந்த கொலை சம்பவம் இருக்கலாம். கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்.
பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்களை போலத்தான் இயங்கி வருகின்றன. கல்லூரி நிர்வாகங்களின் பிரதான நோக்கம் பணம்தான்.
காசுதான் கடவுள். மாணவர்களிடம் பணம் கறப்பதில் அவர்கள் காட்டும் ஆர்வமும், அதற்காக கூறப்படும் காரணங்களும் அலாதியானவை.
ஒரு சில தனியார் பொறியியல் கல்லூரிகளைத் தவிர, பெரும்பாலான கல்லூரிகள் அரசு நிர்ணயித்துள்ளதைவிட பல மடங்கு அதிகமான கட்டணத்தை வசூல் செய்கின்றன. இவை தவிர நன்கொடைகள் வேறு. பேருந்து கட்டணம், நோட்டுப் புத்தக கட்டணம், சீருடை கட்டணம் என அவற்றின் உண்மையான மதிப்பைவிட பல மடங்கு அதிகமாக ஆண்டுதோறும் அவர்கள் "கறக்கும்' பணத்திற்கு அளவே கிடையாது.
அதோடு மாணவர்களை விடுவதில்லை. எதற்கெடுத்தாலும் அபராதம். கல்லூரிக்கு வராவிட்டால் அபராதம், காலதாமதமாக வந்தால் அபராதம், கேன்டீனில் கை தவறி டீயை கொட்டிவிட்டால் அபராதம், ரெக்கார்ட் நோட்டு எழுதாவிட்டால் அபராதம், விடுதியில் கூடுதல் நேரம் தூங்கி விட்டால் அபராதம், ஆய்வகங்களில் 50 ரூபாய் பெறுமான பொருளை உடைத்து விட்டால் ஆயிரக்கணக்கில் அபராதம், இப்படி எதற்கெடுத்தாலும் அபராதம் விதிப்பது மாணவர்களின் ஆத்திரத்தை தூண்டும் ஒரு கூரிய ஆயுதம் என்பதை நிர்வாகம் உணருவதில்லை.
அபராதத்தை செலுத்தாவிட்டால் கல்லூரி நிர்வாகம் தண்டிக்கும். அபராதத் தொகைக்காக பெற்றோர் கண்டிப்பர். இப்படி இருபுற நெருக்குதலாலும் மாணவர்கள் விரக்தியின் எல்லைக்கு செல்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
அதற்காக, மாணவர்கள் செய்யும் தவறுகளை கண்டு கொள்ளக் கூடாது என்றோ அதற்கு தீர்வு கொலைதான் என்றோ பொருள் அல்ல. மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை என்றும், அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான வழி என்றும் கூறி கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் பணப்பெட்டியை நிரப்பும் முயற்சியில் ஈடுபடுவது மாணவர்களை வன்முறையாளர்களாக்கி விடுகிறது.
தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் முதலில் மாணவர்கள் அங்குள்ள தளவாடச் சாமான்களைத்தான் அடித்து உடைக்கின்றனர். ""எங்களிடம் "கட்டணம்' என்ற பெயரில் பணம் வசூலித்து உருவாக்கப்பட்டதுதானே இந்த சொத்துகள், அவற்றை நாங்களே அழிக்கிறோம்'' என்ற கோபத்தின் வெளிப்பாடுதான் அது.
மாணவர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாலேயே கல்லூரி முதல்வர் கொலை செய்யப்பட்டார் என்றால், பெரும்பாலான கல்லூரி முதல்வர்கள் ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்புடன்தான் நடமாட முடியும்.
காரணம், ஒழுக்கக் கேடுகளில் சிக்கியுள்ள இன்றைய மாணவர் சமுதாயத்தை வழிக்கு கொண்டு வர பெரும்பாலான கல்லூரிகளில் "இடைநீக்கம்' என்பது அவ்வப்போது நடைபெறும் ஒரு வழக்கமான நிகழ்வுதான்.
ஆதலால், மாணவர்களின் மனங்களில் மறைந்துள்ள குமுறல்களுக்கான காரணங்களை அடையாளம் கண்டு தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியம்.
தனியார் கல்லூரிகளின் விதிமுறை மீறிய செயல்பாடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் அரசு அதிகாரிகளிடம் மனுக்களை அளிப்பது அதிகரித்து வருகிறது. அங்கு எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்து விடுவதில்லை. பணப் பிரச்னைக்கு ஆலோசனை மையங்களில் தீர்வு காண முடியாது.
மாவட்டத் தலைநகரங்களில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட நாளில் விவசாயிகள், மீனவர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அதுபோன்று, மாவட்ட நிர்வாகம், நேர்மையான கல்வியாளர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட குழு மூலம் மாணவர்களின் குறைதீர் கூட்டம் நடத்தி இதுபோன்ற பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டியது அவசியம். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது என்பதை உணர வேண்டும்; சிலருக்கு உணர்த்தவும் வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

