/

"உளவு'க்கு வந்தனம் செய்வோம்!

உலகின் ஒரே வல்லரசு என கூறிக்கொண்டு, ஒருவரோடு ஒருவர் பேசுவதை ஒட்டுக் கேட்ட அமெரிக்கா,

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:44 am

ப. இசக்கி

உலகின் ஒரே வல்லரசு என கூறிக்கொண்டு, ஒருவரோடு ஒருவர் பேசுவதை ஒட்டுக் கேட்ட அமெரிக்கா, இப்போது உலக நாடுகளின் கண்டனக் கணையால் தலைகுனிந்து நிற்கிறது. உளவுப் பணியை நவீனப்படுத்த திட்டமிட்டுள்ள இந்தியாவுக்கு இது ஓர் பாடம்.

 அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உலக மக்கள் பேசிக் கொள்வதையும், எழுத்து மூலம் பகிர்ந்து கொள்வதையும் ஒட்டுக் கேட்டதை அங்கு வேலைபார்த்த ஊழியர் எட்வர்ட் ஸ்னேடெர்ன் வெளி உலகுக்கு காட்டிக் கொடுத்து விட்டார். அதற்கு இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. எட்வர்ட் ஸ்னோடெர்ன் அடைக்கலம் தேடி நாடு நாடாக ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்.

 இந்தியாவில், மத்திய அரசின் ஐ.பி., "ரா', சி.பி.ஐ., டி.ஆர்.ஐ., என்.ஐ.ஏ. உள்ளிட்ட 7 அமைப்புகள் பொதுமக்களின் தகவல் தொடர்புகளை "உரிய அனுமதி' பெற்று ஒட்டுக் கேட்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தீவிரவாதிகள் நிகழ்த்தும் குண்டுவெடிப்புகளை முற்றிலுமாக முடக்க முடியவில்லை. அதற்கு

முக்கியமான காரணம், உளவு பார்க்கும் அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாது.

 எனவே, நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், உளவு அமைப்புகளுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் தகவல் தொடர்புகளை இன்னும் தீவிரமாக கண்காணிக்க தொலைபேசி, இமெயில், இன்டர்நெட், பேக்ஸ் மற்றும் சமூக வலைத்தலங்களை ஒட்டுமொத்தமாக கண்காணிக்க "மத்திய கண்காணிப்பு அமைப்பு' ஒன்றை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 இந்த திட்டம் இப்போது சோதனை முறையில் தில்லி, அரியானா மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்து, கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கத்திற்கு  விரிவுபடுத்தப்பட உள்ளது. தொடர்ந்து நாடு முழுவதும் இந்த கண்காணிப்பு வலை விரியும்.

 நாட்டில் சுமார் 90 கோடி செல்போன்கள், 16 கோடி இன்டர்நெட் மற்றும் 85 கோடி சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் உள்ளனர். இந்த மத்திய கண்காணிப்பு அமைப்பு முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வரும்போது இவர்களில் யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் உளவு பார்க்க முடியும்.

 இந்த திட்டம் குறித்த விரிவான எந்த விவரமும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவில்லை, எவ்வித விவாதமும் நடத்தப்படவில்லை, இதன் மூலம் ஓர் ஜனநாயக நாட்டில் வாழும் தனிநபர்களின் "அந்தரங்கம்' பாதிக்கப்படாதா? என்பது மனித உரிமை ஆர்வலர்களின் கேள்வி.

   கண்காணிப்பு அமைப்பின் செயல்பாடு குறித்த வரைவு அறிக்கையின்படி, தனிமனித உரிமைகளுக்கு எதிராகவோ, அந்தரங்க பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலோ அதன் செயல்பாடுகள் இருக்காது என்பதற்கும் உத்தரவாதம் இல்லை என எதிர்ப்பாளர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர். அதில் உண்மை இல்லாமல் இல்லை. அதற்கு தீர்வு காணப்பட வேண்டுமே தவிர, அதற்காக நாட்டின் பாதுகாப்பை விலையாக கொடுக்க முடியுமா?

 தனிமனித அந்தரங்கத்திற்கு எவ்வித பாதிப்பு இல்லாமலும், துளிகூட அசெüகரியம் ஏற்படாமலும் நாட்டின் முழுமையான பாதுகாப்பு சாத்தியமா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். ஒட்டுக் கேட்பவர்கள், முதலில் தகவலைத்தான் ஒட்டுக் கேட்கிறார்களே தவிர, நபர்களை அல்ல. சந்தேகம் ஏற்பட்டால்தான் நபரையும்,  தகவல் பரிமாற்றத்தையும் ஒட்டுக் கேட்பார்கள். ஆதலால், "நலம், நலம் அறிய ஆவல்' போன்றவற்றால் யாருக்கும் பாதிப்பு ஏற்படப் போவதில்லை. விஷமத்தனம் செய்தால்தான் ஆபத்து என்பது "பிரிசம்' (அமெரிக்கா உலக நாடுகளை ஒட்டுக் கேட்டது) திட்ட ஆட்சேபனைக்கு அமெரிக்கா கூறும் பதில்.

 ஆபத்தான நல்ல பாம்பை கண்டால்தான் தடியை எடுப்பார்கள். தண்ணீர் பாம்பை கண்டால் யாரும் தடியை எடுத்துக் கொண்டு ஓடுவதில்லை. ""என்னால் தனி நபருக்கோ, நாட்டுக்கோ ஆபத்து இல்லை'' என ஒவ்வொரு தனிமனிதனும் உறுதி ஏற்றுக் கொண்டால் ஒட்டுக் கேட்புக் குறித்து கவலைப்பட வேண்டியது இல்லை.

 எனவே, அரசியல் சட்டம் அளித்துள்ள தனிமனித உரிமைகளை பாதிக்காத வகையில் நாட்டின் நலன் கருதி அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம். அதேவேளையில், பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் தேடிக் கொள்ளவும் வழி செய்ய வேண்டும். நாட்டு மக்களின் அந்தரங்க உரிமைகளை பாதுகாக்க தனிச் சட்டம்-பிரைவசி பில்-2011-அரசின் பரிசீலனையில் உள்ளது. அதை நிறைவேற்றினால், உளவு அமைப்புகளின் அத்துமீறலில் இருந்து நிவாரணம் பெற முடியும் என்பதால், முதலில் அந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டியது அரசின் தலையாய கடமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.