மக்கள் துணையே மகேசன் துணை
ஒரு புகைப்படம் ஆயிரம் செய்திகளைச் சொல்லும்; ஒடிசா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த "தர்னா' போராட்டத்தில் பெண் போலீஸ் பிரமீளா பதி என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கியதால் காயமுற்றார். செய்தியில் வந்


ஒரு புகைப்படம் ஆயிரம் செய்திகளைச் சொல்லும்; ஒடிசா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த "தர்னா' போராட்டத்தில் பெண் போலீஸ் பிரமீளா பதி என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கியதால் காயமுற்றார். செய்தியில் வந்த புகைப்படத்தில், பிரமீளாவை ஒருவர் மற்றவர்களிடமிருந்து காப்பாற்றி அழைத்துச் செல்கிறார். பின்னால் இருந்து ஒருவர் உருட்டுக் கட்டையை ஓங்கியவண்ணம் பின் தொடர்கிறார். இன்னொருவர் கண்ணில் அனல் பறக்கிறது, வன்முறை வழிகிறது. மற்றொருவர் அப்பெண்ணை "விடியோ கேமரா' மூலம் பதிவு செய்கிறார்.
தெருவுக்குக் கூட்டமாக வந்துவிட்டால் நல்லது எது, கெட்டது எது என்ற உணர்வு மக்களுக்கு மறந்துவிடுகிறது. சேர்ந்திருக்கும் "கும்பலின் ஒட்டுமொத்த குணம்' வெளிப்படுகிறது. "தவறு செய்தாலும் நம்மை யாரும் கண்டுபிடிக்க முடியாது' என்ற துணிச்சல் வந்து விடுகிறது.
பொது இடங்களில் கூட்டங்கள் நடத்துவதற்கு காவல்துறையின் அனுமதி பெற வேண்டும். அனுமதி அளிக்கும் உத்தரவில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் தெளிவாகப் போடப்பட்டு கூட்டம் ஏற்பாடு செய்யும் அமைப்பின பெறுப்பாளருக்கு சார்வு செய்யப்பட்டு, பெற்றுக் கொண்டதற்கான கையொப்பமும் பெறப்படும்.
காவல்துறை அனுமதி பெற்ற பிறகு நடத்தப்படும் கூட்டங்களில், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பலமுறை மீறப்படும். உதாரணமாக, பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் கூட்டமோ, ஊர்வலமோ நடத்தப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், தடையிருந்தும் அவற்றை மீறினால்தான் ஆர்ப்பாட்டத்துக்கு வெற்றி என்று கணக்கிடுகிறார்கள். பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல் துறையினருக்கு "எப்படியோ நிலைமையைச் சமாளித்தால் போதும்' என்று இத்தகைய தடைமீறல்களைக் கண்டும் காணாமல் இருக்க வேண்டிய நிர்பந்தம்.
எந்த விதியைக் கறாராக அமல்படுத்துவது, எதைத் தளர்த்துவது என்பதைப் பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரிதான் முடிவு செய்ய வேண்டும். கூட்டம் ஏற்பாடு செய்பவர்களோடு நயமாகப் பேசி விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது ஒருவிதம். ஆரம்ப முதலே கெடுபிடி செய்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வைப்பது இன்னொரு வழி. கடனே என்று "முறை கழிக்கும்' பாதுகாப்பு அலுவலர்கள், விதிகள் மீறப்பட்டாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் நிலையும் உண்டு. இந்த அணுகுமுறைதான் பல பிரச்னைகளுக்கு வித்திடுகிறது.
அமைதியான கூட்டங்களில் கலகக்காரர்கள் கலந்துவிடுகிறார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல்போக காவல்துறை கடைசி யுக்தியான கண்ணீர்ப்புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு என்ற நடவடிக்கைகளை எடுக்கும் நிர்பந்தத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். சில கூட்டங்கள் தடையை மீறிப் பிரச்னை செய்ய வேண்டும் என்றே நடத்தப்படுகின்றன.
ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பாதுகாப்பு முறைகள், சட்டவிரோத கூட்டங்களைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய சட்டத்துக்கு உள்பட்ட வழிமுறைகள் பற்றிய பயிற்சி காவலர்களுக்குத் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. காவல்பணி அடிப்படைப் பயிற்சியிலும், புத்தாக்கப் பயிற்சியிலும் இவை விளக்கப்படுகின்றன. செயல் வழியிலும் பயிற்றுவிக்கப்படுகிறது.
"பயிற்சியில் வியர்வை சிந்தினால், களத்தில் ரத்தம் சிந்த நேராது' என்பது முதுமொழி. ஆனால், பயிற்சியில் கற்றவை எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதுதான் பிரச்னைக்குரியது. சில நேர்வுகளில் நடைமுறைப்படுத்த முடியாத நிலையும் ஏற்படுகிறது. இங்குதான் காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆளுமை சோதிக்கப்படுகிறது.
பொது அமைதி என்பது அன்றாட சமுதாய நிகழ்வுகளின் அடிப்படையில் மாறுபடும். ஒரு சீராக இருக்காது. உள்ளூர் சச்சரவுகள், வட்டார நிகழ்வுகள், மாநிலம், நாடு ஏன் - உலக அளவில் - நடக்கும் சம்பவங்களின் பாதிப்பு இவற்றைப் பொறுத்தது. செய்திகள் மின்னல் வேகத்தில் பறக்கும். இந்நாளில் "உடையும்' செய்திகளை ஆராயாவிட்டால் உறைய வைக்கும் காட்சிகளை எதிர்கொள்ள நேரிடும்.
ஜாதிப் பிரச்னைகள் அதிகமாகத் தலைதூக்கும் மாநிலம் பிகார். அங்கு ஒவ்வொரு ஜாதித்தலைவரும் ஒரு பாதுகாப்புப்படையை உருவாக்கி, "தொண்டர்கள்' என்ற பெயரில் உலா வருவார்கள். அரசியலில் ஜாதிகளின் ஆதிக்கம் பிகார் மாநிலத்தில் அதிகம். "ரணவீர் சேனா' என்ற உயர் ஜாதி பாதுகாப்புப்படைத் தலைவர் பிரம்மேஷ்வர் சிங் இந்த ஆண்டு ஜூன் மாதம் கொல்லப்பட்டார். அதன் விளைவாக பெரும் கலவரம் ஏற்பட்டது. வாகனங்கள் எரிக்கப்பட்டன. சாலைகள் மறிக்கப்பட்டன, போக்குவரத்து முடங்கியது. மதிப்பிடமுடியாத பொதுச் சொத்து சேதமாகியது.
காவல்துறைக்கு தர்மசங்கடம். கடுமையான நடவடிக்கை எடுத்தால் உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அதன் விளைவாக மேலும் வன்முறையைத் தூண்டக்கூடும். உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் மெத்தனப்போக்கு என்று குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடும். ஆனால், நிதானமான நடவடிக்கையைத்தான் பிகார் காவல்துறை எடுத்தது. காலப்போக்கில்தான் நிலைமையும் கட்டுக்குள் வந்தது. காவல்துறை எடுத்த நடவடிக்கைபற்றி விவரிக்கும்பொழுது, பிகார் டிஜிபி, கடுமையான நடவடிக்கையைத் தவிர்த்து, பார்த்து, கவனித்து நிதானமாகச் செயல்பட வேண்டும் என்று தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகக் கூறியுள்ளார்.
வன்முறை நிகழும்பொழுது, விஷமிகளைக் "கண்டவுடன் சுட' உத்தரவு பிறப்பபிக்கப்பட்டுள்ளது என்று ஊடகங்களில் செய்திவரும். ஆனால், அவ்வாறு ஒரு உத்தரவும் வன்முறையைக் கட்டுப்படுத்த பிகார் போலீஸ் தலைமை பிறப்பிக்கவில்லை. இதன் விளைவாக, கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியதாகப் போலீஸôர் மீதே குற்றம் சாட்டப்பட்டது.
மும்பையில் ஆகஸ்ட் 10 ஆம் நாள், அசாம் மாநில மதவாத வன்முறைச் சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேரணி நடத்தப்பட்டது. இந்தக் கண்டனக் கூட்டத்தில் வன்முறை வெடித்தது. இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். பத்திரிகையாளர்கள் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். அரசு ஊடக வண்டிகள் சேதப்படுத்தப்பட்டன. மும்பை போலீஸ் கடுமையாக உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்பு மற்றும் பொருள் சேதங்களைத் தடுத்திருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்தது. இத்தகைய சுணக்க அணுகுமுறை கலகக்காரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமையும், வரும் காலங்களில் கோரமான கலவரங்கள் நிகழ்வதைத் தடுக்க முடியாது என்ற வாதங்கள் வைக்கப்பட்டன.
இதன் எதிரொலியாக, "நேர்மையான அதிகாரி' என்று பாராட்டப்பட்ட காவல் ஆணையர் அரூப் பட்நாயக் மாற்றப்பட்டார். பதவி உயர்வு நிமித்தமாக மாற்றப்பட்டார் என்று அரசு விளக்கம் கொடுத்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியதுதான் காரணம் என்பது ஊரறிந்த உண்மை.
2011 ஆகஸ்ட் மாதம் லண்டன் மற்றும் பக்கத்து நகரங்களில் பெரும் கலவரம் வெடித்தது. அப்போது லண்டன் போலீஸார் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கத் தவறினர் என்று அரசே குற்றம் சாட்டியது. ஆனால், லண்டன் போலீஸ் ஆணையர், "எதிர் தாக்குதல் நடத்தக்கூடாது' என்ற முடிவில் தெளிவாக இருந்தார். கடும் நடவடிக்கையால் உயிரிழப்புக்கு வாய்ப்புண்டு, அதன் விளைவுகளைப் போலீஸார் சந்திக்க வேண்டும், பிரச்னை பூதாகாரமாக உருவெடுக்கும் என்ற லண்டன் போலீஸார் வாதத்திற்கும் ஆதரவு இருந்தது. பல கோடி டாலர் சொத்து பாழடைந்தது. கலவரக்காரர்கள் வெளிப்படையாக கொள்ளையில் ஈடுபட்டனர். அதையும் புகைப்படம் எடுத்து சமுதாய இணையதளத்தில் வெளியிட்டனர். காலம் தாழ்ந்து லண்டன் போலீஸôர் நடவடிக்கை எடுத்த பிறகுதான் கலவரம் ஒய்ந்தது.
பல சமயங்களில் பிரச்னைகளைப் பெரிதாக்க வெளியிலிருந்து தூண்டுவார்கள். மக்களைத் திசைதிருப்ப அறிக்கைகள் விடப்படும். போராட்டம் நடத்துபவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் முன்நிறுத்தி காவல்துறையைச் செயலிழக்கக் செய்வார்கள். சமீபத்தில் கூடங்குளம் போராட்டத்தில் ஒரு சிறுமி காவல் படையினர் முன் நின்று கொண்டிருந்த படம் வெளியானது. ஏதோ சடுகுடு விளையாடுவதுபோல் அந்த சிறுமி சிரித்துக் கொண்டிருக்கிறாள். காவலர்களும் விளையாட்டாகப் பார்க்கிறார்கள். சமயோசிதமாக, மிகக் கட்டுப்பாடுடனும் அதேசமயம் திறமையுடன் தமிழகக் காவல்துறை கூடங்குளம் பிரச்னையைக் கையாள்வதைப் பாராட்ட வேண்டும்.
மேலை நாடுகளில் கலவரங்கள் எதிர்கொள்ளும் அணுகுமறை வித்தியாசப்படும். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் எதிரிகள் அல்ல, நம் மக்கள்தான். ஆதலால் பொறுமையுடன் தற்காப்பு நடவடிக்கை மட்டும் எடுக்க வேண்டும். மனித உயிர் விலை மதிக்க முடியாதது. எந்த விதத்திலும் உயிர்ப்பலி தவிர்க்கப்பட வேண்டும். பொருள் சேதம் ஏற்பட்டாலும் அவை காப்பீடு செய்யப்பட்டிருக்கும். ஈடு கிடைத்துவிடும். பொருள்களைக் காப்பாற்ற வன்முறையைத் தூண்டும் நடவடிக்கை எடுக்கக் கூடாது. அசம்பாவிதங்களை விடியோ மூலம் பதிவு செய்து, குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் வருங்காலத்தில் கலவரங்களைத் தவிர்க்கலாம் என்பது மேலை நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளின் நிலைப்பாடு.
உடனடி கடும் நடவடிக்கை எடுத்து நிலைமையைச் சமாளிப்பதா, காலம் தாழ்ந்தாலும், சேதம் ஏற்பட்டாலும் நிதானமாகக் குற்ற வழக்குகள் பதிவு செய்து குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனைப் பெற்றுத்தருவதா அல்லது இரண்டு வழிகளையும் கலந்து செய்வதா? இது காவல் துறை உயர் அதிகாரிகளுக்குச் சவால்; எந்தவழி தெரிவு செய்தாலும் விமர்சனங்களிலிருந்து தப்ப முடியாது. எதற்கெடுத்தாலும் காவல்துறையைப் பழிப்பதற்கென்றே ஒரு சிலர் இருக்கிறார்கள். மக்கள் நலனைப்பற்றி அக்கறையில்லை. ஊர் இரண்டுபட்டால்தான் அவர்களுக்கு ஆதாயம்.
ஆனால், காவல்துறை எந்த முடிவு எடுத்தாலும் பொது அமைதி காப்பதே முதல் நோக்கம் என்ற அளவில் நேர்மையாகச் செயல்பட்டால் மக்கள் துணை இருப்பார்கள். மக்கள் துணையே மகேசன் துணை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...