உதாரணத்துக்கு, திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் வழியில் கோவில்பட்டி, விருதுநகர் போன்ற முக்கிய நகரங்களைக்கூட அரசுப் பேருந்துகள் புறக்கணித்து புறவழிச்சாலை வழியாகச் செல்லும் நிலை உள்ளது. போக்குவரத்து என்பது வெறுமனே பயணம் என்பதுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. இந்தப் போக்குவரத்தை நம்பியே வியாபாரக் கடைகள், உணவகங்கள், சிறு தேநீர்க் கடைகள் என சமூகப் பொருளாதார வாழ்க்கை ஒரு சங்கிலித் தொடர்போல நீள்கிறது. ஊருக்குள் அமைந்துள்ள பேருந்து நிலையத்துக்கு வரும் மக்கள் கூட்டம், பேருந்துகள் வராமல் போனால் அப்படியே புறவழிச்சாலையை நோக்கிச் செல்லும். இதனால், இந்த மக்கள் கூட்டத்தை நம்பி வியாபாரம் நடத்திவரும் எண்ணற்றோரின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது.