நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

பெண்ணுக்கு நீதியா? அநீதியா?

முக்கியமான நிகழ்வுகளைக் குறிக்கும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பல நாள்கள், அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகின்றன. பிரச்னைகளும் நமது அஞ்ஞானங்களும் அவ்வளவு இருக்கின்றன, விழிப்புணர்வுக்கு 365 நாள்கள் போதாது.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:50 pm

ஆர். நட​ராஜ்

முக்கியமான நிகழ்வுகளைக் குறிக்கும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பல நாள்கள், அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகின்றன. பிரச்னைகளும் நமது அஞ்ஞானங்களும் அவ்வளவு இருக்கின்றன, விழிப்புணர்வுக்கு 365 நாள்கள் போதாது.

அமெரிக்கக் கண்டத்தின் கரீபியத் தீவுகளில் ஒன்று டாமினிக்கன் குடியரசு. ஸ்பெயின் நாட்டு ஆளுகையில் பல ஆண்டுகள் இருந்து சுதந்திரம் பெற்றது. 1930-ஆம் ஆண்டு தேசிய ராணுவத் தளபதி ட்ரூஜில்லோ மோலீனா வன்முறை ததும்பிய தேர்தலுக்குப் பின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல மக்கள்நலத் திட்டங்களை அவர் நடைமுறைப்படுத்தியது ஒரு புறம் இருந்தாலும் ஊழல் பெருக்கெடுத்தது. தன்னையும் தன் குடும்பத்தினரையும் முதன்மைப்படுத்தி, எதிர்ப்பாளர்களை அடக்கி, கொடுங்கோல் ஆட்சி தொடர்ந்தது.

பக்கத்து நாடு ஹைதியிலிருந்து குடியேறிய மக்கள் துன்புறுத்தப்பட்டனர். இனவெறியில் ஆயிரக்கணக்கான ஹைதி மக்கள் கொல்லப்பட்டனர். மிராபல் சகோதரிகள் பாட்ரீஷியா, மினர்வா, அன்டோனியா ஆகியோர் கொடுங்கோலன் ஆட்சியை எதிர்த்து, மக்களைத் திரட்டி ஆதரவு பெற்றனர்.

சகோதரிகளில் மினர்வா வக்கீல், அழகானவள். ட்ரூஜில்லோவிற்கு அவள் மீது ஒரு கண். ஆனால் மினர்வா அவன் இச்சைக்கு உட்படவில்லை. மாறாக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரமாக்கினாள்.

1960-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் நாள் கொடுங்கோலன் ட்ரூஜில்லோ மூன்று சகோதரிகளையும் தனது ரகசியப் படை மூலம் கொன்றான். மக்களுக்காகப் போராடிய மூன்று சகோதரிகளுக்கும் பல நினைவிடங்கள் எழுப்பப்பட்டன. கொடுங்கோலன் ஆட்சிக்கு எதிர்ப்பு பெருகியது. ஒரு நிகழ்வில் ட்ரூஜிலோ கொல்லப்பட்டு கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தது.

ஐக்கிய நாடுகள் சபை மூன்று சகோதரிகளின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் நவம்பர் 25-ஆம் நாள் பெண்கள் வன்முறை ஒழிப்பு தினமாக அறிவித்தது. 16 நாள்கள் - டிசம்பர் 10 உலக மனித உரிமை நாள் வரை - பெண்கள் பாதுகாப்பு பற்றியும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கு சமுதாயத்தில் நல் நடத்தைகள் உருவாவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபை பிரகடனத்தின் பிரதான குறிக்கோள்.

""சமுதாயத்துக்கு ஊறுவிளைவிக்கும் வரதட்சணையை நான் வாங்கவும் மாட்டேன் கொடுக்கவும் மாட்டேன் என உறுதி ஏற்கிறேன்''என்பது பெண்கள் மீது வன்முறை ஒழிப்பு தினத்தை ஒட்டி எல்லா அரசு அலுவலகங்களிலும் எடுக்கும் உறுதி மொழியாகும். ஆனால் வாங்கிய "டெüரி' திருப்பிக் கொடுக்கப்படுமா அல்லது "டெüரி' பிச்சை எடுப்பவர்களின் பேராசையும் கோரிக்கைகளும்தான் ஒழியுமா? கல்யாண சம்பிரதாயங்களில் செலவினங்கள் குறைந்தபாடில்லை.

கடந்த இரண்டு வாரங்களில்தான் நெஞ்சை உருக்கும் எவ்வளவு நிகழ்வுகள்? ஹரியாணா மாநிலம், ஹிசார் குரு ஜம்வேஸ்வரர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி இருபது வயது கீதிகா மேதா; அதே கல்லூரியில் படிக்கும் பிரதீப்பிற்கு அவள் மீது ஒரு தலைக்காதல். கீதிகா காதலிக்க மறுத்தாள். அவளோடு வாக்குவாதம் செய்த பிரதீப், க்ஷண நேரத்தில் சரமாரியாக அவளை வெட்டி வீழ்த்தினான். இப்போது அவன் போலீஸ் பிடியில்.

பாண்டிச்சேரி அருகில் ஒரு கட்டடத் தொழிலாளிக்கு பக்கத்துவீட்டு மருத்துவ மாணவி மீது காதல். அவள் எப்படி சம்மதிப்பாள்? அவன் அவளைத் துரத்தினான். அவள் புறக்கணித்தாள். விளைவு, ஆத்திரத்தில் அவள் மீது திராவகம் ஊற்றி முகத்தை விகாரமாக்கினான். அவள் கண்கள் போயிற்று. இவையெல்லாம் சினிமாவில் வரும் சாதாரணக் காட்சிகள். அந்த நிழல் நிஜமாகிக் கொண்டிருக்கிறது. இதுமாதிரி எவ்வளவோ நிகழ்வுகள் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் நக்ஸலைட் தீவிரவாதிகள் பிடியில் இருந்தது. ஜாதிப் பிரிவினை - மேலோர் கீழோர் என்ற பாகுபாடு, நிலச்சுவான்தாரர்களின் ஆதிக்கம், விவசாயக் கடன் தொல்லை என்ற பல அவல நிலவரங்கள் நக்ஸலைட்டுகள் தீவிரவாதக் கெள்கைகளைப் பரப்பி, மக்களை வன்முறையில் தூண்டுவதற்கு ஆதாய போர்க்களம் உருவாக பாதையிட்டது. துணிகரமான, காவல்துறை நடவடிக்கை மூலம் அன்றைய சீரிய அரசுத்தலைமை தீவிரவாதத்தை முழுமையாகக் களைய உதவியது. தாழ்ந்தவர்கள் எவருமில்லை; தாழ்த்தப்பட்டவர்கள் சமுதாயத்தில் தாழ்ந்தவர்களாகவே இருப்பதில்தான் பலருக்கு ஆதாயம். ஜாதிப் பிரிவினை இன்றும் ஒழிந்தபாடில்லை என்பது தர்மபுரி நாயக்கன் கொட்டாய் கிராமம், நத்தம் காலனி சம்பவங்களிலிருந்து மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலவரத்துக்குக் காரணம் ஒரு தலைக்காதல் இல்லை, ஒருமித்த காதல்; ஆனால் அதிலும் பிரச்னை. இதில் காதல் வலையில் விழுந்த பெண்ணால் ஜாதிச் சண்டை என்று சித்தரிக்கப்படுகிறது. முடிவில் பெண்களுக்கு மட்டுமல்ல, அந்தப்பகுதி மக்களுக்கே பாதிப்பு. காவல்துறை தலையிட்டு 11 வழக்குகள் பதிவு செய்து, இருபிரிவினர் தரப்பிலும் சேர்த்து 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

பலருடைய ஆழ் மனதில் வேற்றுமை, வன்மம், வெறி இன்னும் முழுமையாக அழியவில்லை. மக்கள் ஒன்றுபட்டாலும் பிரிவினை சக்திகள் இந்த தீக்கொழுந்தை அழியவிடமாட்டார்கள். கிராம மக்கள் நல்லவர்கள். எந்தப் பிரிவைச் சேர்ந்திருந்தாலும் வறுமையில் ஒற்றுமை, ஆண்கள் குடியில் மிதப்பது, பெண்களை அடிமைப்படுத்துவது - கொடுமை இழைப்பது ஆகியவை இல்லை. ஆனால் ஜாதிவெறி பிடித்தால் ஒற்றுமையாக வன்முறையில் இறங்கிவிடுகிறார்கள். வன்முறையைத் தூண்டுவது எளிது. நல்வழிப்படுத்துவது கடினம். மக்களுக்குத் தானாக தெளிவு பிறக்கவேண்டும், வன்முறையைத் தூண்டுபவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.

ஹரியாணா, மேற்கு உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் "காப்' என்ற கிராமப் பஞ்சாயத்தார் பொதுப் பிரச்னைகளில் தலையிட்டு விசாரித்து தீர்ப்பு வழங்கும் முறை இன்றும் தொடர்கிறது.

""காதல் காதல் காதல், காதல் இல்லையேல் சாதல்'' என்று காதலிப்பவர்கள் முடிவு செய்வதற்குள் "காப்' பஞ்சாயத்துத் தீர்ப்பு வழங்கி காதலர்களைச் சாகடித்து விடுவார்கள். இது கெüரவப் பிரச்னையாம். உயர்ந்த ஜாதி ஆண் வேண்டுமானலும் கீழ் ஜாதிப் பெண்ணை மணக்கலாம், ஆனால் மேல் ஜாதிப் பெண் கீழ் ஜாதி ஆணை மணக்க முடியாது. காதலர்கள் சிதையில், கொலை செய்த "காப்' முறை காப்பாளர்கள் சிறையில். கட்டப் பஞ்சாயத்தோ தொடர்கிறது. இதில் யாருக்கு லாபம்? எந்த விதத்தில் கெüரவத்தைக் காப்பாற்றினார்கள்.

ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களில் ஜாட், குஜ்ஜர்கள் வசிக்கும் சில கிராமங்களில் இன்னும் உடன்கட்டை ஏறும் வன்முறை நிகழ்த்தப்படுகிறது. கணவன் சிதையோடு மனைவியும் உயிரோடு எரிக்கப்படுகிறாள். அந்தப் பெண்ணைக் கடவுள் வடிவமாக பூஜிக்கிறார்கள். வழக்கம்போல காவல்துறை வழக்குப் பதியப்படுகிறது. ஆனால் கொடுமையான பழக்கத்திற்கு முற்றுப்புள்ளியில்லை. பெண் வன்முறை தொடர்கிறது.

வட மாநிலங்கள் அதுவும் தலைநகர் தில்லியில் கற்பழிப்புச் சம்பவங்கள், வெளிநாட்டுப் பெண்கள் தாக்கப்படுவது பற்றி ஊடகங்களில் செய்தி குறைவில்லாமல் வருகிறது. 2011-ஆம் வருடம் நாட்டில் 24,206 கற்பழிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் 92 சதவிகிதம் தெரிந்த குற்றவாளிகள்.

போன வருடம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எண்ணிக்கை 2.28 லட்சம். சராசரி வருடத்திற்கு 5 சதவிகிதம் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் வழக்குகள் 6,708 பதிவாகியுள்ளன.

கிராமங்களைவிட நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம். 2011-ஆம் வருடம் 33,789 வழக்குகள் 53 நகரங்களில் பதியப்பட்டன. தில்லிதான் பெண்களுக்கு பாதுகாப்பில்லா நகரம் என்று சொல்லலாம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நிகழும் நகரம் தில்லி. போன வருடம் மட்டும் 4,489 வழக்குகள் பதிவாயின. மனிதர்களை வைத்து இழிவாணிகத் தொடர்பில் 3,517 வழக்குகளில் 69 சதவிகிதம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகக் கடத்தப்படுகின்றனர்; இதில் சிறுமிகள் 25 சதவிகிதம்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண் கடத்தல் (7,525 வழக்குகள்), வரதட்சிணைக் கொடுமைச் சாவுகள் (2,322) மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமாக நிகழ்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது வளர்ந்து கொண்டே போகிறது. பதிவாகிய வழக்குகளைத்தவிர பதிவாகாத வன்முறைகள் அதிகம்.

குடித்துவிட்டு ஆண்கள் வீட்டில் சண்டையிடுவது, மனைவியை அடித்துத் துன்புறுத்துவது சகஜமாக நடக்கிறது. வயிற்றுப்பிழைப்பிற்காக வீடுகளுக்குச் சென்று வேலை செய்யும் பெண்கள் மதுவில் மயங்கிய கணவன்மார்களுக்குப் பயந்து வீட்டுக்குப் போவதற்கே அஞ்சும் நிலையும் உள்ளது; மனம் உடைந்த பெண்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஹரியாணா மாநிலத்தில் கற்பழிப்புக் குற்றங்கள் அதிகரித்து வருவதை காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில், திருமண வயதை எட்டாத சிறுமிகள் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

"காப்' பஞ்சாயத்துகள், பெண்கள் காதல் வலையில் விழுவதைத் தடுப்பதற்காக சிறு வயதிலேயே திருமணத்துக்கு உள்படுத்துகின்றனர். காவல்துறைக்குத் தெரியவந்தவுடன் "கற்பழிப்பு வழக்கு' பதிவு செய்யப்படுகிறது.

இந்தியாவில் கற்பழிப்புச் சம்பவங்கள் எண்ணிக்கை 1971-இல் 2,482 ஆக இருந்தது 2011-இல் 24,206 ஆக உயர்ந்துள்ளது. நாற்பது ஆண்டுகளில் சுமார் 873 சதவிகிதம் அதிகரிப்பு என்பது குற்றவியல் ஆளுமைக்கு தலைக்குனிவு.

வழக்குப்பதிவு செய்வதில் தாமதம், புலனாய்வில் அலட்சியம், முதல் கைதுக்குப் பிறகு வழக்கைக் கிடப்பில் போடுதல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் போன்ற பல குறைகள் திருத்தப்படாமல் தொடர்கின்றன.

வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்ற பிறகு உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. தேசிய குற்றவியல் ஆவண அறிக்கைப்படி 2010-இல் நீதிமன்றத்தில் தேக்கத்தில் உள்ள வழக்குகள் 84.9 சதவிகிதம். 15.1 சதவிகித முடிவுற்ற வழக்குகளும் பல வருடங்களுக்குமுன் பதிவான வழக்குகள்.

குற்றங்களை ஒடுக்க சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும், தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

குற்றங்கள் கடுமையாக்கப்படுவதால் மட்டும் வன்முறை குறையாது. ஒரு குற்றம் புரிந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் தண்டனை கிடைக்கும் என்ற நிலை வந்தால்தான் குற்ற நிகழ்வுகள் ஓரளவு குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

குற்றவியல் நடைமுறைகளை பலப்படுத்தி, வன்முறையாளர்களுக்குத் தெளிவான அபாயச்சங்கு ஒலிக்கச் செய்ய வேண்டும். பேசிப்பேசி முடிவில்லா தர்க்கத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்து செயலாக்கத்தை பலப்படுத்துவதே பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பில் நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.