நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இரண்டாவது சுதந்திரப் போராட்டம்

 இந்தியாவின் 66-வது சுதந்திர தினம் நாடெங்கும் கொண்டாடப்பட்டுள்ளது. தில்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங்கும், மாநிலத் தலைநகர்களில் முதலமைச்சர்களும் தேசியக் கொடியேற்றி

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:38 pm

உதயை மு. வீரையன்

 இந்தியாவின் 66-வது சுதந்திர தினம் நாடெங்கும் கொண்டாடப்பட்டுள்ளது. தில்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங்கும், மாநிலத் தலைநகர்களில் முதலமைச்சர்களும் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்துள்ளனர்.

 நாட்டின் சுதந்திரதின விழாவை ஒட்டி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலிருந்து வறுமை நோய், பசிக்கொடுமையை அகற்றுவதற்கான இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

 ""ஊழலுக்கு எதிராகக் கோபம் கொள்வதும், போராட்டம் நடத்துவதும் நியாயமானதுதான், ஆனால் இந்தப் போராட்டங்களின்போது சில சமயங்களில் மக்கள் தங்கள் பொறுமையை இழந்து விடுகின்றனர், அதற்காக ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது, போராட்டம் என்ற தொற்றுநோய் நாட்டைக் குழப்பத்துக்கே இட்டுச் செல்லும்'' என்றும் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

 "சுதந்திரம்' அடைந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா? என்பதைத் திரும்பிப்பார்க்கும் நேரம் இதுதான். ஒவ்வொரு தேர்தலுக்கும் அரசியல் கட்சிகள் ஆயிரம் உறுதிமொழிகள் கூறி வாக்குகளை வாங்கி ஆட்சியைப் பிடிக்கின்றன. அதன்பிறகு சொன்னதெல்லாம் மறந்துபோய் விடுகின்றன.

 இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர்களுக்கு ஓர் இலக்கு இருந்தது. உடல், பொருள், ஆவியையே அர்ப்பணிக்கும் தியாகம் இருந்தது. ஆங்கிலேயர்கள் வெளியேறிவிட்டால் இந்தியா எப்படியாவது முன்னேறிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது.

 1947 ஆகஸ்ட் 14 அன்று இரவு அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடியது. நள்ளிரவுக்குச் சற்று முன்பு அரசியல் நிர்ணய சபையின் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத் இந்தியக் கூட்டாட்சி என்ற புதிய அரசின் தோற்றத்தை அறிவித்தார். நேரு பேசினார்:

 ""நெடுங்காலத்துக்கு முன்பு நாம் விதியோடு ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டோம். அன்று செய்த உறுதியை நிறைவேற்றும் காலம் இப்பொழுது வந்துவிட்டது. அதை மொத்தமாகவோ அல்லது முழு அளவிலோ இல்லாவிட்டாலும் கணிசமான அளவில் நிறைவேற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது.

 நள்ளிரவு 12 மணி ஒலிக்கும்பொழுது, உலகம் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்பொழுது இந்தியா புதிய வாழ்க்கையிலும், சுதந்திரத்திலும் கண்விழிக்கும். இந்தப் பெருமிதமான நேரத்தில் இந்தியாவுக்கும் - இந்திய மக்களுக்கும் இன்னும் விரிந்த அளவில் மனித குலத்துக்கும் - சேவை செய்வோம் என்று அர்ப்பணித்துக் கொள்கின்ற உறுதிமொழியைச் செய்வது பொருத்தமானதே...'' என்றார்.

 விடுதலை பெற்ற நாட்டில் நேருவின் உறுதிமொழிகள் காப்பாற்றப்பட்டனவா? நேருவின் குடும்பம்தான் இன்னும் "காங்கிரஸ்' என்ற பெயரில் ஆட்சியில் இருக்கிறது; எனினும் சேவை என்ற பெயரில் அர்ப்பணிப்பு உணர்வு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அந்த உணர்வு வளர்ந்திருக்குமானால் லஞ்சமும், ஊழலும் நாட்டில் தலைவிரித்தாடுமா? வறுமையும், நோயும் போட்டி போடுமா?

 ஏழைகளின் வாழ்க்கைத் தரம் வறுமைக்கோட்டுக்குக் கீழே போய்க்கொண்டே இருக்கிறது. ஏய்ப்பவர்களின் பணம் அயல்நாட்டு வங்கிகளில் "கறுப்புப் பணமாக'ப் பெருகிக் கொண்டே போகிறது. இதைத் தடுத்திட அரசாங்கம் முன்வராதபோது, ஆத்திரம்கொண்ட மக்களின் அடுத்த நடவடிக்கை என்ன?

 ""ஊழலுக்கு எதிராகக் கோபம் கொள்வதும், போராட்டம் நடத்துவதும் நியாயம்தான்'' என்று கூறும் குடியரசுத் தலைவர், போராட்டம் என்ற தொற்றுநோய் நாட்டைக் குழப்பத்துக்கே இட்டுச் செல்லும் என்று கூறுவது சரியாகுமா? நோய் வந்தால் மருத்துவம் செய்ய வேண்டியது அவசியம்தானே! அறுவை சிகிச்சை தேவைப்பட்டாலும் அனுமதிப்பதுதானே அறிவுடைமை!

 நாட்டில் தொற்றுநோயாக அல்ல, புற்றுநோயாகவே ஊழல் ஊடுருவியிருப்பதை யாரும் மறுக்கவில்லை. இந்தப் பூனைக்கு யார் மணிகட்டுவது? யாராவது மணி கட்ட முன்வந்தால் அவர்களை அச்சுறுத்துவதும், அவமானப்படுத்துவதும், அடக்குமுறையை ஏவி விடுவதும் சுதந்திரம்பெற்ற நாட்டுக்கு அழகாகுமா?

 இருநூறு ஆண்டு காலம் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள், தொடக்க காலத்தில் வாணிகம் செய்வதற்காகவே வந்தவர்கள்தாம். அவர்களை விரட்டுவதற்காக நம் தலைவர்கள் பட்ட பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல. "அவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேற வேண்டும்' என்று கூறியபோது, மூட்டை முடிச்சுகள் நம்முடையவை என்றும், அவர்கள் வெறுங்கையோடுதான் வெளியேற வேண்டும் என்றும் முழங்கினர்.

 இப்போது இந்தியாவின் நிலைமை என்ன? அன்னிய நாட்டு வணிக நிறுவனங்களை அறைகூவி அழைக்கின்றனர். சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டைக்கொண்டு வருவதற்குப் பறக்கின்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமா, நமது வெளியுறவுக் கொள்கையில் தலையிடும் அளவுக்கு இந்திய அரசு எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுக்கிறது.

 ""தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வெற்றியை நோக்கி வேகமாக முன்னேற வேண்டும். பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வந்த நமது நாடு, இப்போது பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்ட முடியாத நிலையில் உள்ளது. பல்வேறு விஷயங்களில் அரசியல் கருத்தொற்றுமை ஏற்படாததே இதற்கு முக்கியக் காரணம்...'' என்று பிரதமர் மன்மோகன் சிங் சுதந்திர நாள் உரையில் கூறியுள்ளார்.

 விடுதலைபெற்ற நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டது. நமது அரசமைப்புச் சட்டமும் குடிமக்களுக்குப் பல உரிமைகளை அடிப்படை உரிமைகளாக அறிவித்துள்ளது. இந்த அடிப்படை உரிமைகளையே நசுக்கும்விதமாக ஆளும் அரசாங்கம் சட்டத்தை நீட்டும்போது அரசியல் கட்சிகளின் ஆதரவு எப்படிக் கிடைக்கும்? இந்தியாவில் உள்ள அனைத்து வணிகர்களும் எதிர்க்கிற சில்லறை வணிகத்தைக் "கொண்டு வந்தே தீருவோம்' என்று அடம்பிடிக்கும் அரசோடு கருத்தொற்றுமை எப்படி ஏற்படும்?

 விலைவாசி விண்ணைத் தொடுகிறது; வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது. வளர்ந்துவரும் இளைஞர்களுக்கு எல்லாக் கதவுகளும் திறக்கப்பட வேண்டும். கல்வியும், சுகாதாரமும் இலவசமாக அளிக்கப்பட வேண்டும். தொழில்வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு விவசாயத்தைப் புறந்தள்ளும் போக்கைக் கைவிட வேண்டும். இவற்றையெல்லாம் செயல்படுத்தாமல் கவலையளிப்பதாகக் கூறுவது ஆட்சியாளர்களின் இயலாமையைத்தானே காட்டுகிறது!

 சுதந்திர தினத்தைப் பற்றிப் பேசுகிறபோது, நாட்டின் நான்கு தூண்களில் ஒன்றான நீதித்துறையின் தனிப்பட்ட சுதந்திரத்தைச் சீர்குலைக்கும்படியாக அரசு செயல்படுவதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா தெரிவித்துள்ளார். நீதிபதிகளின் பொறுப்புகளை வலியுறுத்தும் வகையில் அரசு சட்டம் இயற்றலாம் என்றும், அதைக் கண்டு அச்சம் இல்லை என்றும், ஆனால் அது நீதித்துறையின் சுதந்திரத்தை ஒடுக்கும்விதமாக இருத்தல் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

 இன்றைக்கு அரசாங்கம் என்பதே மக்களுக்காக மக்களால் ஏற்படுத்தப்பட்டது என்ற நிலை மாறிவிட்டது. அரசு என்பது ஆளும் கட்சியினருக்கான அமைப்பாக மாற்றப்பட்டுவிட்டது. இந்நிலையில், நாடும், மக்களும் நீதித்துறையை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 நீதித்துறைக்கும் அரசியல் நெருக்கடிகள் ஏற்படுத்தி அவர்களது சுதந்திரமும் பறிக்கப்படுமானால் அது ஜனநாயகத்துக்கே பெரும் அச்சுறுத்தலாகும்.

 சில நேரங்களில் நாடாளுமன்றம் மற்றும் அரசுத்துறைகளுக்கு எதிராகத் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்துவதற்கு நீதித்துறை தொடர்பான சட்டம் இயற்றுவதற்கு அரசாங்கம் துடிக்கிறது. "நீதித்துறை பொறுப்புணர்வு மசோதா' சட்டமாக்கப்படுவதற்கு முன்பாக அரசு ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்.

 ஆங்கிலேயரை அகற்றிவிட்டால் மட்டும் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ஆகிவிடாது; நாட்டை முன்னேறவிடாமல் அடிமைப்படுத்தும் அனைத்து சமூக, பொருளாதாரத் தடைகளிலிருந்தும் தேசம் விடுதலை பெறவேண்டும் என்றே விடுதலைப் போராட்ட வீரர்கள் கருதினர்; காந்தியாரின் கருத்தும் அதுவாகவே இருந்தது.

 ""ஆங்கிலேயர் கட்டிலிருந்து மாத்திரம் இந்தியாவை விடுதலை செய்வது என்பதில் எனக்குச் சிரத்தை இல்லை. எல்லாவிதமான கட்டிலிருந்தும் இந்தியாவை விடுவித்தாக வேண்டும் என்பதிலேயே நான் உறுதி கொண்டிருக்கிறேன். ஒரு கொடுமைக்குப் பதிலாக இன்னொரு கொடுமையை மாற்றிக்கொள்ளும் விருப்பம் எனக்கு இல்லை...'' என்று காந்தியடிகள் அன்றே கூறியுள்ளார்.

 சமூக, பொருளாதார சமத்துவம் ஏற்படாதவரை மக்களிடம் சுதந்திரம் சென்று சேரப் போவதில்லை. சாதிப் பாகுபாடும், தீண்டாமையும், பெண்ணடிமைத்தனமும் விடுதலையடைந்ததற்கான அடையாளங்களாக ஏற்க முடியாது. "சிலர் வாழவும், பலர் வாடவும்' என்ற சமுதாய அமைப்பு இன்னும் தொடருமானால் விடுதலைக் காற்று அங்கே வீசவில்லை என்பதுதானே பொருள். நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கு மட்டுமே பாயுமானால், முன்னோர்களின் தியாகங்கள் வீணாகிவிட்டன என்றுதானே கொள்ள வேண்டும்.

 மக்களால் சுதந்திரமாக நடமாட முடிகிறது. ஆனால், நமது அரசியல் தலைவர்கள் சுதந்திரமாக நாட்டில் நடமாட முடியவில்லை. காவல்துறையும், அதிரடிப்படையும் தேவைப்படுகிறது. இதனால் மக்களை அன்றாடம் சந்திக்க வேண்டிய அரசியல் தலைவர்கள், மக்களால் சந்திக்க முடியாத நிலையில் இருக்கின்றனர். சுதந்திரத்துக்கு முன்னர் தலைவர்கள் மக்களோடு மக்களாக இருந்தனர். சுதந்திரம் பெற்ற பிறகு மக்களைவிட்டு அன்னியப்பட்டு நிற்கின்றனர்.

 நமது சுதந்திரப் போராட்டத்தின்போது 30 கோடியாக இருந்த நாட்டின் மக்கள்தொகை இப்போது நான்கு மடங்காகி விட்டது. அதுபோல் பிரச்னைகளும் பல மடங்காகிவிட்டன. இதிலிருந்து விடுதலை பெறுவதே உண்மையான விடுதலையாகும். முதல் சுதந்திரப் போராட்டம் இந்தியாவை விடுதலை செய்தது; இரண்டாவது சுதந்திரப் போராட்டம் இந்தியர்களை விடுதலை செய்வதாக இருக்க வேண்டும்.

 ""ஊழலுக்கு எதிராகக் கோபம் கொள்வதும், போராட்டம்

 நடத்துவதும் நியாயம்தான்'' என்று கூறும் குடியரசுத் தலைவர், போராட்டம் என்ற தொற்றுநோய் நாட்டைக் குழப்பத்துக்கே இட்டுச் செல்லும் என்று கூறுவது சரியாகுமா?''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.