நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

கதவில்லா சிறைகள்

சிறைச்சாலைகள் சட்டத்தின் பிடியில் சிக்கியவர்களை நல்வழிப்படுத்தும் இடமா அல்லது தண்டனை பெற்றவர்களைத் துன்புறுத்த வேண்டிய நரகமா என்ற சர்ச்சை அவ்வப்பொழுது சமுதாய நிலைக்கு ஏற்றாற்போல் மாறிக்கொண்டு வருவதைக்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:20 pm

ஆர். நட​ராஜ்

சிறைச்சாலைகள் சட்டத்தின் பிடியில் சிக்கியவர்களை நல்வழிப்படுத்தும் இடமா அல்லது தண்டனை பெற்றவர்களைத் துன்புறுத்த வேண்டிய நரகமா என்ற சர்ச்சை அவ்வப்பொழுது சமுதாய நிலைக்கு ஏற்றாற்போல் மாறிக்கொண்டு வருவதைக் காண்கிறோம்.

 சாதாரண நாள்களில் சிறைச்சாலை எடுத்துவரும் சீர்திருத்த நடவடிக்கைகள் மக்களின்  வரவேற்பைப் பெறுகின்றன. அதேசமயம் கொடுங்குற்றங்கள் பெருகும்பொழுது புரிந்த குற்றத்துக்கு ஏற்ப அவர்கள் தண்டனை பெற்றே தீர வேண்டும் என்பது சராசரி மக்களின் எண்ணம். அதை மறுக்க முடியாது.

 சமுதாய சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு சிறை நிர்வாகம் தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள முடியாது. அத்தகைய அணுகுமுறை சரியானதுமல்ல. சிறைச்சாலைகளின் தலையாய பணி நீதிமன்றம் மூலம் சிறையிலிடப்படுபவர்களைப் பாதுகாப்பாக வைத்து சிறைத்தண்டனை  முடிந்த பிறகு விடுதலை செய்தல். சிறைத்தண்டனை அனுபவிக்கும்பொழுது அவர்களது அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சுதந்திரம், கண்ணியம், சமத்துவம், உயிருக்குப் பாதுகாப்பு ஆகியவை அடிப்படை உரிமைகளாகக் கருதப்படுகின்றன. சட்டத்தின் பிடியில் சிக்கியதால் அவரது சுதந்திரம் நீதிமன்ற உத்தரவுப்படி கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், மற்ற உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது சிறைப் பணியாளர்களின் பொறுப்பு மட்டுமல்ல, வரையறுக்கப்பட்ட கடமையாகும்.

 உணவு, வாழ்வாதாரம், சுகாதாரம் போன்ற முக்கிய உரிமைப் பிரச்னைகளோடு காவலில் பாதுகாப்பும் முக்கியமாகப் பேண வேண்டிய உரிமை என்று தேசிய உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு மேலோங்கிய இத்தருணத்தில் சிறைவாசிகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். மக்களிடையே சிறைவாசிகளை நல்வழிப்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு பரவச் செய்து சமுதாயத்தின் ஒத்துழைப்பு பெறுவதுதான் ஆரோக்கியமான அணுகுமுறை.

 சிறையிலிடப்படுபவர்களைக் கடுமையான வேலையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நிலை  சிறை நிர்வாகத்தின் ஆரம்பகாலத்தில் இருந்தது.  அவர்கள் சாலை செப்பனிடுதல், சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளைச் சரி செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 1836-38-ல் அமைக்கப்பட்ட அகில இந்திய சிறை நிர்வாகக் கமிட்டி இவ்வாறு கடும் பணிமுறையை ரத்து செய்ய வேண்டும் என்ற பரிந்துரையின் அடிப்படையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. ஆயினும், 1877-ம் ஆண்டு நடைபெற்ற சிறை நிர்வாகக் கலந்தாய்வுக் கூட்டத்தில் கைதிகளைப் பொதுப்பணியில் ஈடுபடுத்தும் திட்டம் மீண்டும் விவாதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 1919-1920-ல் மீண்டும்கூடிய சிறை நிர்வாகக் கமிட்டி சிறைவாசிகள் நிலையையும் அவர்கள் செய்யக்கூடிய பணியையும் ஆராய்ந்து விவசாயம், தோட்ட வேலை சம்பந்தப்பட்ட பணிகள் அவர்களுக்கு உகந்த பணி என்றும் இவ்வாறு திறந்தவெளிப் பணிகளில் அவர்களது மனநிலை சீராகும் என்றும்  பரிந்துரை வழங்கியது. ஆனால், நடைமுறைச் சிக்கல்களால் இவற்றை அமல்படுத்த முடியவில்லை.

 சுதந்திர இந்தியாவில் தலைவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் சிறையிடப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சிறை சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1950-51-ல் ஓய்வுபெற்ற நீதிபதி கே.எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் தலைமையில் சீர்திருத்தக்குழு தமிழ்நாடு, கேரளம் சிறைகளைப் பார்வையிட்டு சிறைச்சாலைகள் சிறைவாசிகளைச் சீர்திருத்தவே அன்றி பழிவாங்குவதற்கு அல்ல என்பதன் அடிப்படையில் பல பரிந்துரைகளை அளித்தது.

 சிறைச்சாலைகள் சமுதாயத்தின் மருத்துவமனைகள் என்றார் அண்ணல் காந்தியடிகள். இந்தியாவில் பல மாநிலங்களில் சிறை நிர்வாக சீர்திருத்த நிபுணர் என்று முத்திரை பதித்த டபிள்யூ. ஜி. ரெக்ஸின் என்ற அமெரிக்கர் தலைமையில் 1950-ம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு இந்தியச் சிறைகளைப் பார்வையிட்டு அளித்த அறிவுரைகளைத் தொடர்ந்து பல மாநிலங்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில் முக்கியமான பரிந்துரைகள் சிறை அலுவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி, விடுதலைக்குப்பின் புனர்வாழ்வு, அவர்களின் நன்னடத்தை கவனிப்பு, சமுதாயத்தோடு இணைவதற்கான உதவி, சிறைகளில் மன அமைதிக்கான பயிற்சி என்று பல முற்போக்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.  

 1980-ம் ஆண்டு நீதியரசர் ஏ.எஸ். முல்லா தலைமையில் அமைக்கப்பட்ட சிறை சீர்திருத்தக்குழு சிறைகள் நவீனமயமாக்கல் திட்டத்தை அளித்தது. இதையேதான் 1977-ம் ஆண்டு நீதிபதி இஸ்மாயில் குழு அவசரநிலைப் பிரகடனத்தின்போது சென்னை மத்திய சிறையில் நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரணை செய்து சிறைகளை நவீனப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. ஓய்வுபெற்ற உயர் போலீஸ் அதிகாரி எஸ்.எம். டயஸ், பேராசிரியர் வெங்கோபராவ் ஆகியோரை அங்கத்தினர்களாகக் கொண்டு பாட்னா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி நரசிம்மன் தலைமையில் 1978-79-ல் அமைக்கப்பட்ட தமிழ்நாடு சிறைகள் சீர்திருத்தக்குழு அளித்த பரிந்துரைகள் சிறை சீர்திருத்த நடவடிக்கைகளின் மைல்கல் எனலாம்.

 இந்தக்குழு மிகச் சிறப்பாக ஆய்வு மேற்கொண்டு 178 பரிந்துரைகளை அளித்தது. அதில் முக்கியமான பரிந்துரை பல மாவட்டங்களில் திறந்தவெளி விவசாயக் காலனிகள் உருவாக்க வேண்டும் என்பதுதான். மருத்துவமனை வசதி, குறைகளை நிவர்த்தி செய்ய கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்தல் ஒருங்கிணைத்த சிறை நிர்வாகச் சட்டம் அமலாக்கம் என்ற பல முற்போக்குப் பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

 1785-ம் ஆண்டு ஜெமிமி பென்தாம் என்ற ஆங்கில சமூக சிந்தனையாளர் பான் அப்புகான் என்ற வட்ட வடிவமுள்ள சிறை கட்டட வடிவமைப்பைப் புனைந்தார். அது கதவுகளோ,  சுவர்களோ அதிகம் இல்லாது குறைந்த பணியாளர்களை வைத்து கண்காணிக்க உதவும். சிறையிலிருந்து தப்புவதை யாராவது பார்த்துவிடக்கூடும் என்ற அச்சமே தப்பிக்க முயல்வதைத் தடுக்கும் என்பது இந்த வடிவமைப்பின் உள்நோக்கம்.

 திறந்தவெளிச் சிறைகளில் கதவுகள் இல்லை காவல் காக்க காவலருக்கும் அவசியம் இல்லை.  இங்கு விவசாயப் பணி செய்யக்கூடிய சிறைவாசிகள் நன்னடத்தை அடிப்படையில் தெரிவு செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை குறைந்தபட்சம் கால்பாகம் அனுபவித்திருக்க வேண்டும். விடுதலையாவதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இருப்பவர்கள் திறந்தவெளிச் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். நன்னடத்தை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதால் சாதாரண சிறைகளில் இருப்பவர்கள் ஒழுக்கமாக விதிகள் மீறாமல் நடப்பதற்கு ஊக்கமளிக்கும்.

 இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்பட 1,276 சிறைகள் உள்ளன. இதில் மத்திய சிறைகள் 113. தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உள்பட 134 சிறை இல்லங்கள் உள்ளன.

அதிகமான சிறைகள் உள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் 153 சிறைகள். 13 மாநிலங்களில்தான் திறந்தவெளிச் சிறைகள் உள்ளன.  ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக 10 திறந்தவெளிச் சிறைகளும், மகாராஷ்டிரத்தில் மூன்றும், ஆந்திரம், குஜராத், கேரளம், தமிழ்நாட்டில் தலா 2 திறந்தவெளிச் சிறைகளும் உள்ளன.

 கோயமுத்தூர் சிங்காநல்லூரில் உள்ள திறந்தவெளிச் சிறை 30.72 ஏக்கர் பரப்பளவு கொண்டது. காய்கறிகள், பழங்கள், தானிய வகைகள் மூலம் ஆண்டுக்கு சராசரி | 8,85,360 ஈட்டப்படுகிறது. சேலத்துக்கு அருகில் இருக்கும் விவசாயத் தோட்டம் 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதிலும் பிரதானமாகக் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.

 சிவகங்கை மாவட்டம் புரசுருடைஉடைப்பு என்ற இடத்தில் திறந்தவெளிச் சிறை அமைப்பதற்கு 87.70 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  தஞ்சாவூர் நகர எல்லையில் திருமலைசமுத்திரம் என்ற இடத்தில் 33.06 ஏக்கர் நிலத்தில் விவசாயத் தோட்டம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் கடலூர் மத்திய சிறை வெளிப்புறத்தில் 51.03 ஏக்கர் சிறைத்துறைக்குச் சொந்தமான இடம் உள்ளது. இங்கும் திறந்தவெளிச் சிறை அமைக்க உரிய இடம். திருநெல்வேலி வாகைக்குளம் அருகில் திறந்தவெளிச் சிறை அமைக்க நிலம் தெரிவு செய்யத் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 மத்திய சிறை அமைந்துள்ள எல்லா முக்கிய நகரங்களிலும் ஏக்கர் கணக்கில் நிலம் உள்ளது.  நகரங்கள் வளர்ந்துவிட்ட நிலையில் பிரதான இடங்களில் அமைந்துள்ள சிறைத்துறையின் நிலங்கள் பல கோடி ரூபாய் மதிப்புப் பெறும்.

இந்த அரிய இடங்களைப் பாதுகாப்பாகப்  பேணிய சிறைப்பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். கோவை நகரம் மத்திய சிறை அமைந்துள்ள 45 ஏக்கர் இடம் செந்தமிழ் பூங்காவாக பராமரிக்கப்படவுள்ளது. கோவை நகரின் நுரையீரலாக மக்களுக்கு ஆரோக்கியத்தை நல்கும்.

 வறுமை, சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் இந்த இரண்டு முக்கியமான பிரச்னைகள்தான் குற்றநிகழ்வுகளுக்குக் காரணம்.

 நல்ல ஆரோக்கியமான உடற்பயிற்சியும், உள்ளத்தில் படிந்துள்ள கள்ளங் கபடங்களை அகற்றவல்ல மனஅமைதியைத் தரக்கூடிய வாழும் கலைப் பயிற்சியும் திருந்தி வாழ்வதற்கான நல்வழிப்பாதை. இயற்கைச் சூழ்நிலைதான் அதற்கு அரிய மருந்து.  கதவில்லா சுவரில்லா திறந்தவெளிச் சிறைதான் இந்த அரிய காயகல்பத்தை வழங்க வல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.