நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

இந்தியாவை இணைக்கும் காவல்

தேசியப் பாதுகாப்பு இரண்டு வகைப்படும். வெளிநாட்டுப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு. ராணுவமும் காவல்துறையும் தேசியப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  எது நமக்குப் பிரச்னைக்குரியதாக இர

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:56 pm

ஆர். நட​ராஜ்

தேசியப் பாதுகாப்பு இரண்டு வகைப்படும். வெளிநாட்டுப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு. ராணுவமும் காவல்துறையும் தேசியப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  எது நமக்குப் பிரச்னைக்குரியதாக இருக்கிறது, உள்நாட்டுப் பாதுகாப்பா அல்லது எல்லைப்  பாதுகாப்பா என்று ஆராய்ந்தால் உள்நாட்டுப் பாதுகாப்புதான் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் இன்றியமையாதது என்பது தெளிவாகும்.

 சுதந்திர இந்தியாவில் 1960-ல் இருந்து 1971 வரை மூன்று பெரிய யுத்தங்களைச் சந்திக்க நேர்ந்தது. அதில் உயிரிழப்பும் பொருள் சேதமும் ஈடுசெய்ய முடியாதவை.

அண்டை நாடுகள் அச்சம் கொள்ளும் வகையில் நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தினால்தான் அமைதி காக்கமுடியும் என்பது பாதுகாப்பில் "டிடெரன்ஸ்' என்று சொல்லப்படும் முக்கிய சித்தாந்தம்.

 முப்படையான ராணுவம், வான்படை, கடற்படை இவைகளை முறையாகக் காலத்துக்கு ஏற்றவாறு மேம்படுத்துதல் வேண்டும். சமீபத்தில் பாதுகாப்புப் பிரிவுகளை நவீனப்படுத்துவதற்காக மத்திய அரசு 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம் வகுத்துள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

 நவீனமயமாக்குவதில் காவல்துறைக்கு அடுத்த பத்து ஆண்டுகளில்  2,500 கோடி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு சராசரி  250 கோடி. இது 30 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசத்துக்குப் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்னைகளை எதிர்கொள்ளும் விதத்தில் காவல்துறைக்கு வலிமை சேர்க்க வேண்டும். எல்லைப்  பிரச்னைகளைப்போல எப்போதும் வருவதல்ல உள்நாட்டுப் பிரச்னை. தொடர் விழிப்புணர்வோடு கவனித்தால்தான் சட்டம் ஒழுங்கை சீராகச் சமாளிக்க முடியும்.

 1992-ம் ஆண்டு அயோத்திப் பிரச்னை தலைதூக்கியபோது நாடெங்கிலும் கலவரம் வெடித்தது.  1993-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு சமுதாயத்தைப் பிளவுபடுத்தியது.  2002-ல் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரம் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால்.

 1990-ல் தொடங்கிய பாபர் மசூதி, ராமர் பிறந்த இடம் விவகாரம், மதவாதப் பிரச்னைக்கு வித்திட்டுள்ளது.

 புத்தாயிரத்தின் முதல் பத்து ஆண்டுகள், முந்தைய பத்து ஆண்டுகளை ஒப்பிடுகையில் மதவாத மோதல்கள் குறைவு என்றாலும் வன்முறைச் சம்பவங்களின் கொடூரம் குறையவில்லை. 2001 முதல் 2009 வரை 6,541 வகுப்புவாதக் கலவரங்கள் பல்வேறு மாநிலங்களில் நிகழ்ந்துள்ளன. அதில் 2,864 உயிர்கள் மடிந்தன.  21,640 மக்கள் காயமுற்றனர்.  இவை காவல்துறையினரால் பதியப்பட்ட வழக்குகளாகும். பதியப்படாத சிறுவழக்குகள் பன்மடங்கு இருக்கும் என்று அனுமானிக்கலாம்.

 குஜராத் மாநிலத்தில் கோத்ரா பயங்கரம் 2002-ம் ஆண்டு நிகழ்ந்தது. அந்த ஆண்டு மட்டும் ஆயிரக்கணக்கான மோதல்கள். ஒரு சிறிய பொறி  போதும் பற்றி எரிய என்ற நிலையில் சில இடங்களில் மதவாதப் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் புகைந்து கொண்டிருக்கின்றன. சராசரியாக ஓராண்டுக்கு 600 வகுப்புவாத மோதல்களில் சுமார் 130 உயிர்கள் பலியாகின்றன.

 இனக்கலவரங்கள் பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் தூண்டிவிடப்படுகின்றன என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். 1993-ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை கலவரம் மற்றும் 2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த தாக்குதலும் இதற்கு எடுத்துக்காட்டு.

நமது நாட்டில் 2004-ல் இருந்து 28 பெரிய அளவிலான குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் உயிரிழந்தவர்கள் 990 பேர்; காயமுற்றவர்கள் 2,791 பேர்.  இனக்கலவரங்களால் ஏற்படும் பொருள்சேதம் மதிப்பிட முடியாதது.

1992-93-ல் நிகழ்ந்த மும்பை கலவரத்தில் மட்டும்  9,000 கோடி பொருள்சேதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு கலவரத்தின்போதும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, எப்போதும் மக்கள் ஒரு பீதியில் வாழவேண்டிய நிலை, கல்விக்கூடங்கள் செயலிழத்தல் போன்று சமுதாயத்துக்கு ஒட்டுமொத்தப் பின்னடைவு ஏற்படுகிறது. அயோத்திப் பிரச்னையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் செப்டம்பர் 30-ல் தீர்ப்பு வழங்கியபோது என்ன நடக்குமோ என்ற பயம் இந்தியா முழுவதும் சூழ்ந்தது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம்,  குஜராத், கர்நாடக மாநிலங்களில் அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்றும் மற்ற மாநிலங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது. மூச்சைப் பிடித்துக் கொண்டு மக்கள் செய்தி ஒளிபரப்பைக் கவனித்தனர்.  

 எதிர்பார்த்ததுபோல் அசம்பாவிதங்கள் ஒன்றும் நிகழவில்லை. நடுநிலை பிறழாது தீர்ப்பு அமைந்தது  ஒரு காரணம் என்றாலும், விவேகத்துடன் பொதுமக்கள் தீவிரவாதத்தை அண்டவிடாமல் அமைதி காத்தது ஒருபுறம். எல்லா மாநிலங்களிலும் காவல்துறையினர் மிகச்சிறப்பாகக் கடமைஉணர்வோடு பணியாற்றியது நமது நாட்டின் இறையாண்மையைத் தலைநிமிரச் செய்தது.      

 உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மதவாதப் பயங்கரம் தலைதூக்க வாய்ப்பு இருந்தது.  ஆனால், அந்த மாநில காவல்துறை சிறப்பாகச்  செயல்பட்டதால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டன. உயர் அதிகாரிகள் எப்போதும்போல் சம்பிரதாயத்துக்காக ஆலோசனைக்கூட்டம் நடத்தாமல் சரகத்தில் இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் எஸ்.பி.க்களுக்கும் தெளிவான ஆலோசனை வழங்கியதோடல்லாமல் உட்கோட்டம், தாலுகா அளவில் எல்லா அதிகாரிகளுக்கும் எவ்வாறு நிலைமையைச் சமாளிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டது. சரகத்தில் உள்ள அதிகாரிகளின் நேர்மையான செயல்பாட்டுக்கு குறுக்கீடு ஒன்றும் இருக்காது என்று உறுதியளிக்கப்பட்டது. சமூக விரோதிகள் என்று தெரிவு செய்யப்பட்டவர்களை அந்தந்த சரகத்தில் கைது செய்து அவர்களது சட்டவிரோதச் செயல்கள் முடக்கப்பட்டன. யாரும் அவர்களுக்கு உதவிக்கு வரவில்லை. வந்ததையும் அதிகாரிகள் செவிமடுக்கவில்லை. சுதந்திரமாகச் செயல்படவிட்டால் காவல்துறை சிறப்பாகச் செயல்படும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

 மிகப்பெரிய நாடான இந்தியாவில் வேற்றுமைகள் ஏராளம். இனம், ஜாதி, மொழி, வசதி படைத்தவர், வசதி குறைந்தவர், படித்தவர், படிக்காதவர் என்று வேற்றுமைகளுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் குறைவில்லை. இத்தகைய வேற்றுமைகளில் ஒற்றுமை உண்டு, நாம் இந்தியர் என்ற உணர்வு உண்டு என்று பெருமைப்படுகிறோம். ஆனால், இந்த ஒற்றுமையைக் கட்டிக்காப்பது காவல்துறை என்பதை மறுக்க முடியாது. ஒற்றுமையைக்  குலைக்கும் வகையில் நாசவேலையில் ஈடுபடும் நயவஞ்சகர்களையும் அமைதிக்கு உலைவைக்கும் சமூக விரோதிகள்மீது அந்தந்த மாநிலங்களில் உரிய சமயத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுவதால்தான் நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்படுகிறது.

 தில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற விளையாட்டு வீரர்களும், சிறப்பாகப் பாதுகாப்புப் பணி செய்த காவல்துறையும் வேறு சர்ச்சைகள் மறையும் வகையில் இந்தியாவின் புகழை நிலைநாட்டினர். இந்தியா வென்ற 101 பதக்கங்களில் காவல்துறை விளையாட்டு வீரர்கள்  17 பதக்கங்களை வென்றனர் என்பது பெருமைக்குரிய வெற்றி.

 தேச விரோத சக்திகளை எதிர்கொள்வதில் காவல்துறையினர் பல சவால்களைச் சந்திக்க நேரிடுகிறது. உலக அளவில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் பரவியுள்ள நிலையில், காவல்துறையின் பொறுப்பு சாதாரணமானதல்ல. 1999-ல் இருந்து 2009 வரை 9,310 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும்  சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.

 ஒவ்வோராண்டும் அக்டோபர் 21-ம் நாள் உயிர்த்தியாகம் செய்த காவல் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எல்லா மாநிலங்களிலும் காவல்துறையினரால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.  

1959-ம் ஆண்டு திரிசூல் என்ற நமது நாட்டின் வடமேற்கு லடாக் எல்லையில் காவலில் இருந்த 10 மத்திய ரிசர்வ் படையினர் சீனப்படையினரின் தாக்குதலில் போராடி உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு தான் எல்லைப்பாதுகாப்பு பலப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து பி.எஸ்.எஃப் என்ற எல்லைப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது.

உயிரிழந்த காவலர்களின் நினைவாக அங்கு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டு ஒவ்வோராண்டும் அக்டோபர் 21-ம் நாள் மறைந்த காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக அனுசரிக்கப்படுகிறது. தமிழக, கர்நாடக மாநிலங்களுக்குச் சவாலாக இருந்த வீரப்பன் பிரச்னை 18.10.2004-ம் நாள் முடிவுக்கு வந்தது. வீரப்பன் வேட்டையில் உயிரிழந்த 44 வீரர்களுக்கு பர்கூர் வனப்பகுதியில் உள்ள தட்டக்கரை என்ற இடத்தில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் ஒவ்வோராண்டும் அக்டோபர் 18-ம் நாள் அஞ்சலி செலுத்தப்படுகிறது. உயிர்த்தியாகம் செய்த எஸ்.பி. ஹரிகிருஷ்ணன், எஸ்.ஐ. செந்தில் மற்றும் காவலர்கள் ரமேஷ், செல்வராஜ் போன்றவர்களை மறந்துவிடக்கூடாது.

 சமுதாய நலனுக்காக, நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக கடமை உணர்வோடு பணிகள் செய்யும் காவல்துறையினரைப் போற்றுவோம். இந்த ஆண்டு  ஜனவரி மாதம் தவித்த வாய்க்குத் தண்ணீர் இன்றி நடுரோட்டில் கயவர்களால் வெட்டப்பட்டு உயிர் துறந்த உதவி ஆய்வாளர் வெற்றிவேல், போக்குவரத்துப் பணியின்போது உயிரிழந்த கூடுவாஞ்சேரி தலைமைக் காவலர் தேவன் மற்றும் நாடெங்கிலும் இந்த ஆண்டு அமரர்களான சுமார் 800 காவல்துறைத் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

 இந்தியாவை இணைக்கும் இமயம்போல் நிமிர்ந்து நிற்கும் காவலரை வணங்குவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.