புறக்கணிக்கப்படும் புதையல்கள்
இந்த உலகம் அறிவியலின் அற்புத வளர்ச்சியால் வியத்தகு சிகரத்தை எட்டிக் கொண்டிருக்கிறது என்று சமூகவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். பூமி மட்டுமல்ல, வானமும் நம் கைகளுக்கு வசப்படத் தொடங்கி விட்டத


இந்த உலகம் அறிவியலின் அற்புத வளர்ச்சியால் வியத்தகு சிகரத்தை எட்டிக் கொண்டிருக்கிறது என்று சமூகவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். பூமி மட்டுமல்ல, வானமும் நம் கைகளுக்கு வசப்படத் தொடங்கி விட்டது; மனிதஇனம் நிலவிலும் நடந்துவிட்டது; சோதனைகளையெல்லாம் வென்று சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது.
÷ஆயினும் அறிவியல் வளர்ச்சியால் உலகம் குறுகிவிட்டது போல மனிதர்களின் உள்ளமும் குறுகிவிட்டது. மனிதஉறவுகள் போலியாகிப் போவதும், மனிதநேயம் மறைந்து கொண்டிருப்பதும் இதன் எதிர்மறை விளைவுகள்.
÷அறிவியலின் அவசர ஓட்டம் பெற்றவர்களையும் அனாதை விடுதிக்கு அனுப்புகிறது; பெற்ற பிள்ளைகளோடு பேசவும் நேரமில்லை. கணவன் மனைவி உறவுகளும் கசந்து போய் விட்டன. நான்கு சுவர்களுக்குள் மனித இயந்திரங்களாக அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
÷இந்தச் சமுதாயத்தில் மூத்தோர்களின் நிலைபற்றிக் கூறவும் வேண்டுமோ? அவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது. அவர்களின் கடந்தகால வாழ்வும், உழைப்பும், சேவையும் கேலிக்குரியதாகிறது. அவர்களின் சேமிப்பு மட்டுமே வாரிசுகளுக்குத் தேவைப்படுகிறது. சிந்தனையும், வழிகாட்டலும் தேவைப்படவில்லை. கேட்டால் "தலைமுறை இடைவெளி' என்று காரணம் கூறுகின்றனர்.
÷இந்தியாவின் மக்கள் தொகையில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்களாக இருப்பது வளரும் நாட்டுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கிறது. ஆனால், அவர்களை ஆளுகின்றவர்கள் முதியவர்கள். இந்த இணை கோடுகளான தண்டவாளங்களே இந்தியத் தொடர்வண்டியின் இனிய பயணமாக இருக்கிறது.
÷வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கும், வசதிபடைத்தவர்களுக்கும் உள்ள வேறுபாடு ஆண்டுதோறும் அதிகமாகிக் கொண்டு போவது போலவே முதியவர்களுக்கும், இளைஞர்களுக்குமான முரண்பாடுகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று நல்ல உள்ளங்கள் இடைவிடாத முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைப் பாராட்ட வேண்டும்.
சமுதாயத்தில் மூத்தோருக்குச் சமூகப் பாதுகாப்பு வேண்டும் என்ற நோக்கில்தான் அரசு ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவந்தது. இதுவும் ஆங்கில ஆட்சியால் வந்த நன்மைகளுள் ஒன்றாகும். இங்கிலாந்து நாட்டில் முன்பே ஓய்வூதியத் திட்டம் இருந்தது. அவர்கள் ஆட்சியில் இந்தியா இருந்ததால், அவர்களால் ஏற்படுத்தப்பட்ட 1871-ம் ஆண்டு தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978-ன் படி அவ்வப்பொழுது சில திருத்தங்களுடன் ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.
வயது முதிர்வின் காரணமாக, ஓர் அரசுப் பணியாளர் பணிநிறைவு பெற்றால் அல்லது பணியில் இருக்கும்போது மரணமடைந்தால், அவரது குடும்பம் சீரழிந்துவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
÷இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை, மாற்று ஈட்டுத்தொகை, குடும்ப நலநிதி எனப் பல்வேறு உரிமைகள் வழங்கப்படுகின்றன.
இதை உச்ச நீதிமன்றமும், "ஓய்வூதியம் என்பது கருணைக் கொடையோ அல்லது முதலாளி(அரசு) தன் விருப்பத்துக்குக் கொடுக்கும் உதவிப் பணமோ அல்ல; அது ஓய்வூதியரின் உரிமையாகும்' என்று தீர்ப்பளித்துள்ளது.
÷17-12-1982 அன்று டி.எஸ்.நகரா என்பவர் தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியது. மேலும், ""ஓய்வூதியம் என்பது பணிநிறைவு பெற்றவர்களின் சட்டப்படியான உரிமை என்றும், பணிநிறைவு பெற்ற ஊழியர்கள் ஓய்வூதியம் கோர சட்டப்படி உரிமையுள்ளவர்கள் என்றும், கடந்த காலப் பணிக்காக ஓய்வூதியம் வழங்குவது அரசுக்கு சட்டப்படியான கடமையாகும்'' என்றும் அது கூறியுள்ளது. இது ஓய்வூதிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கப் பிரகடனமாகும்.
÷இதனையும் சுதந்திரம் பெற்ற மக்கள் அரசு தொடர்ந்து செயல்படுத்த மறுக்கிறது. ஓய்வூதியத்துக்காக மத்திய, மாநில அரசுகள் 2009-10-ம் நிதியாண்டில் ஒதுக்க வேண்டிய தொகை மிகப்பெரிய அளவாகிய ஒரு லட்சம் கோடியை எட்டும் என்றும், மூத்த குடிமக்களுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வூதியப் பயன்களை அளிப்பது எந்த ஒரு நாட்டுக்கும் கட்டுபடியாகாத ஒன்று என்றும் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசியிருக்கிறார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்.
÷இதன் எதிரொலியாகவே 1-4-2004 முதல் அரசுப்பணியில் சேருபவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசு ஊழியர்கள் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்க வேண்டும். அவ்வாறு சேமிக்கப்படும் தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும். ஓய்வூதியத் தொகையாக எவ்வளவு வழங்கப்படும் என்பது பற்றி உத்தரவாதம் கிடையாது. பங்குச்சந்தை முதலீட்டுக்குக் கிடைக்கும் லாப நஷ்ட அடிப்படையில் ஓய்வூதியத் தொகை தீர்மானிக்கப்படும்.
÷இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டதன் மூலம் அரசு தன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறது. பிள்ளைகளைப் பெற்று எப்படியாவது போகட்டும் என்று தெருவில் விட்டுவிடும் பொறுப்பற்ற பெற்றோரைப் போல ஓர் அரசாங்கம் அறிவித்துள்ளது, மக்கள் நலம் நாடும் ஒரு மாபெரும் அரசுக்கு அழகாகுமா?
சட்டம், கொள்கை மற்றும் மனித உரிமைக்கல்வி அமைப்பின் சார்பில் லண்டன் பல்கலைக்கழகத்தால் "சென்னையில் முதியவர்களின் நிலை' பற்றிக் கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவில் 60 வயதைக் கடந்த ஏழ்மை நிலையில் உள்ள அனைத்து முதியவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அதன் ஆய்வு முடிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில், குறிப்பாக சென்னையில் முதியவர்களின் நிலை மிகவும் பின்தங்கியுள்ளது. முதுமையில்கூட, வாழ்நாள் வரை கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வீட்டிலும், சமூகத்திலும் அவர்களுக்குப் பல உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் முதியவர்கள் தங்களின் இன்றியமையாத தேவைகளுக்குக்கூட மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. பிள்ளைகளே அவர்களை வெறுத்து ஒதுக்குவதால் சமூகத்தால் மிகவும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். சிலர் தங்களின் குழந்தைகளையும், வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொள்வதற்காகவே அவர்களின் பெற்றோரை வீட்டில் வைத்திருக்கிறார்கள் என பல முதியவர்கள் தெரிவித்துள்ளனர்.
÷சென்னையில் உள்ள குடிசைப்பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பாலான முதியவர்கள் குடும்பத்தால் ஒதுக்கப்பட்டு தனியாகவே வசிக்கின்றனர். இதனால் அவர்கள் அன்றாடம் தங்கள் உணவுத் தேவைகளுக்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் முதியவர்களின் ஓய்வூதியத்தொகை மிகவும் குறைவாக இருக்கிறது. இந்த ஓய்வூதியத் தொகையைப் பெறுவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.
ஏழ்மை நிலையில் உள்ள முதியவர்கள் பலருக்கு ஓய்வூதியத் தொகை சரியாகக் கிடைப்பதில்லை. இந்த ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்கும் லஞ்சம் கேட்கப்படுகிறது. இவ்வாறு அந்த ஆய்வுக்குழு கூறியுள்ளது.
÷மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் 1993-ன் படி மனித உரிமை என்பது, அரசியல் சாசனச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சுதந்திரமாக, சமத்துவமாக, கௌரவமாக வாழ்தல் என்பதாகும். மனித உரிமைப் பாதுகாவலராக தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம், மனித உரிமை நீதிமன்றங்கள் உள்ளன.
÷மேலேகண்ட மனித உரிமைகள் மீறப்பட்டாலோ, மீறக் காரணமாக இருந்தாலோ மனித உரிமை ஆணையம் மனுவைப் பெற்றோ அல்லது தானாகத் தலையிட்டு நியாயம் வழங்கும் அதிகாரம் படைத்ததாகும். இப்போது அதன் தீர்ப்புகளில், ஓய்வுகாலப் பலன்கள் தாமதமாவதும் மனித உரிமை மீறலாகக் கூறப்பட்டுள்ளது.
÷""கௌரவமாக வாழும் உரிமைக்கு அடிப்படையாக ஓய்வுகாலப் பலன்கள் அமைகின்றன. அதைக் காலம் கடந்து வழங்கினால் அது கௌரவமாக வாழும் உரிமையைப் பாதிக்கும். அது ஒரு மனித உரிமை மீறலாகும். அதற்கு அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டும்'' என்று அது தீர்ப்பளித்துள்ளதை வரவேற்க வேண்டும்.
÷""உலகத்துக்கு உபதேசிக்கப் புதிதாக என்னிடம் ஏதும் இல்லை. மலைகள் எவ்வளவு பழமையானவையோ அவ்வளவு பழமையானவை சத்தியமும் அகிம்சையும்'' என்றார் காந்தியடிகள். பழமைக்கான மரியாதை இதுதான். முதியவர்களுக்கும் இது பொருந்தும். அவர்கள் இப்போது புறக்கணிக்கப்பட்ட புதையல்களாக இருக்கின்றனர்.
"மூத்தவர்களை மதிக்காத ஒரு நாடு நாகரிகம் மிக்க நாடாக ஏற்றுக் கொள்ள இயலாது' என்பதே அறிஞர்களின் கருத்தாகும். காயை விடக் கனியே இனியது; படிப்பறிவை விடப் பட்டறிவே சிறந்தது; மூத்தவர்களின் அந்த அனுபவ அறிவைப் பயன்படுத்திக் கொள்வதே இளைய தலைமுறைக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கும் நல்லது.
÷இளமை செய்யும் புதுமை எதிர்காலம்; முதுமை செய்யும் புதுமையே நிகழ்காலம்; நிகழ்காலத்தை மறந்துவிட்டு, இறந்த காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதால் என்ன பயன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...