கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

நன்றி மறப்பது நன்றன்று

அந்தி மாலைப்பொழுது; பகல் இரவோடு சங்கமிக்கும் காலம். சூரியன் அஸ்தமிக்கும் அந்தத் தருணத்தில்தான் எல்லா காவல் மற்றும் ராணுவப் பாசறைகளிலும் ஒருவித சோகம் கலந்த குழல் இசையோடு கொடி இறக்கப்படும். படைவீரர்களை

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:28 pm

ஆர். நட​ராஜ்

அந்தி மாலைப்பொழுது; பகல் இரவோடு சங்கமிக்கும் காலம். சூரியன் அஸ்தமிக்கும் அந்தத் தருணத்தில்தான் எல்லா காவல் மற்றும் ராணுவப் பாசறைகளிலும் ஒருவித சோகம் கலந்த குழல் இசையோடு கொடி இறக்கப்படும். படைவீரர்களை ஒருமுகப்படுத்தி அன்றைய பணிகளின் நிறைகுறைகளைப்பற்றிச் சிந்திக்கும் அதேவேளையில், இன்னும் நிறைவேற்ற வேண்டிய பணிகளை ஒன்றுபட்டுச் செயல்படுத்தி எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான நினைவூட்டல்தான் அந்தக் குழல் ஓசை.

எவ்வாறு அலைகள் ஓய்வதில்லையோ அதேபோல் காவல் பணிகளுக்கும் ஓய்வில்லை, முடிவில்லை. நேர்மையோடு, கடமை உணர்வோடு சில காவல்துறை ஆளினர்கள் காவல் பணிபுரிவதால்தான் சமுதாயத்தில் அமைதி நிலவுகிறது. அமைதி காப்பதில்தான் எத்தனை இடைஞ்சல்கள், சாடல்கள், பழிப்புகள், காயங்கள் முடிவில் உயிரிழப்புகள்.

2008-ம் ஆண்டு நவம்பர் 26-ல் உலகையே உலுக்கிய மும்பை நகரத் தாக்குதல் நிகழ்ந்து இரண்டாண்டு பூர்த்தியாகிறது. சம்பிரதாய காவல் அணிவகுப்போடு உயிரிழந்த பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. மும்பை பயங்கரத்தில் உயிரோடு பிடிக்கப்பட்ட தீவிரவாதி கசாபுக்கு எதிரான வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்டு, தண்டனையை நிறைவேற்றுவதில் நடைமுறை விதிகள் கடைபிடிப்பில் உள்ளன. அவை முடிந்தபின் உரிய தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்க வேண்டும். இந்தியக் குற்றவியல் சட்டம் மற்றும் அரசியல் சாசனத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் கடைப்பிடிக்க வேண்டும். அதனால் ஏற்படும் தாமதம் தவிர்க்க முடியாதது.  

ஆனால், மற்ற நாடுகளில் இந்த நிலையில்லை. எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் அக்டோபர் 6, 1981-ம் ஆண்டு தேசிய நாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள மேடையில் நின்று கொண்டிருக்கும்பொழுது, அணிவகுப்பில் வந்த ஒரு பிரிவினர் மேடையை நோக்கிச் சுட்டதில் அன்வர் சதாத்தோடு காயமுற்று 11 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அந்த நிகழ்வில் கையெறி குண்டு வீசிய காலித் இஸ்லாம்பெüலி என்ற ராணுவ அதிகாரி கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் மரண தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டு, உடனடியாக 1982 ஏப்ரல் மாதத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இஸ்ரேல் நாட்டின் பிரதம மந்திரி இத்சாக் ராபின் 1995-ம் ஆண்டு நவம்பர் 4-ம் நாள் இஸ்ரேல் தலைநகரான டெல்அவிவின் பிரதான சதுக்கத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கு கொண்டு விடைபெறும்பொழுது இகால் அமீர் என்ற 25 வயது யூத வாலிபரால் கொலை செய்யப்பட்டார். வலதுசாரி மதவாத மயக்கத்தில் ஈர்க்கப்பட்ட இந்த இளைஞர் பிரதமரின்  முற்போக்கு சமாதான முடிவுகள் ஏற்புடையதல்ல என்ற காரணத்துக்காகத் துப்பாக்கியால் பிரதமரைக் கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். நீதிமன்ற விசாரணை ஜனவரி 1996-ல் தொடங்கி மூன்று மாதங்கள் நடைபெற்றது. விசாரணை முடிவில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.  நாட்டின் தலைவர்களைக் கொன்ற குற்றத்துக்கு பொது மன்னிப்பு வழங்கலாகாது என்ற சட்டத்திருத்தமும் கொண்டுவரப்பட்டது. இன்றும் அமீர் தனி அடைப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி இந்தியாவின் பிரபலமான இளந்தலைவர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் குண்டுவெடிப்பில் கோரமான முறையில் உயிரிழந்தார். நாடே குமுறியது. பிரத்யேகமாக அமைக்கப்பட்ட விசேஷ புலன் விசாரணைக்குழு 1992-ம் ஆண்டு மே 22  அன்று குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தது. தனி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. 6  ஆண்டுகளுக்குப் பிறகு 1998-ம் ஆண்டு ஜனவரி 28 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் இன்னும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நமது நாட்டில் முக்கிய குற்ற நிகழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டு  முடிவுக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஒவ்வொரு நிலையிலும் இத்தகைய கால தாமதத்தைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமான குற்ற நிகழ்வுகளிலும் பாதுகாப்புக்குச் சவாலாகத் தலையெடுக்கும் சட்டம் ஒழுங்குப் பிரச்னையிலும் காவல் துறைக்கும் பாதுகாப்புப் பிரிவினருக்கும் முழுநிர்வாக ஒத்துழைப்பு அளிப்பது இன்றியமையாதது. அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள், ஆளினர்கள், வாகனங்கள், தங்கும் வசதி போன்றவை அளிக்கப்பட்டால்தான் துரிதமாகச் செயலில் இறங்க முடியும்.  ஆனால், நடைமுறையில் சம்பந்தப்பட்ட பொறுப்பில் உள்ள அதிகாரி அங்கும் இங்கும் அலைந்து நியாயமாக பெற வேண்டியதற்கு முட்டி மோத வேண்டிய நிலை வருந்தத்தக்கது.  பஞ்சாப் தீவிரவாதத்தின் உச்சநிலையில் பொறுப்பேற்ற உயர் போலீஸ் அதிகாரி கில்லுக்கு எல்லாவிதத்திலும் முழு அதிகாரம் கொடுக்கப்பட்ட பிறகு தான், நிலைமையைச் சீர்செய்ய முடிந்தது. வீரப்பன் வேட்டையிலும் முழுஅதிகாரமும், விசேஷ இடர்படிகளும் சிறப்பு விரைவுப் படையினருக்கு அளிக்கப்பட்டதாலும், அதுமட்டுமன்றி அவர்களுக்கு முழு ஊக்கமும் ஆதரவும் மனமுவந்து அளித்ததால் அவர்களால் இலக்கை வெற்றிகரமாக அடைய முடிந்தது.

ராணுவ வீரர்கள் இந்தியாவின் வடமேற்கில் சியாச்சின் எல்லைப் பகுதியில் ஆண்டு முழுவதும் கொட்டும்பனியில் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு விசேஷ இடர்படிகளும் மற்றும் பனியை எதிர்கொள்வதற்கு சாதனங்களும் உடைகளும் அளிக்க வேண்டும் என்று ராணுவத் தலைமையிடத்திலிருந்து அனுப்பப்பட்ட கருத்துரு வெகுநாள்களாகப் பரிசீலனையில் இருந்து உத்தரவு வழங்கப்படாமல் இருந்தது. அப்போது இருந்த பாதுகாப்பு அமைச்சர் சியாச்சின் பகுதிக்குச் சென்று சிப்பாய்களோடு தங்கி, அவர்களது குறைகளைக் கேட்டபோது  முடக்கப்பட்ட பயனளிப்பு கோப்புகள் விவரம் தெரிவிக்கப்பட்டது. தில்லிக்குத் திரும்பியதும் தாமதத்தில் இருந்த பயனளிப்பு கோப்புகளில் உத்தரவு பிறப்பித்து தாமதத்துக்குக் காரணமான சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சியாச்சின் பகுதிக்குச் சென்று பணிபுரிந்தால்தான் அவர்களுக்கு உறைக்கும் என்று கடிந்து கொண்டதாகவும் செய்தி வந்தது.

மும்பை பயங்கரத்தில் உயிரிழந்த ஹேமந்த் கர்கரே, விஜய் சல்ஸ்கர், அஷோக் காம்தே போன்ற உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவத்தின்போது குண்டு துளைக்காத பாதுகாப்புக்  கவசம் போட்டிருந்தும் பயனில்லாமல் பயங்கரவாதிகளின் குண்டுக்கு இரையானார்கள் என்றும் பாதுகாப்புக் கவசம் தரமானதாக இருந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம் என்று, தனது ஆதங்கத்தை விதவைகளான கவிதா கர்கரே மற்றும் வினோத் காம்தே தெரிவித்திருக்கின்றனர். மும்பை தாக்குதலை ஆராய்ந்த பாதுகாப்பு வல்லுநர்களும் மும்பை நகர காவல்துறையினரும் இத்தகைய பயங்கரவாத தாக்குதல்களைச் சமாளிக்கத் தயார் நிலையில் இல்லாததைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அசாதாரண நிகழ்வுகளை எதிர்கொள்ளத் தேவையான நவீன துப்பாக்கிகள், பாதுகாப்புக் கவசங்கள், தீவிர பயிற்சி, நொடிப்பொழுதில் களத்தில் இறங்க மனம், உடல் அளவில் உறுதி இவை முக்கியம். இதைக் கருத்தில்கொண்டு மும்பை நகர காவல் ஃபோர்ஸ் ஒன் என்ற ஓர் அதிரடி அணியை இப்போது உருவாக்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிறந்த ஆளினர்களைத் தெரிவு செய்து தேவையான ஆயுதங்களோடு உயர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரைப் பணயம் வைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்கப் போதுமான ஆயுதங்கள் மட்டுமல்லாமல் உரிய தகவல்கள் அடிப்படையில் அணிகளைத் திரட்ட வேண்டும். திட்டமிடப்படாத எதிர்தாக்குதல் உயிரிழப்பில்தான் முடியும்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் இத்தகைய தவிர்க்கக்கூடிய உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும், பாதுகாப்பு வீரர்களுக்கு விசேஷ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களது குடும்பங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஊர்விட்டு ஊர்வந்து பாதுகாப்புப் பணியில் இருக்கும் வீரர்களுக்குக் குடும்பத்தினர் நலமாக இருக்கிறார்கள்; அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தால்தான் பணியில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியும்.

பாதுகாப்பு வீரர்களின் மனநிலை பக்குவமாக இருப்பதற்கு உரிய நேரத்தில் விடுப்பும் அவசியம். மத்திய ரிசர்வ் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் செய்தி வந்துள்ளது. 2007-ம் ஆண்டிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் 218 பாதுகாப்புப்படை வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய ரிசர்வ் படையில் 143 தற்கொலைகள். மனஅழுத்தத்தில் உள்ள வீரர்கள் தனது உயர் அதிகாரிகள்மீதே துப்பாக்கிப் பிரயோகம் செய்த நிகழ்வுகளும் வருந்தத்தக்கவை. இங்குதான் நேரடி மேற்பார்வை செய்ய வேண்டிய அதிகாரிகள், சீரிய முறையில் தமது அணியில் உள்ளவர்களைத் திறமையாகப் பணியில் ஈடுபடுத்துவது மட்டுமல்லாமல், அவர்களை அரவணைத்துக் குறைகளைப் பாரபட்சமின்றி நிவர்த்தி செய்தல் அவசியம்.  

எல்லாவற்றுக்கும் மேலாக ""எங்கிருந்தோ வந்தான், காக்கும் காவலன் நான் என்றான். இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்'' என்ற சமுதாயத்தின் பாராட்டுதல்தான் பாதுகாப்பு வீரருக்கு ஊக்கமருந்து. அதைப் பெற்றுத் தருவது, தன்னலமின்றி துறையின் உயர்வுக்காகப் போராடக்கூடிய உயர் அதிகாரிகளின் கடமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.