அதிகாரிகளின் ஆட்சியா?
நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடந்தால்தான் மக்களுக்கு நல்லது. மாறாக, அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் ஆட்சி நடந்தால் அதனால் ஏற்படும் குழப்பங்களுக்கு அளவே இருக்காது. தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்


நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடந்தால்தான் மக்களுக்கு நல்லது. மாறாக, அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் ஆட்சி நடந்தால் அதனால் ஏற்படும் குழப்பங்களுக்கு அளவே இருக்காது.
தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேவையைப் பொருத்தவரையில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா, அதிகாரிகளின் ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
போக்குவரத்துக் கழகங்களில் நடக்கும் குழப்பங்கள், வசூல் கூத்துகள் அதிகரித்து இருப்பதே இதற்குக் காரணம்.
பேருந்துக் கட்டணத்திற்கு இவ்வளவு என கணக்குப் பார்த்து அதற்கான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டுப் புறப்பட்டால் அதோகதிதான்.
எந்தப் பேருந்தில் எவ்வளவு கட்டணம் என்பது நடத்துநர் கூறியபிறகே தெரியவரும். அதன்பிறகு நடத்துநருடன் வாக்குவாதம் செய்து அவமானங்களைச் சந்தித்து, நம்மை நாமே நொந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
முன்பெல்லாம் விரைவுப் பேருந்துகள் குறைவு. விரைவாகச் சென்றுவிடலாம் என நினைத்து விரைவுப் பேருந்துகளில் ஏற வேண்டுமானால் நிறுத்தங்களில் சிறிதுநேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். இப்போது வருவது அனைத்துமே கூடுதல் கட்டணத்துடன் கூடிய "ஸ்பெஷல்' பேருந்துகள்தான். சாதாரண பேருந்துகளுக்குத்தான் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
மாநிலம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகம் என்ற ஒரே பெயரில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும், கோட்டத்திற்குக் கோட்டம், பணிமனைக்குப் பணிமனை கட்டணம் வசூலிப்பதில் வித்தியாசம் காணப்படுகிறது.
இருக்கும் ஆங்கில எழுத்துகளை எல்லாம் பயன்படுத்தி எல்.எஸ்.எஸ்., டி.எஸ்.எஸ்., எஸ்.எஸ்.எஸ்., எஸ்.எப்.எஸ். என பல்வேறு பெயர்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஒவ்வொரு பேருந்திலும் ஒவ்வொருவிதமான கட்டணம். நடத்துநருக்கு நடத்துநர் கட்டணம் மாறுபடாதது ஒன்றுதான் குறை(!). இதைப் பார்த்து தனியார் பேருந்துகளிலும் கட்டணம் "தாராளமாக' வசூலிக்கப்படுகிறது.
தற்போது சில பணிமனைகளில் எல்.எஸ்.எஸ். சேவை நிறுத்தப்பட்டு சாதாரண பேருந்துகள்கூட டி.எஸ்.எஸ். என்ற பெயரில் அதிக கட்டணத்துடன் இயக்கப்படுகின்றன. ஏன் என்று நடத்துநரிடம் கேட்டால் பணிமனை மேலாளர் கூறியதாகச் சொல்கின்றனர்.
பணிமனையில் விசாரித்தால் உயர் அதிகாரிகளின் உத்தரவு என்கின்றனர். உயர் அதிகாரிகள் வரை போய் சாமானியர்கள் விசாரிக்கவா முடிகிறது? அப்படியே விசாரித்தாலும் சரியான விளக்கம் கிடைத்துவிடவா போகிறது?
இது ஒருபுறமிருக்க திருவிழாக் காலங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் எங்கே ஏறி எங்கே இறங்கினாலும் அதிகபட்சக் கட்டணம் எவ்வளவோ அதை வசூலிக்கின்றனர்.
தீபாவளி, பொங்கல் போன்ற விழாக் காலங்களில் தனியார் பேருந்துகளில்தான் இப்படி அநியாயக் கட்டணம் வசூலிக்கப்படும். அதைவிட மோசமாக அரசுப் பேருந்துகளில் நடக்கும் இந்த வசூல் கொள்ளை குறித்து யாரிடம் விளக்கம் கேட்பது? கூட்ட நெரிசலுக்காக இயக்கப்படும் சிறப்புப் பேருந்து சேவை என்பது மக்கள் வசதிக்காகவா அல்லது அதிகாரிகளின் வசதிக்காகவா? இதற்கெல்லாம் அரசு எந்த விளக்கமும் அளிப்பது இல்லை.
தமிழகத்தில் தற்போது ஏறக்குறைய எல்லா பேருந்துகளுமே பெயர் மாற்றப்பட்டு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்த எந்த அரசு உத்தரவும் வெளியாகவில்லை. எல்லாமே அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுதான். ஆனால், பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்கிறது அரசு. பாருங்கள்... எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகின்றனர் மக்கள்!
இப்படி மறைமுகமாக உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என அண்மையில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒருவர் பொதுநல வழக்குத் தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் என்ன தெரியுமா சொன்னது? "கட்டணத்தை ரத்து செய்ய உத்தரவிட முடியாது; கட்டணம் குறைவாக உள்ள பேருந்துகள் எவையோ அதில் பயணம் செய்யலாம்' என்று கூறி, மனுதாரருக்கு அபராதமும் விதித்தது.
வரும் பேருந்துகள் அனைத்துமே பெயர் மாற்றப்பட்ட கூடுதல் கட்டணப் பேருந்துகளாக இருந்தால் என்னதான் செய்வது? சில நேரங்களில் முந்தைய ஸ்டேஜ் என்று கூறி ஒரு கி.மீ. தொலைவுக்குக்கூட 8 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி மற்றும் இலவசத் திட்டங்கள் குறித்துப் பெருமைப்படும் தமிழக அரசு, அதை ஈடுகட்டத்தான் இப்படி பேருந்துக் கட்டணத்தைக் கூட்டி வசூலிக்கிறதோ என்னவோ...
மொத்தத்தில் பேருந்துகளின் பெயரில் மட்டும்தான் ஒரே எஸ்...எஸ்...எஸ்..., இருக்கை வசதிகள், உரிய நேரத்தில் சேவை... இன்னபிற விஷயங்கள் அனைத்திலும் நோ... நோ... நோ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...