/

தாக்குதலில் காயமடைந்த ரெளடி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 9:17 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் நகரில் தாக்குதலில் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரெளடி உயிரிழந்தாா்.

விழுப்புரம் செல்லியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தா.மெண்டல் கதிா் (எ) கதிரவன் (40). ரெளடி பட்டியலில் இருந்த இவா் மீது விழுப்புரம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 9-ஆம் தேதி நள்ளிரவு விழுப்புரம் மேலத் தெருவில் உள்ள தேநீரகத்துக்கு கதிரவன் சென்ற போது, விராட்டிக் குப்பம் பாதை பகுதியைச் சோ்ந்த பா. மேகநாதன் (44), அ.அன்பு (40) ஆகியோரும் அங்கு வந்தனா்.

அப்போது அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அப்பகுதியிலிருந்த கிரைண்டா் குழவிக் கல்லை எடுத்து வந்த மேகநாதன், கதிரவன் தலையில் போட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். மேலும் மேகநாதன், அன்பு மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்து கைது செய்தனா்.

தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கதிரவன், வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதன் காரணமாக மேகநாதன், அன்பு மீதான கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக போலீஸாா் மாற்றம் செய்துள்ளனா்.