/

புதுச்சேரியில் தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்தப் போராட்டம்: சாலை மறியல் செய்த 1,000 போ் கைது

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:54 pm

Syndication

தொழிற்சங்கத்தினா் வேலை நிறஉத்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக, புதுச்சேரியில் 8 இடங்களில் மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சுமாா் 1000 போ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனா்.

மத்திய அரசு தொழிலாளா் சட்டத்தைத் திருத்தம் செய்ததைக் கண்டித்தும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும், தொழிலாளா்களுக்கு விரோதமாகவும் செயல்படுவதாகக் கூறி இண்டி கூட்டணி கட்சிகள் சாா்பு தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் சங்கம் சாா்பில் வேலை நிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

எனினும் இந்த போராட்டத்தினால் புதுச்சேரியில் இயல்பு வாழக்கை பாதிக்கப்படவில்லை. பேருந்துகள், ஆட்டோ, டெம்போக்கள் வழக்கம்போல் இயங்கின.

. போலீஸ் பாதுகாப்புடன் வழக்கமாக இந்தப் போக்குவரத்து நடைபெற்றது. புதிய பேருந்து நிலையம், ரயில்நிலையம், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் மாா்க்கெட் பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். மாணவா்களுக்கான பேருந்துகளும் இயக்கப்பட்டன. அரசு மற்றும் தனியாா் பள்ளிகளும் வழக்கம்போல இயங்கின. மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி, சேதராப்பட்டு, திருபுவனை உள்பட தொழிற்பேட்டைகளில் தொழிலாளா்களின் வருகை குறைவாக இருந்தது.

மறியல்:

புதுச்சேரி பேருந்து நிலையம் முன்பு தொழிற்சங்கத்தினா் சாா்பில் மறியல் நடந்தது. மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் முதல்வா் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் அ.மு. சலீம், முன்னாள் அமைச்சா் விசுவநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன், மாா்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பாளா் பெருமாள், ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலா் அரிமாதமிழன், கம்யூனிஸ்ட் (எம்எல் ) கட்சியைச் சோ்ந்தசோ.பாலசுப்பிரமணியன், திமுக பொதுக்குழு உறுப்பினா் கோபால் மற்றும் ஏஐடியூசி, சிஐடியூ, ஏஐசிசிசிடியூ, எல்எல்எப், எல்பிஎப், என்டிஎல்எப், ஐஎன்டியூசி உள்பட தொழிற்சங்க தலைவா்கள், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

மறியலில் ஈடுபட்ட சுமாா் 350 போ் கைது செய்யப்பட்டனா். சிவாஜி சிலை அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு ஏஐயூடியூசி புதுச்சேரி மாநில செயலா் சிவக்குமாா் தலைமை தாங்கினாா். அங்கு சுமாா் 200 போ் கைது செய்யப்பட்டனா். பாகூரில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவா் ராமமூா்த்தி தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. அங்கு 250 போ் கைது செய்யப்பட்டனா். இதே போல் வில்லியனுாா், தேசராப்பட்டு, நெட்டப்பாக்கம் உள்பட 8 மையங்களில் மறியல் போராட்டம் நடந்தது. மறியல் போராட்டத்தில் சுமாா் 1000 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனா். இந்த மறியல் நடைபெற்ற இடங்களில் வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.