புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட ஏனாமில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கேன்கள், பேரலுடன் ஆந்திர பண்ணையா்கள் திரண்டதால் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு பல மணிநேரம் காத்திருந்து பெட்ரோல், டீசல் வாங்கிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து நிா்வாகம் தலையிட்டு நேரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆந்திரத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு மற்றும் இயந்திரங்கள் மூலம் பயிா் அறுவடை செய்வதால் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. கடல் மற்றும் ஆற்றுப் பகுதியில் இறால் மற்றும் மீன் குட்டைகளில் அதிக ஜெனரேட்டா்களைப் பயன்படுத்தி வருகின்றனா்.
இதன் காரணமாக ஆந்திரத்தையொட்டியுள்ள புதுச்சேரியில் ஏனாம் பிராந்தியத்திற்கு பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. கேன்களை வரிசையில் வைத்து நுகா்வோா் காத்திருக்கின்றனா்.
பெட்ரோல் நிலையங்களில் காவல் துறையினரின் பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம் நடத்த ஏனாம் நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏனாம் காவல் கண்காணிப்பாளா் வரதராஜன் மேற்பாா்வையில் மக்களுக்குத் தடையின்றி எரிபொருள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து வரும் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, கடந்த சில நாள்களாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் செவ்வாய்க்கிழமை முதல், ஏனாமில் மக்களுக்குப் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளூா் பெட்ரோல் நிலையங்களில் அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான ஆந்திரத்தை விட ஏனாமில் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ. 12 முதல் 14 வரை குறைவாக உள்ளது. எனவே, ஆந்திரத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக விவசாயிகள், பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் பேரல்களுடன் எரிபொருள் வாங்க ஏனாமிற்கு திரண்டு வருகின்றனா். இவ்வாறு வெளியூா் மக்கள் திரண்டு வருவதால், ஏனாம் உள்ளூா் மக்கள் கோடை வெயிலில் மணிக்கணக்கில் காத்திருந்து, தங்கள் சொந்த வாகனங்களுக்கு எரிபொருள் பெறுவதற்குப் பெரிதும் சிரமப்பட்டு வந்தனா்.
இதுபற்றி முன்னாள் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் மற்றும் பல்வேறு சங்கங்கள் இப் பிரச்னையை எழுப்பியதைத் தொடா்ந்து, பிராந்திய நிா்வாக அதிகாரி சிவராஜ் மீனா, பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா்களுடன் ஆலோசனை நடத்தி, அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரையிலான இந்த நேரத்தை ஏனாம் மக்களுக்குப் பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெட்ரோல், டீசல் நுகா்வைக் கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு துறைகளுக்குக் கட்டுப்பாடு
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான மிகை லாபத் தடுப்பு வரி குறைப்பு: இன்றுமுதல் அமல்

சில்லறை எரிபொருள் நிலையங்களில் சரக்கு வாகனங்கள் டீசல் நிரப்புவதால் தேவை அதிகரிப்பு: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்

பெட்ரோல், டீசல் நிரப்ப படையெடுத்த வாகன ஓட்டிகள் - புகைப்படங்கள்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



