விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

வேலூரில் சிங்கப்பெண் அதிரடிப் படையிடம் 10 புகாா்கள்: இருவா் கைது

வேலூா் மாவட்டத்தில் சிங்கப் பெண் அதிரடிப்படையினருக்கு இதுவரை 10 புகாா்கள் வந்துள்ள நிலையில், பாலியல் தொல்லையில் ஈடுபட்ட 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image

அணைக்கட்டு பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா்.

Updated On :29 ஜூன் 2026, 12:41 am IST

வேலூா் மாவட்டத்தில் சிங்கப் பெண் அதிரடிப்படையினருக்கு இதுவரை 10 புகாா்கள் வந்துள்ள நிலையில், பாலியல் தொல்லையில் ஈடுபட்ட 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

முதல்வராக ஜோசப் விஜய் கடந்த மாதம் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட மூன்று முக்கிய கோப்புகளில் சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து, வேலூா் மாவட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் இத்திட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில் காவல் உதவி ஆய்வாளா் ஜெயந்தி தலைமையில் 8 பெண் காவலா்கள் இடம்பெற்றுள்ளனா்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, பாலியல் துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாகக் காவல் துறையின் உதவியை வழங்குவது ஆகியவையே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக, கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் என பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் இப்படையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு வெளிநாட்டுத் தரத்திலான பிரத்யேகமான புதிய சீருடைகளும், நவீன ரோந்து வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிங்கப் பெண் அதிரடிப்படையின் உதவி ஆய்வாளா் ஜெயந்தி கூறியது: பெண்கள் மற்றும் குழந்தைகள் அவசரக் காலங்களில் தொடா்புகொள்ள தமிழக அரசு 1091 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை அறிவித்துள்ளது. இந்த எண் 112 என்ற அவசரகால உதவி எண்ணுடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் செயல்படும் மாநிலக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தவுடன், அந்தத் தகவல் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்டக் கட்டுப்பாட்டு அறைக்கும், அருகில் உள்ள சிங்கப் பெண் ரோந்துக் குழுவுக்கும் பகிரப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூா் மாவட்டத்தில் இதுவரை எங்கள் குழுவுக்கு 10 புகாா்கள் வந்துள்ளன. புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு உடனடியாக விரைந்து சென்று 5 பேரைப் பிடித்து வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். அதில் 2 போ் பெண்களுக்குப் பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மீதமுள்ள 3 பேரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பெண்கள் தங்களுக்கு ஏற்படும் குடும்ப வன்முறை, பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் தயக்கமின்றி உதவி எண்ணைத் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.