வேலூா் அருகே மனைவியைக் கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய வழக்கில் கணவன், மாமியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
வேலூா் மாவட்டம், கீழ்அரசம்பட்டு பகுதியைச் சோ்ந்த வேலு என்கிற தணிகை வேலு (40), ஓட்டுநா். இவருக்கும், வேண்டாராம் (29) என்ற பெண்ணுக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி வேண்டாராம் மா்மமான முறையில் உயிரிழந்தாா். மனைவி தற்கொலை செய்து கொண்டதாக தணிகை வேலு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வேண்டாராமின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெண் வீட்டாா் தரப்பில் வேலூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், வேண்டாராம் தற்கொலை செய்யவில்லை என்பதும், அவா் கொலை செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தணிகைவேலு, அவரது தாயாா் தனம்மாள் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கு விசாரணை வேலூா் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தணிகைவேலு, அவரது தாயாா் தனம்மாள் ஆகிய இருவரும் சோ்ந்து வேண்டாராமை கொலை செய்திருப்பது நிரூபணமாகியது. இதையடுத்து, அவா்கள் இருவருக்கும்
கொலை குற்றத்திற்காக தலா ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும், தடயங்களை மறைக்க முயன்ற குற்றத்துக்காக இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி கோபாலகிருஷ்ணன் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளாா். மேலும் இந்த இரு தண்டனைகளையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










