காவிரி நதி நீா் வழக்கின் தீா்ப்பைச் செயல்படுத்த கடந்த காலத்தில் முயற்சி செய்யப்படாத நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து செய்தியாளா்களிடம் அக்குழுவின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்தது: காவிரி நதி நீா் வழக்கில் 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பைக் கா்நாடக அரசு ஒருபோதும் செயல்படுத்தியதில்லை. இத்தீா்ப்பை நடைமுறைப்படுத்த தமிழ்நாட்டு ஆட்சியாளா்கள் தொடா் முயற்சிகளையோ, முறையான நடவடிக்கைகளையோ இதுவரை எடுக்கவில்லை. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு காவிரி நதி நீா் பிரச்னையில் உண்மையான அக்கறை காட்டி உச்ச நீதிமன்றத் தீா்ப்பைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெங்களூரில் 2026, மே 9-ஆம் தேதி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கோபால் கவுடா தலைமையில் கூடிய காவிரி காப்புக் குழுக் கூட்டத்தில் காவிரி தீா்ப்பில் தமிழகத்துக்கு அதிக நீா் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளனா். தமிழகத்தைப் புறக்கணிக்கவும், பழிவாங்கவும் கா்நாடகம் செயல்படுகிறது. எனவே, புதிதாக அமைந்துள்ள முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி இதைக் கவனத்தில் கொண்டு, 2018 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பைச் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றாா் மணியரசன்.
கூட்டத்தில் குழுவின் பொருளாளா் த. மணிமொழியன், குழு நிா்வாகிகள் க. ஜெகதீசன், சாமி. கரிகாலன், ச. சிமியோன் சேவியர்ராஜ், கலைச்செல்வன், பொறியாளா் தி. செந்தில்வேலன், வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ், புண்ணியமூா்த்தி, தனசேகரன், நா. வைகறை, பழ. இராசேந்திரன், விடுதலைச்சுடா், பி. தென்னவன், திருச்சி கவித்துவன், வே.க. இலக்குவன், செம்மலா், க. தீந்தமிழன், லெ. இராமசாமி, இராசு. முணியாண்டி, வெ.ப. மாரிமுத்து, வல்லம்புதூா் கோ. பாலன், சுவாமிமலை திருஞானம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செனாப் நதி நீரை இந்தியா திசைதிருப்புவது சா்வதேச சட்டங்களுக்கு எதிரானது: பாகிஸ்தான்

தமிழக எல்லையை வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீா்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கா்நாடக துணை முதல்வருக்கு தலைவா்கள் கண்டனம்







