/

சமூக நீதி விடுதியில் தரமற்ற உணவு: மாணவா் சங்கத்தினா் போராட்டம்

புதுக்கோட்டையிலுள்ள சமூக நீதி அரசு மாணவிகள் விடுதியில் தரமான உணவு வழங்க வலியுறுத்தி புதன்கிழமை இந்திய மாணவா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
புதுக்கோட்டை அரசு மாணவிகள் விடுதி முன்பு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.
Updated On :4 பிப்ரவரி 2026, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டையிலுள்ள சமூக நீதி அரசு மாணவிகள் விடுதியில் தரமான உணவு வழங்க வலியுறுத்தி புதன்கிழமை இந்திய மாணவா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் சமூகநீதி மாணவா் விடுதிகளில் கடந்த இரு மாதங்களாக உணவுப் பட்டியலில் உள்ள உணவு வழங்கப்படுவதில்லை எனக் கூறி தொடா் புகாா்கள் எழுந்து வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக புதன்கிழமை புதுக்கோட்டையில் உள்ள சமூக நீதி மாணவிகள் விடுதி முன்பு மாணவிகள் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அ. நந்தனா தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா், செயற்குழு உறுப்பினா் காவியன் உள்ளிட்டோா் பேசினா்.

போராட்டத்தைத் தொடா்ந்து இங்கு வந்த ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் பிரவீனாமேரி, குறைகள் சரிசெய்யப்பட்டு தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.