வீணாகும் மக்களின் வரிப் பணம்!
அரியலூர், மார்ச் 21: அரியலூரில் புதை சாக்கடைத் திட்டப் பணிக்காக ஒரு மாதத்துக்கு முன் போடப்பட்ட தார்ச் சாலையில் மீண்டும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அரியலூர் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, புதை சாக


அரியலூர், மார்ச் 21: அரியலூரில் புதை சாக்கடைத் திட்டப் பணிக்காக ஒரு மாதத்துக்கு முன் போடப்பட்ட தார்ச் சாலையில் மீண்டும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
அரியலூர் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, புதை சாக்கடைத் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, தார்ச் சாலை அமைக்கலாம் என பொதுமக்களும், சமூக நல ஆர்வலர்களும் வலியுறுத்தியதை கேட்காமல், தார்ச் சாலையை வேக வேகமாக அமைத்துவிட்டு, தற்போது புதை சாக்கடைக்காக அந்தச் சாலையில் பள்ளம் தோண்டியிருப்பது பொதுமக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
அரியலூர் நகரில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு, சாலையோரங்களில் கழிவுநீர் செல்ல சாக்கடைகள் அமைக்கும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. இதே நிலைதான் சாக்கடைகள் அமைக்கும் பணியிலும்.
இதனிடையே, பிப்ரவரி மாத மூன்றாவது வாரத்தில் திடீரென அரியலூர் அண்ணா சிலை பகுதியிலிருந்து சத்திரம் வரை புதிதாக தார்ச் சாலை அமைக்கப்பட்டது. சாக்கடை அமைப்புக்காக வெட்டப்பட்ட குழிகளிலிருந்து எடுக்கப்பட்ட மண் குவியல்களை அகற்றும் முன்னரே, அவசர அவசரமாக 2 நாள்களில் இரவோடு இரவாகத் தார்ச் சாலை அமைக்கப்பட்டது. இவ்வளவு விரைவாக சாலை அமைக்கப்பட வேண்டியதன் அவசியம்தான் என்ன? என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால், சம்பந்தப்பட்ட துறையினர் இதை காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. தங்களின் வேலையில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள், தார்ச்சாலை அமைத்தார்கள்.
இவ்வாறு அவசரகதியில் போடப்பட்ட தார்ச் சாலை கடந்த 2 நாள்களுக்கு முன்னர் புதை சாக்கடைத் திட்டப் பணிக்காகத் தோண்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியது:
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அரியலூரில் தொடங்கப்பட்ட புதை சாக்கடைத் திட்டப் பணிக்காக பல தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, குழாய்கள் புதைக்கப்பட்டு, பணிகள் முடிவடைந்து தார்ச் சாலைக்காக ஏங்கும் தெருக்கள் பல இருக்க, நல்ல நிலையில் இருந்த சாலையில் மீண்டும் புதிதாக தார்ச் சாலையை அமைத்து, அந்தச் சாலையை மீண்டும் தோண்டியிருக்கும் இந்த நிகழ்வால் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் ராஜாஜிநகர், பெரியார் நகர், புது மார்க்கெட் தெரு (ஆயுதப் படை வளாகத்துக்கு அருகிலுள்ள பகுதி), விளாங்காரத் தெரு போன்ற பல தெருக்களில் சாலையின் நிலைமை மிகவும் மோசமாகவும், வாகனங்கள் செல்ல முடியாத நிலையிலும் உள்ளன. அந்தப் பகுதிகளில் தார்ச் சாலை அமைப்பதில் கவனம் செலுத்தியிருந்தால் வரவேற்று இருக்கலாம். ஆனால், அதற்குரிய நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
இனியாவது முறைப்படுத்தப்படுமா?: மக்கள் வரிப் பணத்தைக் கொண்டுதான் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், அதிகாரிகளின் முறையற்ற, திட்டமிடாத நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு இடையூறுகள்தான் ஏற்படுகின்றன.
இனியாவது புதை சாக்கடைத் திட்டப் பணிகள் முழுமையாக முடிந்த பின்னர் தார்ச் சாலைகள் அமைக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே புதை சாக்கடைத் திட்டப் பணிகள் முடிந்த பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...