தொல்லுயிரிகளின் அருங்காட்சியகம் அமைக்கப்படுமா?
அரியலூர், மார்ச் 14: சுமார் 32 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்த அரியலூர் மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற பல்வேறு தொல்லுரியிரிகளைக் காக்கும் வகையில், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ப


அரியலூர், மார்ச் 14: சுமார் 32 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்த அரியலூர் மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற பல்வேறு தொல்லுரியிரிகளைக் காக்கும் வகையில், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை புவியியலாளர்கள் மட்டுமன்றி, சமூக நல ஆர்வலர்களாலும் தற்போது எழுப்பப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டமாக இருந்தாலும், அரசுக்கு வருவாயைத் தரக்கூடிய சுண்ணாம்புக் கல் சுரங்கங்களையும், சிமென்ட் ஆலைகளையும் அதிகம் கொண்ட மாவட்டமாக அரியலூர் மாவட்டம் திகழ்கிறது.
இதே மாவட்டத்திலுள்ள ஜயங்கொண்டம் பகுதியில் நிலக்கரியும், அருகிலுள்ள கடலூர் மாவட்டத்தின் நெய்வேலி பகுதியில் நிலக்கரியும் கிடைக்கின்றன.
ஒருங்கிணைந்த பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் மனித இனம் தோன்றுவதற்கு முன்பு கடலாக இருந்து வந்ததாகவும், பின்னர் புவியில் ஏற்பட்ட மாற்றத்தால் கடல் பகுதி மறைந்து, மனிதர்கள் வாழும் பகுதியாக மாறிவிட்டதாகவும் புவியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருங்கிணைந்த பெரம்பலூர்- அரியலூர் மாவட்டம் கடலாக இருந்த போது அங்கு வாழ்ந்த பல்வேறு தொல்லுயிரிகள் (ஃபாசில்கள்) வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்களாக, அதனுடைய எச்சங்களை புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான தொல்லுரியிரிகள் கிடைக்கப் பெற்றாலும், சுமார் 320 வகையான தொல்லுயிரிகளை புவியியலாளர்கள் கண்டறிந்து, அவற்றைப் பாதுகாத்து வருகின்றனர்.
அவ்வாறு கண்டறியப்பட்டவைகளில் அரியலூர் மாவட்டம், பனங்கூர் பகுதியில் அமோனஸ் (சுருட்டு நத்தை), பெரியநாகலூர் பகுதியில் கிரேபியா, காட்டுப்பிரிங்கியம் பகுதியில் அலெக்டோரனியா (ஒரு பக்க உயிரி), ஹெக்சோகைரா, பெலமனைட்ஸ் போன்ற தொல்லுயிரிகள் கண்டறியப்பட்டுள்ளன.
தொல்லுரியிகளுக்கான அருங்காட்சியகம் அவசியம் தேவை:
அரியலூர் மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற தொல்லுரியிகளின் தொகுப்பைக் கொண்டு, கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியகத்தில் தனிப் பகுதி அமைக்கப்பட்டிருக்கும் போது, அந்தத் தொல்லுரியிரிகளைக் கொண்ட இந்த மாவட்டத்தில் அதற்கான அருங்காட்சியகம் அமைப்பது அவசியம் என்கிறார் அரியலூரைச் சேர்ந்த புவியியலாளர் எஸ்.எம். சந்திரசேகர்.
அரியலூர் பகுதி கடலாக இருந்த போது இங்கிருந்த உயிரினங்கள் எல்லாம் தற்சமயம் சுண்ணாம்புக் கல்லோடு அப்படியே உள்ளன. சுண்ணாம்புக் கல்லின் வேதி மாற்றத்தின் காரணமாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்தது போல, இந்தத் தொல்லுரியிரிகள் எல்லாம் அழியாமல் உள்ளன. இதுபோன்ற நிலை வேறு எங்கும் இல்லை என்கிறார் அவர்.
மேலும், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள காரை, தெரணி பகுதிகளிலும் சில தொல்லுரியிரிகள் இருக்கின்றன.
இவ்வாறு இரு மாவட்டங்களிலும் உள்ள பகுதிகளில் கடலாக இருந்த போது வாழ்ந்த தொல்லுரியிகளின் எச்சங்கள் கிடைத்து வரும் நிலையில், அவற்றைப் பாதுகாத்து, வருங்காலச் சமுதாயத்தினருக்கு எடுத்துரைக்கும் வகையில், அதற்கான அருங்காட்சியகத்தை அமைப்பது அவசியம்.
அரியலூர் மாவட்டம் கடலாக இருந்ததை மெய்ப்பிக்கும் வகையில், கீழப்பழூர்- வாரணவாசிக்கு இடையே உள்ள பகுதியை புவியியாலாளர்கள் பேர்டுலாண்ட் டோபோகிராபி என்று அழைக்கிறார்கள். இதை உபயோகப்படாத கடல்சார் மண் வகை அல்லது பயன்பாடில்லாத கூடு என்று கூறலாம்.
மேடு, பள்ளமாக உள்ள பகுதியில் (கடல் இருந்ததற்கான தோற்றத்தை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது இந்தப் பகுதி) அதன் இயற்கை நிலையில் எந்தவித மாற்றத்தையும் செய்யாமல், மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற தொல்லுரியிரிகளைக் கொண்டு அருங்காட்சியகத்தை அரசு அமைக்க வேண்டும் என்றார் சந்திரசேகர்.
அரசிடம் வலியுறுத்துவேன்: பல்வேறு சிறப்புகள் உடைய அரியலூர் மாவட்டத்தில் தொல்லுரியிரிகளைக் கொண்டு அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் வலியுறுத்துவேன் என்றார் அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. மணிவேல்.
எனவே, அரியலூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், தொல்லுயிரிகளின் அருங்காட்சியகத்தை அரியலூரில் அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...