கிராமச் சாலை தரத்தில் தேசிய நெடுஞ்சாலை!
அரியலூர், செப்.6: திருச்சியிலிருந்து சிதம்பரம் வரை செல்லும் மாநிலச் சாலை தேசிய நெடுஞ்சாலையாகத் தரம் உயர்த்தப்பட்டும், மேம்பாடு செய்யப்படாததால் பல இடங்களில் இந்தச் சாலை கிராமச் சாலை போலக் காணப்படுகிற


அரியலூர், செப்.6: திருச்சியிலிருந்து சிதம்பரம் வரை செல்லும் மாநிலச் சாலை தேசிய நெடுஞ்சாலையாகத் தரம் உயர்த்தப்பட்டும், மேம்பாடு செய்யப்படாததால் பல இடங்களில் இந்தச் சாலை கிராமச் சாலை போலக் காணப்படுகிறது.
திருச்சி, அரியலூர், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களை இணைக்கும் வகையிலும், அரியலூர் மாவட்டத்திலுள்ள சிமென்ட் தொழில்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்கள், உற்பத்தி செய்யப்பட்ட சிமென்ட் மூட்டைகளை ஏற்றிவரும் கனரக வாகனங்களின் பயன்பாட்டால், மாநிலச் சாலையாக இருந்த திருச்சி- சிதம்பரம் சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையாக (எண் 227) ஆக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சாலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமென்ட் தொழில்சாலைகளுக்குத் தேவையான உற்பத்திப் பொருள்களை ஏற்றி வரும் கனரக வாகனங்களும், திருமழப்பாடி மணல் குவாரியிலிருந்து திருச்சி வழியாகவும், அரியலூர் வழியாகவும் பெரம்பலூர் நோக்கிச் செல்லும் மணல் லாரிகள், பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் என தினமும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றன.
இந்தச் சாலை தேசிய நெடுஞ்சாலைக்கான அறிகுறி ஏதும் இல்லாமல், கிராமப்புறங்களில் உள்ளது போல ஆங்காங்கே மேடு, பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. சில இடங்களில் குறிப்பிட்ட தொலைவுக்கு சாலைகளே இல்லாமல் ஜல்லிக்கல்கள் பெயர்ந்துள்ளன.
திருச்சி கொள்ளிடம் டோல்கேட்டில் தொடங்கும்தேசிய நெடுஞ்சாலையில் (எண் 227) புள்ளம்பாடி, கல்லக்குடி வரையிலான சாலை போக்குவரத்துக்கு ஏற்றதாக உள்ளது. தென்னரசூர், கீழரசூர், கல்லகம், கல்லகம் கேட், மேலப்பழூர், கீழப்பழூர், பொய்யூர், அதைத் தொடர்ந்து வி. கைகாட்டி, விளாங்குடி, தத்தனூர், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம் வழியாக சிதம்பரம் செல்லும் சாலை போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை.
ஏற்கெனவே, அதிகளவு சுமைகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் சாலைகள் சேதமடைந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போதுள்ள சாலை மேலும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. இந்தச் சாலையில் இரு சக்கர வாகனங்களில்கூட செல்லமுடியவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருச்சியிலிருந்து பெரம்பலூருக்கு 50 நிமிஷங்கள் முதல் ஒரு மணி நேரத்துக்குள் சென்றுவிடும் நிலையில், தற்போது திருச்சியிலிருந்து கீழப்பழூர் செல்வதற்கே ஒன்றரை மணி முதல் ஒன்றே முக்கால் மணி நேரம் ஆகிறது. சாதாரணப் பேருந்துகளில் ஏறிவிட்டால் இன்னும் அரை மணி நேரம் கூடுதலாகிறது.
இந்தச் சாலை மோசமாக இருப்பதால், அரியலூரிலிருந்து திருச்சிக்கு செல்பவர்கள் பலர் பெரம்பலூர் வழியாக செல்கின்றனர். இதுபோல, ஜயங்கொண்டம், அரியலூர் வழியாக திருச்சி சென்றவர்கள் கும்பகோணம் சென்று அங்கிருந்து தஞ்சாவூர், திருச்சி சென்றுவிடும் நிலையும் உள்ளது.
சாலையைத் தரம் உயர்த்தும் பணிகள் எப்போது?: திருச்சி- சிதம்பரம் இடையிலான சாலையை இருவழிச் சாலையாக தரம் உயர்த்துவதாகக் கூறி, கடந்த ஆண்டு பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
அதில், திருச்சி மாவட்டம்- லால்குடி, அரியலூர் மாவட்டம்- ஜயங்கொண்டம், கடலூர் மாவட்டம் - காட்டுமன்னார்குடி ஆகிய நகரங்களில் புறவழிச்சாலை அமைத்து சாலையைத் தரம் உயர்த்தி, இருவழிச் சாலையாக அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு, இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.
தனியார் நிறுவன உதவியுடன் 30 மாதங்களில் ரூ.410 கோடியில் இப் பணிகள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. விழுப்புரம் கோட்ட அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் இந்தச் சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டுமென அரியலூர் மாவட்ட மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மாநிலத்தின் பெரும்பான்மையான தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் அதிவேகச் சாலைகளாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில், திருச்சி - சிதம்பரம் சாலையில் அரியலூர், ஜயங்கொண்டம் வரையிலான சாலை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்தச் சாலையைச் சீரமைக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...