நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கண்காணிப்பு, தடுப்பு ஏதும் இல்லை சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கட்டண வசூல் அமோகம்

திருநெல்வேலி, மே 27: சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் பி.இ. படிப்புக்கான கட்டணத்தை அரசு இறுதி செய்யாத நிலையில், கல்லூரிகள் தங்கள் விருப்பம்போல அபரிமிதமான கட்டணங்களை

News image
Updated On :26 டிசம்பர் 2023, 6:17 am

ப. இசக்கி

திருநெல்வேலி, மே 27: சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் பி.இ. படிப்புக்கான கட்டணத்தை அரசு இறுதி செய்யாத நிலையில், கல்லூரிகள் தங்கள் விருப்பம்போல அபரிமிதமான கட்டணங்களை வசூல் செய்து வருகின்றன.

 கடந்த ஆண்டு அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ. 62,500. ஆனால் இந்த ஆண்டு ரூ. 75 ஆயிரம் முதல் ரூ. 99 ஆயிரம் வரை கல்லூரிகளில் வசூலிக்கப்பட்டு வருகிறது.

 சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சட்டவிரோத நன்கொடை வசூல் தவிர, கட்டண வசூலிலும் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது. எனவே, கட்டணத்தை நிர்ணயிக்க அரசு அமைத்த நீதிபதி ராமன் குழுவின் பரிந்துரையின்பேரில் கடந்த ஆண்டு பி.இ. படிப்புக்கான கட்டணம் ரூ. 62,500 என நிர்ணயிக்கப்பட்டது.

 இந்த கட்டணம் போதாது என்றும், ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் கல்லூரிகளின் நிர்வாகச் செலவுகள் அதிகரித்துள்ளதால் கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனவும் கல்லூரி நிர்வாகங்கள் அரசை வலியுறுத்தி வருகின்றன.

 தற்போது, நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் குழு இந்த கட்டண விவகாரம் குறித்து விவாதித்து வருகிறது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாலோசனை தொடங்கும். ஜூலை 5 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்துள்ளார்.

 அதுமட்டுமின்றி, கட்டணத்தை உயர்த்த அரசு சம்மதிக்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அப்படியானால் கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணமே இந்த ஆண்டும் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது. கட்டண உயர்வு மாணவர்களையும் பெற்றோரையும் பாதிக்கும். கடந்த ஆண்டு இந்த கட்டணப் பிரச்னை கூட்டணிக் கட்சியான பாமகவினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. எனவே, தற்போதைய மாறுபட்ட அரசியல் சூழ்நிலையில் கட்டணத்தை உயர்த்த அரசு சம்மதிக்காது என கல்வித்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

 கூடுதல் கட்டணம் வசூல்: தற்போது, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந் நிலையில் அரசின் விதிமுறைகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு தமது விருப்பம்போல கட்டணங்களை வசூலித்து வருகின்றன.

 மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வரும் கணினித் துறை பாடப் பிரிவுகளுக்கு ரூ.75 ஆயிரம் வரையிலும், அதிக கிராக்கி உள்ள "அடிப்படை பொறியியல்' துறைகளுக்கு ரூ. 99 ஆயிரம் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நன்கொடை தனி. சுயநிதி பொறியியல் கல்லூரி தொடர்ந்த வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த கட்டண வசூல் நடைபெற்று வருகிறது.

 இவ்வாறு வசூல் செய்யும் கட்டணத்தில், ரூ. 62,500-க்கு மட்டுமே ரசீது கொடுக்கப்படுவதாகவும், எஞ்சிய தொகையை "சீருடை, புத்தகம் உள்ளிட்ட இதர செலவினங்கள்' என பல இனங்களில் வசூலிப்பதாகவும் சுயநிதி பொறியியல் கல்லூரி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

 நீதிபதி பாலசுப்பிரமணியன் குழு கடந்த ஆண்டின் கட்டணத்தை இந்த ஆண்டுக்கும் பரிந்துரை செய்தால், மாணவர்களிடம் வசூல் செய்த கட்டணத்தில் மீதியைத் திரும்பக் கொடுத்து விடுவோம் என கல்லூரி நிர்வாகங்கள் கூறுகின்றன. ஆனால் "யானை வாய்க்குள் போன கரும்பு மீளாது' என்பது பெற்றோர்களின் கருத்து. எஞ்சிய தொகையை வேறு ஏதேனும் காரணத்தைக் கூறி சரிசெய்து விடுவார்கள் என்பது அவர்களுடைய வாதம்.

 அதிகாரம் இல்லை:இந்த முறைகேடான கட்டண வசூலைத் தடுக்கவோ, கண்காணிக்கவோ அரசிடம் சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மண்டல அளவிலான அண்ணா பல்கலைக்கழகங்கள் இந்த முறைகேட்டைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றால், அவற்றுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என அதன் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

 முறைகேட்டைச் சுட்டிக்காட்டி கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளுக்கான அங்கீகாரம் வழங்குவதில் மட்டுமே பல்கலைக்கழகங்கள் "கெடுபிடி' செய்ய முடியும். அதுவும் "அரசியல் செல்வாக்கு'டன் காரியத்தை முடித்துவிட்டு சென்று விடுவதால் கட்டணப் பிரச்னையில் பல்கலைக்கழகங்களால் ஒன்றும் செய்ய இயலாத நிலையே உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

 அதைவிட முக்கியம், பாதிக்கப்படும் பெற்றோர் எவரும் எழுத்துபூர்வமாக புகார் கொடுக்க முன்வருவதும் இல்லை.

 எனவே, அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு உரிய அதிகாரம் வழங்குவதோடு, கல்லூரிகளில் திடீர் சோதனை மற்றும் தீவிரமான கண்காணிப்பு மூலம் மட்டுமே இந்த முறைகேட்டைத் தடுக்க முடியும் என்ற நிலையே உள்ளது. அரசு தக்க தருணத்தில் தலையிட்டு மாணவர்களுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் உதவுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.