நெல்லை: மும்முனைப் போட்டியில் தேமுதிகவுக்கு எந்த இடம்?
திருநெல்வேலி, மே 12: மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ள திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தேமுதிக பெற உள்ள இடம் குறித்து அறிவதில் அரசியல் வட்டாரத்தில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இத் தொகுதியில்


திருநெல்வேலி, மே 12: மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ள திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தேமுதிக பெற உள்ள இடம் குறித்து அறிவதில் அரசியல் வட்டாரத்தில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இத் தொகுதியில் அதிமுக சார்பில் கே. அண்ணாமலையும், காங்கிரஸ் சார்பில் எஸ். ராமசுப்புவும், தேமுதிக சார்பில் எஸ். மைக்கேல் ராயப்பனும், சமக சார்பில் கரு. நாகராஜனும் பிரதான கட்சி வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இவர்களில் அதிமுக, காங்கிரஸ் கட்சிக்கு இடையே நேரடிப் போட்டி என்றாலும், தேமுதிக தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது.
அதிமுக வேட்பாளர் அண்ணாமலை ஏற்கெனவே ஒரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அந்த அரசியல் அனுபவத்தின் அடிப்படையிலும், கட்சி நிர்வாகிகளின் வழிகாட்டுதலின் பேரிலும் பிரசார திட்டங்களை தீட்டி தேர்தல் பணியாற்றி வந்தார்.
அதிமுகவில் தேர்தல் பணி பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், மாநகர் மாவட்டச் செயலர் பாப்புலர் வி. முத்தையா ஆகியோர் தலைமையில் இரு கோஷ்டிகள் செயல்பட்டு வந்தாலும், ஆரம்பத்தில் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றுவது போலத் தெரிந்தது.
ஆனால், நாளடைவில் கோஷ்டி பூசல் இலைமறை காயாக அவ்வப்போது வெளிப்பட்டு வந்தது. சில நேரங்களில் வெளிப்படையாகவே இந்த கோஷ்டி பூசல் தெரிந்தது.
அவரவர் செல்வாக்கை வெளிப்படுத்த, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் குழுக்களை அழைத்து வந்து காட்டியபோது இந்த கோஷ்டி பூசலை நேரடியாகவே காண முடிந்தது.
இத்தனைக்கும் நடுவில் தனது பிரசாரப் பணிகளை நிறைவு செய்து முடிவுக்காக காத்திருக்கிறார் அண்ணாமலை.
காங்கிரஸ் கோஷ்டி: காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராமசுப்புக்கு, கட்சியில் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கப்படவில்லை என்பதை அவரது கட்சிக்காரர்களே ஒத்துக் கொண்டுள்ளனர். தற்போதைய எம்.பி. ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், எம்.எல்.ஏ.க்கள் எச். வசந்தகுமார், வேல்துரை ஆகியோர் முழுமையாக தேர்தல் பணியில் ஈடுபடவில்லை என்பது ராமசுப்புவின் ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு.
இந்த குறைபாட்டை போக்கும் வகையில் ராமசுப்புக்காக கூட்டணி கட்சியான திமுகவினர் தீவிரமாக பணியாற்றினர். காங்கிரஸ் கட்சியினரின் எந்தவித "உதவியையும்' எதிர்பாராமல் மேலிடத்தின் உத்தரவின்பேரில் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பணியாற்றி உள்ளனர். அந்த உற்சாகத்தில் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறார் ராமசுப்பு.
தேமுதிக: அதிமுக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் ஒப்பிடும்போது தேமுதிகவின் தேர்தல் பணிகள் எதிர்க்கட்சி நிர்வாகிகள் கூட பாராட்டும் வகையில் அமைந்தது.
தேர்தல் பணிகளுக்கு இடையே, அக்கட்சியிலும் இருந்து வந்த கோஷ்டி பூசலால் மாநகர் மாவட்டச் செயலர் சீதாபதி ராமசுதர்சன் நீக்கப்பட்டார். எனினும், அதன் பாதிப்பு பிரசாரப் பணியில் தெரியாதவாறு இதர நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளித்து வந்தனர்.
தேமுதிக வேட்பாளர் எஸ். மைக்கேல் ராயப்பன் விரைவாக மேற்கொண்ட பிரசாரத்தால், அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்திக்க முடிந்தது.
அவருக்குக் கிடைக்கும் வாக்குகள் அதிமுக, காங்கிரஸ் ஆகியவற்றில் எவரது வெற்றியைப் பாதிக்கப் போகிறது என்பதும், தேமுதிகவை எந்த இடத்தில் வைக்கப் போகிறது என்பதும் அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...