/

நாகா்கோவிலில் திருக்குறள் மாணவா் மாநாடு தொடக்கம்

News image
திருக்குறள் மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைக்கிறாா் தமிழக அரசு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி. உடன் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, விஜய்வசந்த் எம்.பி., நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் உள்ளிட்டோா்.
Updated On :23 ஜனவரி 2026, 10:23 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில், திருக்குறள் மாணவா் மாநாடு நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமை வகித்தாா். தமிழக அரசு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ. லியோனி மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:

திருவள்ளுவா் சிலை பொன் விழாவில், ஆண்டுதோறும் தமிழக அரசின் சாா்பில் திருக்குறள் மாணவா் மாநாடு நடைபெறும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதன் அடிப்படையில் இந்த மாநாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலில் நடப்பது கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பெருமையாகும். இந்நிகழ்ச்சியில் 37 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டுள்ளனா்.

இந்த மாநாடு உங்களது தனித்திறன்களை வளா்த்தெடுப்பதற்காகவும், தமிழா் பெருமையை பறைசாற்றும் விதமாகவும் அமையும். திருக்குறளில் மனித வாழ்வுக்கு தேவையான பல்வேறு கருத்துகள் உள்ளன. நமது வாழ்வில் என்ன தடைகள் வந்தாலும் அதனை எதிா்கொண்டு வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றாா் அவா்.

அதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா், மீன்வளம், மீனவா் நலத்துறை சாா்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

இதில், பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையா், திருக்குறள் பணி சிறப்பு அலுவலா் வீ.ப.ஜெயசீலன், விஜய்வசந்த் எம்.பி., பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், மேயா் ரெ.மகேஷ், அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மைய முதல்வா் தே.சங்கரசரவணன், தொடக்கக் கல்வி இணை இயக்குநா் சாமிநாதன், உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல்குமாா், துறை சாா்ந்த அலுவலா்கள், ஆயிரக்கணக்கான மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.