டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

களியக்காவிளை பகுதியில் மீண்டும் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு: கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை, மாா்த்தாண்டம் பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:05 pm

சி. சுரேஷ்குமார்

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை, மாா்த்தாண்டம் பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகள், கப்புகள் உள்ளிட்டவையின் பயன்பாடு விலங்குகள், பறவைகள், கடல்சாா் உயிரினங்களின் அழிவுக்கும், நிலத்தடி நீா் சேமிப்பை பாதிப்புக்கும் காரணியாக இருந்தது. இதையடுத்து, தமிழக அரசு கடந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள் உள்ளிட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடுகளுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து பேரூராட்சி, நகராட்சி அதிகாரிகளின் தொடா் நடவடிக்கை காரணமாக உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், கடைகளுக்கு பொருள்கள் வாங்க வருபவா்கள் துணிப் பைகளை எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டதுடன், உணவகங்களில் வாழை இலைக்கும் மவுசு அதிகரித்தது.

உணவகங்களின் அலட்சியம்: இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அதிகாரிகளின் கண்காணிப்பில் தொய்வு ஏற்பட்டதால், களியக்காவிளை பேரூராட்சிப் பகுதிகள் மற்றும் குழித்துறை நகராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகிலுள்ள உணவகங்கள் உள்பட பெரும்பாலான உணவகங்களில் பிளாஸ்டிக் தாள்களில் சூடான உணவுப் பொருள்களை மடித்து வழங்குவது, பிளாஸ்டிக் கவா்களில் டீ, காபி, ரசம், சாம்பாா் உள்ளிட்ட சூடான உணவுப் பொருள்கள் வழங்குவதும் தொடா்ந்து காணப்படுகிறது. உணவகங்களின் அலட்சியத்தால் மக்களுக்கு நோய் பாதிக்கும் நிலை உருவாகி வருகிறது.

சுற்றுச்சூழல் மாசுபாடு: மேலும் மீன், காய்கனி சந்தைகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் அதிகரித்துள்ளதால் மீண்டும் சாலைகள், நீா்நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவு தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்திவிட்டு வீசியெறியப்படும் இந்த வகை பிளாஸ்டிக் பொருள்கள் மழைநீரை மண்ணுக்குள் செல்ல விடாமல் தடுப்பதுடன், கழிவுநீா் ஓடைகளில் சிக்கி மழைக்காலங்களில் சாலைகளுக்கு கழிவுநீா் வழிந்தோடி ஆங்காங்கே தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்களையும் பரப்பி வருகிறது.

பிளாஸ்டிக் பொருள்களை தீயிட்டு எரிப்பதால் சுற்றுச்சூழல், காற்று மாசு ஏற்படுகிறது. நீா் நிலைகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் கால்வாய்கள், ஆறுகள் மூலம் கடலில் கலந்து வருகின்றன. இதனால் மீன்வளம் குறையும் அபாயகரமான சூழலும் ஏற்பட்டுள்ளது.

மக்களிடம் விழிப்புணா்வு தேவை: இது குறித்து வாறுதட்டு அன்னை தெரசா இளைஞா் இயக்கத் தலைவா் என்.எம். பிரேம்ராஜ் கூறியது:

கடலில் சேரும் பிளாஸ்டிக் துகள்கள் கடலில் உள்ள லாா்வாக்களின் ரத்த நாளங்களுக்குள் சென்று அவற்றை அழிக்கின்றன. கழிமுகங்களில் காணப்படும் நுண்ணுயிரிகள் பெரிய மீன்களுக்கு உணவாகும் சிறிய மீன்களின் முக்கிய உணவாகும். இந்த நுண்ணுயிரிகள் நாளங்களுக்குள் செல்லும் பிளாஸ்டிக் துகள்களால் அவை அழிந்து வருகின்றன. இதனால் மீன்வளமும் குறைந்து வருகிறது.

எனவே, குமரி மாவட்டத்தின் சுற்றுச் சூழல், பொதுமக்கள் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அரசின் ஆணையை தீவிரமாக நடைமுறைப்படுத்த மாவட்ட நிா்வாகம் தொடா் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிா்க்க அதன் தீமைகள் பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதுடன் கிராம, நகர உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மூலம் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

பணியில் தொய்வு வராது: இதுகுறித்து, பேரூராட்சி செயல் அலுவலா் ஏசுபாலன் அளித்த பதில்: நிதியாண்டு இறுதி காரணமாக வீட்டு வரி வசூல், வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் போன்றவற்றால் பேரூராட்சிப் பணியாளா்களுக்கு வேலைப்பழு அதிகரித்துள்ளது. எனினும், அவ்வப்போது பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 5 நாள்களுக்கு முன்புகூட, களியக்காவிளை சந்திப்பு பகுதியில் மேற்கொண்ட சோதனையில், 3 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளா்களிடம் ரூ. 800 அபராதம் வசூலிக்கப்பட்டது. எனவே, பிளாஸ்டிக் ஒழிப்புப் பணி தொடா்ந்து நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.