/

ஆகஸ்ட் "விசிட்': அலறும் ஆசிரியர்கள்

திருநெல்வேலி, ஆக. 10: ஆகஸ்ட் மாதம் தொடங்கிவிட்டாலே அரசு உதவி பெறும் தனியார் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு கை, கால்கள் உதறல் எடுக்கத் தொடங்கி விடுகின்றன.   மாணவர்கள் எண்ணிக்கையை நிர்ணயம் செய்ய (அதன் மூ

News image
Updated On :25 டிசம்பர் 2023, 3:07 pm

ப. இசக்கி

திருநெல்வேலி, ஆக. 10: ஆகஸ்ட் மாதம் தொடங்கிவிட்டாலே அரசு உதவி பெறும் தனியார் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு கை, கால்கள் உதறல் எடுக்கத் தொடங்கி விடுகின்றன.

  மாணவர்கள் எண்ணிக்கையை நிர்ணயம் செய்ய (அதன் மூலம் ஆசிரியர்கள் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும்) இந்த மாதத்தில்தான் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு ஆய்வு செய்ய வருவார்கள் என்பதுதான் இந்த உதறலுக்கு காரணம்.

  தமிழ்நாட்டில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விதிமுறை கடந்த 1998 முதல் அமலில் உள்ளது. பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை முடிவடையும் ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களின் எண்ணிக்கையை கல்வித்துறை அதிகாரிகள் கணக்கிட்டு அதன் அடிப்படையில் அந்த பள்ளிக்கு அனுமதிக்கப்பட வேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கையை முடிவு செய்வர்.

  இந்த 40:1 என்ற மாணவர்-ஆசிரியர் விகிதமுறை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அவ்வளவு கடுமையாக அமல்படுத்தப்படுவதில்லை. ஆனால், ஆரம்பப் பள்ளிகளில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த விதிமுறை தீவிரமாக அமல்படுத்தப்பட்டபோது தென் மாவட்டங்களில் உள்ள ஆரம்பப்பள்ளிகளில் உபரியாக இருந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வட மாவட்டங்களுக்கு "பணி நிரவல்' மூலம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஆசிரியர் சங்கங்கள் அரசிடம் முறையிட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக "பணி நிரவல்' இல்லை. எனினும், "ஆகஸ்ட் விசிட்' தொடர்ந்து வருகிறது.

  ஆசிரியர்கள் உதறல்: அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கு ஆகஸ்ட் மாதத்தில் 3 முறை உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் சென்று ஆய்வு செய்வார்கள். இதில் ஒரு ஆய்வை சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் மேற்கொள்வார். இதர 2 ஆய்வுகளையும் மற்ற வட்டாரங்களைச் சேர்ந்த உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்கொள்வர்.

இந்த மூன்று ஆய்வின்போதும் பள்ளிக்கு வந்திருக்கும் மாணவர்கள் எண்ணிக்கையின் சராசரியைக் கணக்கிட்டு அது அந்த ஆண்டின் எண்ணிக்கையாக நிர்ணயம் செய்யப்படும்.

அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்படும்.

  உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் வருகையின்போது மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டால் ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையும் குறைந்து விடும். உதாரணமாக குறைந்தபட்சம் 25 மாணவர்கள் இருந்தால் 2 ஆசிரியர்கள் பணியாற்றலாம். 101 மாணவர்கள் இருந்தால் 3 ஆசிரியர்கள் பணியாற்றலாம்.

  ஆய்வுக் காலத்தில் மாணவர்கள் எண்ணிக்கை 100-க்கு குறைந்தால் இரண்டு ஆசிரியர் பணியிடம் மட்டுமே அனுமதிக்கப்படும். ஒரு ஆசிரியர் பணியிடம் உபரியாக கருதப்படும். அவர் "பணிநிரவல்'படி வேறு இடங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட வேண்டும். எனவே, ஆய்வின்போது மாணவர்கள் எண்ணிக்கையை 101 ஆக கணக்கு காட்டுவதற்காக முறைகேடுகள் நடைபெறுவதாக ஆசிரியர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

  ""ஆகஸ்ட் மாதம் என்பது கிராமப்புறங்களில் கோயில் திருவிழாக்கள் காலம். மேலும், சில நாள்களில் பெற்றோர்களே வந்து ஏதேனும் ஒரு காரணத்தை கூறி மாணவர்களை அழைத்துச் செல்வதும் உண்டு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அதைக் காரணமாக வைத்துக் கொண்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவுக்கு ஏற்ப அதிகாரிகளை "கவனிக்க' வேண்டிய நிலைமை உள்ளது'' என்பது ஆசிரியர்களின் புகார்.

  ""தென் மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகளில் ஒரு ஆசிரியருக்கு 25 முதல் 30 பிள்ளைகள்தான் உள்ளனர். மாணவர்களின் உண்மையான வருகை எண்ணிக்கையை வைத்து நிர்ணயம் செய்தால் ஆசிரியர் பணியிடம் காலியாகி வெளியூருக்கு பணிமாறுதலாகிச் செல்ல வேண்டிய நிலைமை வரும். எனவே, சில ஆசிரியர்களே ஆய்வுக்குச் செல்லும் அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்து "சரிக்கட்டும்' நடைமுறை உள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நிரந்தரத் தீர்வு:  கடந்த இரண்டு ஆண்டுகளாக "பணி நிரவல்' நடைமுறை இல்லை. அப்படி இருக்கும்போது இந்த ஆய்வு தேவையில்லை. அப்படியே ஆய்வு தேவை என்றால், மாணவர்களின் வருகையைக் கருத்தில் கொள்ளாமல் பதிவேட்டில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளலாம். இப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என நிர்ணயிக்க வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

  ""இது வழக்கமான நடைமுறைதான். இதில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை.

புகார் வந்தால் அதை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்போம்'' என சுருக்கமாக முடித்துக் கொண்டார் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வின்சென்ட் பாஸ்கர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.