தில்லி கல்லூரிகளில் கலந்தாய்வு முடிந்து வகுப்புகள் தொடங்கிவிட்டன. 100-க்கு 100 என்ற இலக்கில் தொடங்கிய கட்-ஆஃப் மதிப்பெண் பட்டியல், ஐந்து பட்டியலைத் தாண்டிய பிறகும் சிறந்த கல்லூரிகளில் சேருவதற்கு 96 சதவீதம் என்ற இறுதி "கட்-ஆஃப்' மதிப்பெண்ணாக முடிவடைந்தது.
தலைநகர் தில்லியில் உள்ள பள்ளிகளில் ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சம் மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பில் படித்துவிட்டு வெளியேறுகிறார்கள். ஆனால், அவர்களுக்குக் கல்லூரிகளில் உள்ள இடங்களோ 54 ஆயிரம்தான்.
இந்தப் போட்டியில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் (டிடிஇஏ) படித்துவிட்டு ஆண்டுதோறும் வெளியேறும் சுமார் 500 மாணவர்களின் நிலை திண்டாட்டமாக உள்ளது.
இந்த மாணவர்கள் பெரும்பாலும் சராசரி மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுபவர்கள். இவர்களுக்கு தற்போது நிலவும் 100-க்கு 100 என்ற கட்ஆஃப் மதிப்பெண் அடிப்படையிலோ இதர தகுதி அடிப்படையிலோ இடம் கிடைப்பது அரிது.
ஆகையால், தில்லி கல்லூரிகளில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு மிராண்டா ஹெüஸ் பெண்கள் கல்லூரி, வெங்கடேஸ்வரா கல்லூரி, தயாள் சிங் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்த் துறையில் தலா 5 முதல் 6 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இது போன்று டி.டி.இ.ஏ. பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்குப் பல ஆண்டுகளாக இந்தக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது.
லேடி ஸ்ரீராம் கல்லூரியிலும் செயல்பட்டு வந்த தமிழ்த் துறை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டுவிட்டது. இதனால் தமிழ் மாணவர்களுக்கு அங்கு இடம் வழங்கப்படுவதில்லை.
தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொது சமூகத்தின் போட்டிக்கு ஈடு கொடுக்க இயலாத சூழ்நிலை உள்ளது.
தில்லி கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சேருகின்றனர்.
வேறு சிலர் தமிழகத்துக்குச் சென்று உயர் கல்வி பயில்கின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் பள்ளிப் படிப்புடன் நின்றுவிடுகின்றனர்.
"தமிழ் மாணவர்களுக்காகத் தனிக் கல்லூரி தேவை'
இது குறித்து வெங்கடேஸ்வரா கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசியர், சிவ. விவேகானந்தன் கூறியது:
15 ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் உள்ள கல்லூரிகளில் சுமார் 45-க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் பயின்று வந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் எங்கள் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெறும். ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதற்கு மாணவர்களிடம் தமிழ் ஆர்வம் குறைந்ததே காரணம்.
இதை மாற்ற வேண்டுமானால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கண்டிப்பாகத் தமிழில் பேச வேண்டும். முன்பு தகுதி அடிப்படையில் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் சேர்ந்தனர். தற்போது குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களே தமிழ் பாடத்தைப் படிக்க வருகிறார்கள்.
தமிழ் இணைப் பேராசிரியர், ஸ்ரீநிவாசன்:
தற்போது கல்லுரிகளில் சேரும் மாணவர்கள் தங்கள் பெயரைக் கூட தமிழில் சரிவர எழுதவும் தெரியவில்லை. ஆனால், பிற பாடங்களில் அவர்கள் நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள். குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் சிலர் கல்லூரிப் படிப்பில் சேர வேண்டும் என்பதற்காகவே தமிழைப் பாடமாக எடுத்துப் படிக்கிறார்கள்.
இந்த நிலை மாற வேண்டுமானால் தில்லியில் தமிழ் மாணவர்களுக்காகத் தனி கல்லூரி ஒன்று அமைக்க வேண்டும். தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தில்லியில் தமிழ் உயர் ஆய்வு மையம் அமைக்க வேண்டும்.
தில்லி கல்லுரிகளில் தமிழ் மாணவர்களுக்கு தற்போது பி.ஏ. பிரிவு மட்டும் படிக்க இடம் வழங்கப்படுகிறது, இது அனைத்து பிரிவுகளுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றார்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே தில்லியில் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகள் தமிழ் ஆர்வலர்களால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
தற்போது தமிழ் கல்லூரி ஒன்றை அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
இதை நிறைவேற்ற தில்லி தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
தமிழ் மாணவர்களுக்கு விரைவில் கல்லூரி
தில்லியில் படிக்கும் தமிழ் மாணவர்கள் உயர் கல்வி பயில தமிழகத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலையைப் போக்க மோதி பாக் டி.டி.இ.ஏ. பள்ளியை கல்லூரியாக அடுத்த ஆண்டு தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டி.டி.இ.ஏ. செயலர் ராஜு தெரிவித்தார்.
இது குறித்து விரிவான ஆய்வு நடத்த தில்லிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 11 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் அடுத்த ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
தில்லியில் 80 சதவீதம் கல்லூரிகள் முன்பு பள்ளிகளாக செயல்பட்டு பின்னர் கல்லூரிகளாக தரம் உயர்த்தப்பட்டன. ஆகையால் மோதி பாக் டி.டி.இ.ஏ. பள்ளியை தமிழர்களுக்கான கல்லூரியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்திடம் கோரிக்கை வைக்கப்படும்.
மோதி பாக் பள்ளியில் ஏற்கெனவே கட்டமைப்பு வசதிகள் உள்ளதால் அனுமதி கிடைத்த உடன் அடுத்த கல்வி ஆண்டே கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதைப்போல் மயூர் விஹார் பகுதியில் உள்ள இடம் டி.டி.இ.ஏ. கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அங்கும் டி.டி.இ.ஏ. பள்ளியொன்றை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கப்படும். அடுத்த ஆண்டு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு பிரிவுடன் பள்ளி தொடங்கப்படும் என்று ராஜு நம்பிக்கை தெரிவித்தார்.
தில்லிப் பல்கலைக்கழகம்
மொத்த கல்லூரிகள் - 61
அரசு கல்லூரிகள் - 28
மொத்தம் - 54 ஆயிரம் இடங்கள்
பொதுப் பிரிவுக்கு 27,270 இடங்கள்
ஒபிசி பிரிவினருக்கு 14,500 இடங்கள்
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவினருக்கு 12,150 இடங்கள்.
இந்த ஆண்டு தமிழ் மாணவர் சேர்க்கை:
மிராண்டா ஹொஸ் கல்லூரி - 5 மாணவர்கள்
வெங்கடேஸ்வரா கல்லூரி - 6 மாணவர்கள்
தயாள் சிங் கல்லூரி - 4 மாணவர்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

