புது தில்லியின் முக்கிய சாலைகளில் ஒன்றான தீன்மூர்த்தி மார்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியிருப்புகள் நிறைந்த தெற்கு அவென்யூ சாலையும் சந்திக்கும் இடத்தின் மத்தியில் பரந்த புல்வெளியின் பின்னணியில் கம்பீரத் தோற்றத்தில் உள்ளது அந்த வெள்ளை நிற மாளிகை.
""அவர்கள் என்னை இந்தியாவின் பிரதமர் என்று அழைக்கின்றனர். ஆனால், இந்தியாவின் முதல் சேவகன் என்று நான் அழைக்கப்பட்டிருந்தால் அதுவே பொருத்தமாக இருக்கும்'' என்று கூறிய "நவீன இந்தியாவின் சிற்பி', குழந்தைகள் மாமா, பண்டித நேரு என்றெல்லாம் போற்றப்படும் பெருமைக்குரிய ஜவாஹர்லால் நேரு வாழ்ந்த இல்லம்தான் அது.
நாட்டின் முதல் பிரதமராகப் பதவியேற்றது முதல் உயிர் நீத்த 24.5.1964-ம் ஆண்டு வரை நேரு வாழ்ந்த இடம்தான் இந்த தீன்மூர்த்தி பவன்.
இந்த மாளிகையின் கீழ்தளத்தில் நுழைவோர் கண்ணில் தென்படுவது பண்டித நேருவின் திருவுருவப் படம். அதன் வழியாகப் பின்புறம் சென்றால் தோட்டத்தின் இடப்புறத்தில் உள்ள ஒரு சிறிய இடத்தில் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் பெயர் தாங்கிய அமர் ஜோதி ஒளிர்கிறது.
சுதந்திரப் போராட்டத் தலைவர்கள்: மகாத்மா காந்தியின் குறிப்புகள், அவரது புகைப்படங்கள், "ஹோம் ரூல்' இயக்கத்தைத் தோற்றுவித்த லோகமான்ய பால கங்காதர திலகர், அன்னிபெசன்ட் அம்மையார் ஆகியோரது படங்கள், முதல் சுதந்திரப் போர் பற்றிய படங்கள், ராணி லட்சுமிபாய் குதிரையில் போரிடும் காட்சி, சுவாமி தயானந்த சரஸ்வதி என பல தலைவர்களின் படங்கள் அறைகளில் அலங்கரிக்கின்றன.
இந்திய தேசியக் காங்கிரûஸ உருவாக்கிய அன்றைய சென்னை மாகாணத்தின் முக்கியத் தலைவர்களாக ஜி. சுப்பிரமணிய ஐயர், எஸ். சுப்பிரமணிய ஐயர், சேலம் சி. விஜயராகவாசாரியார், எஸ்.ஆர். முதலியார், காங்கிரஸ் தலைவர் டபிள்யூ. சி. பானர்ஜி உள்ளிட்டோரின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
முஸ்லிம் தலைவர்கள்: சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற மௌலானா முகம்மது அலி, ஹக்கீம் அஜ்மல்கான், டாக்டர் எம்.ஏ. அன்சாரி, எம்.ஏ. ஜின்னா, அமீர் அலி, சையது அலி ஆகிய பல்வேறு முஸ்லிம் தலைவர்களின் திருவுருவப் படங்களும் அலங்கரிக்கின்றன.இல்லத்தின் மாடியில் நேரு பயன்படுத்திய நூல் வாசிப்பு அறை, குடும்பத்தினர் அமரும் அறை, அலுவலக அறை, படுக்கை அறை ஆகியவை உள்ளன.
அமைதி விரும்பி... அகிம்சை அமைதியை போதித்த புத்த பெருமானை மிகவும் நேசித்தவராக தனது அலுவலக அறை, வாசிப்பு அறை, படுக்கை அறை ஆகிய இடங்களில் பல்வேறு வடிவிலான புத்தரின் சிலைகளை வைத்து அழகுபார்த்துள்ளார் நேரு.
புத்தகப் பிரியர்: புத்தக வாசிப்பில் மிகவும் விருப்பம் கொண்டவர் நேரு. இதற்குச் சாட்சியாக அவரது நூலக அறை காணப்படுகிறது. பல்வேறு நாட்டு அறிஞர்களின் நூல்கள், பலதுறை நூல்கள், நூலக அறைக் கண்ணாடி அலமாரியில் பொக்கிஷம் போல் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
பிரமாண்ட நூலகம்: அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக நினைவில்லம் அருகே உள்ள கட்டடத்தில் பிரமாண்ட நூலகம் இயங்குகிறது. சுமார் 5 லட்சம் புத்தகங்கள் வரை நூலகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அருங்காட்சியகத்தின் ஒருபுறம் நேரு கோளரங்கமும் உள்ளது.
தமிழகத் தலைவர்கள் படங்கள் எங்கே? அருங்காட்சியகத்தில் இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தமிழகத் தலைவர்கள் மகாகவி பாரதியார், காமராஜர், கக்கன், வ.உ. சிதம்பரனார், புலித்தேவன், நாமக்கல் கவிஞர் ஆகியோரின் புகைப்படங்கள் இல்லாமல் இருப்பது மனக்குறையை ஏற்படுத்துவதாக உள்ளது.
""அருங்காட்சியகத்தில் பல்வேறு வட இந்தியத் தலைவர்களின் புகைப்படங்கள் அதிக எண்ணிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களின் படங்கள் இல்லாமல் உள்ளது கவலை அளிக்கிறது'' என்று நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த எஸ்.பி. மோகன், கே. நல்லதம்பி, சந்திரசேகரன், பழனியாண்டி ஆகியோர் தெரிவித்தனர்.
தில்லி மாநகராட்சிப் பள்ளி தமிழாசிரியர் ஆர்.வி. முத்துராமலிங்கம் கூறியது:
இந்திய விடுதலைக்காக தென்னகத்தில் யாருமே போராடவில்லையா? வீரபாண்டிய கட்டபொம்மன், புலித்தேவன், வ.உ.சி., வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், மகாகவி பாரதியார் இன்னும் எத்தனையோ பேர் உள்ளனர். அருங்காட்சியகத்தில் இவர்களின் படங்களும் இடம்பெற வேண்டும் என்றார் அவர்.
இது குறித்து நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் துணை இயக்குநர் என். பாலசந்திரனிடம் கேட்டபோது, ""அருங்காட்சியகத்தை நவீனமயமாக்க மத்திய அரசு ரூ. 20 கோடி மதிப்பிலான திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி போன்றவர்கள் தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள், தகவல்களை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கியத் தகவல்கள் அடங்கிய சுதேசமித்திரன், மெட்ராஸ் மெயில் போன்ற செய்தித்தாள்கள் மைக்ரோ பிலிம்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் புகைப்படங்கள் பொதுமக்களால் வழங்கப்பட்டவை. தமிழகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களின் புகைப்படங்களை வழங்கினால் அவற்றையும் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்படும்'' என்றார்.
அருங்காட்சியகத்தின் தலைவராக பிரதமர் மன்மோகன் சிங், நிர்வாகக் கவுன்சில் தலைவராக டாக்டர் கரண் சிங் ஆகியோர் உள்ளனர். வரலாற்று அறிஞர் பேராசிரியர் மகேஷ் ரங்கராஜன், டாக்டர் என். பாலகிருஷ்ணன் ஆகியோரும் அருங்காட்சியகக் குழுவில் உள்ளனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்பட 17 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

