தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

யமுனை ஆற்றிலே... சூரிய பகவானுக்கு சட் பூஜை

மனிதன் தன் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் பஞ்ச பூதங்களான நீர், நிலம், காற்று, சூரியன், ஆகாயம் ஆகியவற்றை தெய்வமாகக் கருதி வழிபட்டான்.   தமிழகத்திலும் தை மாதத்தின் முதல் நாளில் சூரியனுக்குப் பொங்கல் படை

Updated On :19 செப்டம்பர் 2012, 11:13 pm

மனிதன் தன் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் பஞ்ச பூதங்களான நீர், நிலம், காற்று, சூரியன், ஆகாயம் ஆகியவற்றை தெய்வமாகக் கருதி வழிபட்டான்.

  தமிழகத்திலும் தை மாதத்தின் முதல் நாளில் சூரியனுக்குப் பொங்கல் படையலிட்டு வணங்குவதை மரபாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

அதேபோன்று, வட இந்தியாவில்  பிகார், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பூர்வாஞ்சல் பகுதி மக்கள் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் "சட் பூஜை'யை வெகு சிறப்பாக விரதமிருந்து கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

சட் என்ற வார்த்தைக்கு ஹிந்தியில் 6 என்ற எண்ணைக் குறிக்கும். அதாவது, ஹிந்து பஞ்சாங்கத்தில் சாந்திரமானத்தின்படி கார்த்திகை மாதம் 6-ம் நாளில் இந்த பூஜையைக் கொண்டாடுகின்றனர்.  நான்கு நாள் பூஜையின் முதல் நாளில் நதிக் கரையிலோ குளக் கரையிலோ புனித நீராடி வழிபாடு நடத்துகின்றனர். 2-ம் நாளில் விரதம் இருந்து மாலையில் பூஜைக்குப் பிறகு  விரதத்தை முடிக்கின்றனர்.

அப்போது, பாயசம், பழங்களை சூரிய பகவானுக்குப்படையலிட்டு வழிபாடு நடத்துவர்.  மூன்றாம் நாளில் வீட்டில் பிரசாதம் தயாரித்து அன்று மாலையில் ஆற்றின் கரையில் வைத்து சூரிய அஸ்தமன நேரத்தில் வழிபாடு நடத்தப்படும்.  நான்காம் நாளின் அதிகாலையிலேயே புனித நீராடி, சூரியோதயத்தின்போது பகவானுக்குப் பழங்கள், புஷ்பம் வைத்து பூஜை நடத்துவர்.

ஒரு மகிழ்ச்சியான பண்டிகையாகப் போற்றப்படும் சட் பூஜையை தில்லியில் வாழும் சுமார் 40 லட்சம் பூர்வாஞ்சல் மக்கள் இந்த ஆண்டு இரு தினங்களாக யமுனைக்கரையில் சிறப்பாகக் கொண்டாடினர்.

தோக்கர், சில்லா விஹார், ஐ.டி.ஓ. மேம்பாலம், கொண்டலா மேம்பாலம், உஷாம்பூர், பிரேம் பாய் பாலம், நரேலா உள்ளிட்ட பல இடங்களிலும் பூஜை நடத்துவதற்காக மக்கள் திரண்டனர்.

யமுனைக் கரையில் பூஜை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடங்களில் பழங்கள், பூக்கள் வைத்து தீபம் ஏற்றி பெண்கள் ஏராளமானோர் வழிபாடு செய்தனர். இதனால், செவ்வாய்க்கிழமை இரவு ஒளி வெள்ளத்தில் யமுனைக் கரை ஜொலித்தது.

நீர் நிலைப் பகுதிகளில் தீபம் ஏற்றிப் பலர் வழிபாடு நடத்துவதைக் காண முடிந்தது. இந்தியா கேட் பகுதி படகுக் குழாம் குளத்தின் கரையிலும் பெண்கள் பலர் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

இது குறித்து பிகாரைச் சேர்ந்த ஜெயகுமார் கூறுகையில், ""பரம்பரை பரம்பரையாக நாங்கள் குடும்பத்துடன் விரதமிருந்து சட் பூஜையைக் கொண்டாடி வருகிறோம். சூரிய வழிபாட்டுப் பூஜையின்போது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பழம், விருந்து கொடுத்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்கிறோம். நாம் வாழ்வதற்கு ஆதாரமான சக்தியை அளிக்கும் சூரியக் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் நல்வாய்ப்பாகவும் கருதுகிறோம்'' என்றார்.

புதன்கிழமை அதிகாலையில் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் சூரியோதயத்திற்கு முன்பே யமுனை ஆற்றின் கரையில் கூடி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதற்காக யமுனை நதியில் 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. மாநில அரசு, தில்லி மாநகராட்சி சார்பில் தேவையான சுகாதார, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.    

சட் பூஜையின்போது எந்த அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. யமுனையில் ஆழம் உள்ள பகுதிக்கு சிறுவர்கள் சென்றுவிடாத வகையில் கம்புகள் ஊன்றப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சந்தேக நபர்களைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

மீட்புப் படகுகளும், நடமாடும் கழிவறை, ஆம்புலன்ஸ், மருத்துவ வசதிகள் கொண்ட வேன்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.