/

கொள்ளிடம் சோதனை சாவடிக்குபுதிய கட்டடம் கட்டப்படுமா?

சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் உள்ள சோதனைச் சாவடிக்கு புதிய கட்டடம் கட்டி கூடுதல் காவலர்களைப் பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:17 pm

எம். ஞானவேல்

சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் உள்ள சோதனைச் சாவடிக்கு புதிய கட்டடம் கட்டி கூடுதல் காவலர்களைப் பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சீர்காழி அருகே கொள்ளிடம் பாலத்தின் ஒரு எல்லையில் நாகை மாவட்ட எல்லையும், மறுமுனையில் கடலூர் மாவட்ட எல்லையும் உள்ளது. நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கடலூர், புதுச்சேரி, சென்னை செல்லும் அனைத்து வாகனங்களும் கொள்ளிடம் பாலத்தைக் கடந்துதான் செல்லவேண்டும்.
அதேபோல் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நாகை மாவட்டத்திற்கு நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கொள்ளிடம் பாலம் மிக இன்றியமையாதது. இவ்வாறு காலை, இரவு என 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெறும் பிரதானப் பகுதியாக உள்ளதால் கொள்ளிடம் பகுதியில் காவலர் சோதனைச் சாவடிஅமைக்கப்பட்டு காவலர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனத்தணிக்கை, கண்காணிப்பில் ஈடுபட நாகை மாவட்ட காவல்துறை சார்பில் பாலம் கட்டப்பட்ட ஆண்டிலிருந்தே கொள்ளிடம் பாலத்தின் அருகில் சோதனைச் சாவடி இயங்கிவருகிறது. இந்த சோதனைச் சாவடியில் ஒரு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் நான்கு காவலர்கள் 8 மணி நேரம் என 3 ஷிப்டுகளாகப் பணிபுரிந்து வந்தனர்.
இந்த சோதனைச் சாவடி கட்டடம் இரண்டு காவலர்கள் மட்டும் உள்ளே இருக்கக்கூடிய அளவிற்கு மிகக் குறுகிய அறையாக உள்ளது. போதிய இடவசதி இல்லாத குறுகிய கட்டடமாக மட்டும் இருப்பதோடு மழைக்காலங்களில் மழைநீர் கசிந்து உள்ளே புகும்நிலையில் உள்ளது.
காவலர்களுக்கு உணவருந்தக்கூட இடம் இல்லை. மேலும் கழிவறை வசதியும் இல்லை. பல குறைபாடுகளுடன் பெயரளவிற்கே இயங்கி வரும் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகில் உள்ள கொள்ளிடம் காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
நாகை-கடலூர் மாவட்ட எல்லையில் உள்ள மிக முக்கியமான காவலர் சோதனைச் சாவடி இதுவரை எந்த ஆட்சியாளர்களாலும் கண்டுகொள்ளப்படாமல், கவனிப்பாரற்று உள்ளது. அûனைத்து வாகனங்களையும் கண்காணித்து சோதனை செய்யும் கொள்ளிடம் சோதனைச் சாவடியை காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் அதிக இடவசதியுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுப்பதோடு நேரடியாக நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூடுதல் காவலர்களை சோதனைச் சாவடி பணிக்கு மட்டும் தனியாகப் பணியமர்த்தவேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.