/

4 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத திட்டை ஊராட்சி சாலை

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த திட்டை ஊராட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:21 pm

எம். ஞானவேல்

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த திட்டை ஊராட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழியை அடுத்த திட்டை, தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம், சிவனார்விளாகம் ஆகிய மூன்று கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவியர் தினம்தோறும் சீர்காழி நகர் பகுதிக்கு வந்து செல்லும் பிரதான சாலையான சீர்காழி ஒன்றியம் திட்டை ஊராட்சியில் உள்ள சின்னதம்பி நகர் முதல் காமாட்சி நகர் வரையிலான சுமார் 2 கி.மீ. சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களும், அப்பகுதியில் உள்ள சின்னதம்பி நகர், யுனிவர்சல் நகர், வைத்தியநாதன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோரும் இந்த சாலையை கடந்துதான் சீர்காழி நகருக்கும், பிற பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர். சாலையில் உள்ள பள்ளங்களால் வாகனங்கள் விபத்துகளைச் சந்திக்கின்றன.
இந்த சாலை கடந்த 2011 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன்பிறகு பழுதடைந்த சாலை 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை சரிசெய்யப்படவில்லை. இதனால் அவதிப்படும் பொதுமக்கள் சாலையை சீரமைத்துத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு  பலமுறை தனித்தனியே கோரிக்கை மனு கொடுத்தும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து திட்டை கிராமத்தைச் சேர்ந்த எஸ். ராமானுஜம் கூறியது:
சாலையை சீரமைக்கக் கோரி பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகையால் அடுத்தகட்டமாக கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.
பெரியசாமி: திட்டை ஊராட்சியில் அதிகளவு நகர்ப் பகுதிகள் உள்ளன. சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள், 40-க்கும் மேற்பட்ட நகர்களில் வசிக்கும் பொதுமக்கள், மாணவ, மாணவியர், அலுவலகம், வேலைக்குச் செல்வோர் என தினம்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்று வரும் இந்த பிரதான சாலையில் சுமார் ஒன்றரை கி.மீ. சாலை கடந்த 4 ஆண்டுகளாக குண்டும், குழியுமாகவே உள்ளது.
திட்டை ஊராட்சியில் பழுதடைந்த சாலை சீரமைக்கப்படாமலும், சீரமைக்க முயற்சி செய்யப்படாமலும் இருப்பது ஏன் என்பது தெரியவில்லை.
கே. தியாகராஜன்: திட்டை ஊராட்சியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் கிராம மக்கள் போராட்டம் அறிவித்தோம்.
இதையொட்டி வட்டாட்சியர் தலைமையில் சீர்காழியில் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தி பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் சாலை அமைக்கப்படும் என உறுதியளித்தனர்.  ஆனால், சாலை அமைக்கப்படவில்லை. இரண்டு மாதங்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.
ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் எஸ். செல்வமணி: கடந்த 2011 ஆம் ஆண்டு  சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 9 லட்சம் செலவில் திட்டை ஊராட்சியில் மேற்கண்ட ஒன்றரை கி.மீ. தொலைவு சாலை அமைக்கப்பட்டது. அதன்பிறகு, போக்குவரத்துப் பயன்பாட்டினால் சாலை பழுதடைந்தது. பல ஆண்டுகள் ஆகியும் சாலை சீரமைக்கப்படவில்லை. பலமுறை  கோரிக்கை விடுத்தும், போராட்டங்கள்  அறிவித்தும் சாலை அமைக்கப்படவில்லை.
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளையும், திட்ட அதிகாரியையும்  தொடர்புகொண்டு கேட்டபோது நிதி ஆண்டு நிறைவடைந்துவிட்டதால் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு சாலை அமைக்கப்படும் என உள்ளிட்ட பல காரணங்கள் கூறி தட்டிக்கழிக்கின்றனர். கடந்த காலத்தில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அதில் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற மனு செய்யவுள்ளேன் என்றார்.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமியிடம் கேட்டபோது, திட்டை ஊராட்சியில் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா? என்று ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.