பாதுகாப்பின்றி சீர்காழி ரயில் நிலையம்
சீர்காழி ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதால், இந்த ரயில் நிலையம் மூலமான பயணத்தை பொதுமக்கள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


சீர்காழி ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதால், இந்த ரயில் நிலையம் மூலமான பயணத்தை பொதுமக்கள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சீர்காழி பனங்காட்டாங்குடி செல்லும் சாலையில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. பயணிகள் ரயில் மட்டும் நின்று சென்று வந்த சீர்காழி ரயில் நிலையத்தில் 2007-ஆம் ஆண்டில் நிறைவடைந்த மயிலாடுதுறை - விழுப்புரம் அகல ரயில்பாதை பணிகளுக்குப் பிறகு தொலைதூர மற்றும் விரைவு ரயில்கள் அதிகளவு நின்று செல்கின்றன. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நவகிரக ஸ்தலங்களான வைத்தீஸ்வரன்கோயில் செவ்வாய் ஸ்தலம், திருவெண்காடு புதன் ஸ்தலம் உள்ளிட்ட கோயில்களுக்கு ரயில் மார்க்கமாக குடும்பத்துடன் வரும் பக்தர்கள் சீர்காழி ரயில் நிலையத்தில் இறங்கிச் செல்கின்றனர்.
சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள பஞ்ச நரசிம்மர் கோயில்கள், 108 திவ்ய தேசங்களில் திருநாங்கூரைச் சுற்றியுள்ள 11 பெருமாள் கோயில்களுக்கு ஏராளமான வெளியூர், வெளி மாநில பக்தர்கள் அதிகம் பேர் ரயில் பயணமாக வருகின்றனர்.
சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வர்த்தகர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் தற்போது எளிதாக செலவு குறைவான ரயில் பயணத்தை அதிகம் தொடர்கின்றனர். ஆனால், இவ்வாறு ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சீர்காழி ரயில் நிலையத்தில் போதிய பாதுகாப்பு இல்லாத அசாதாரண சூழல் நிலவுகிறது.
சீர்காழி மார்க்கமாக திருச்செந்தூர், ராமேசுவரம், சென்னை, திருப்பதி, எழும்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட தொலைதூரம் செல்லும் ரயில்கள் பெரும்பாலும் சீர்காழி ரயில் நிலையத்துக்கு இரவு நேரங்களில் வந்து செல்லும் வகையில் கால அட்டவணை உள்ளது. அவ்வாறு இரவு நேரங்களில் சீர்காழி ரயில் நிலையத்தில் இறங்கி பிற பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் குறிப்பாக பெண் பயணிகளிடம் அப்பகுதியில் மறைந்திருக்கும் மர்ம நபர்கள் தங்கச் சங்கிலிகளை பறித்துச் செல்லும் சம்பவமும் நிகழ்ந்து வருகிறது. இதனால் குடும்பத்துடன் சீர்காழி ரயில் நிலையத்துக்கு வந்து வெளியூர் செல்லும் அல்லது ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகள் பிரதான சாலைக்குச் செல்லும் வரை சுமார் 250 மீட்டர் தொலைவுக்கு அச்சத்துடனேயே கடந்து செல்லும் நிலை உள்ளது.
சீர்காழி ரயில் நிலையத்தில் இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வெளிச்சம் இல்லாதது, பிரதான சாலையிலிருந்து ரயில் நிலையம் செல்லும் பகுதியின் இருபுறமும் செடி, கொடிகள் அடர்ந்து காடுகள்போல் உள்ளதுமே இதற்கு முக்கியக் காரணம். இவற்றில் மர்ம நபர்கள் மறைந்திருந்து வழிப்பறியில் ஈடுபடும் சம்பவம் அவ்வப்போது நடைபெறுகிறது.
ரயில்வே போலீஸார் யாரும் ரோந்து பணியை முழுமையாகச் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. சில சமயங்களில் அவ்வப்போது மயிலாடுதுறையிலிருந்து வரும் ஒரே ஒரு ரயில்வே காவலரும், ரயில் நிலையம் முழுவதும் ரோந்து செல்லாமல் நிலைய அலுவலகம் அருகாமையில் மட்டும் மேற்பார்வையிட்டு செல்வதாக கூறுகின்றனர். பழைய ரயில் நிலைய கட்டடம் இடித்து அப்புறப்படுத்தாமல் இருப்பதால் அந்த கட்டடத்தில் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழல் சீர்காழி ரயில் நிலையத்தில் உள்ளதால், பெரும்பாலான ரயில் பயணிகள் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள மயிலாடுதுறை ரயில் நிலையத்தையே அதிகம் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆகையால், சீர்காழி ரயில் நிலையத்தில் முழுநேரம் ரயில்வே பாதுகாப்பு போலீஸார் ரோந்து வர வேண்டும். ரயில் நிலையப் பகுதியில் மது அருந்திவிட்டு நடைமேடைகளில் அமர்ந்திருப்பவர்களை ரயில்வே போலீஸார் கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும். மின்விளக்கு வசதிகளை முழுமையாக ஏற்படுத்த வேண்டும். பழைய ரயில் நிலைய கட்டத்தை இடிக்க வேண்டும். ரயில் நிலையம் செல்லும் சாலையின் இருபுறங்களையும் தூய்மைப்படுத்த வேண்டும் என ரயில் பயணிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி நாகை மாவட்டச் செயலர் கி. ரமேஷ் கூறியது:
ரயில் நிலையத்திலிருந்து செல்லும் சாலையில் போதிய மின் விளக்குகள் இல்லை. ரயில்வே போலீஸார் சீர்காழி ரயில் நிலையத்தில் ரோந்து பணி மேற்கொள்ளாததால், நகை பறிப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதேபோல், பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் ரயில் நிலையத்திலிருந்து வெளியே செல்லும்போது அச்சத்துடனே செல்கின்றனர். சீர்காழி ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...