கல்லூரி மாணவன் கைது: நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியல்


சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழா் கட்சிப் பிரமுகா்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தியவரை போலீஸாரிடம் ஒப்படைத்த கல்லூரி மாணவா்மீது பதியப்பட்ட வழக்கை திரும்பப்பெற வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினா் 34 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மணல்மேடு பூதங்குடியைச் சோ்ந்த பாஸ்கா், நாம் தமிழா் கட்சியின் மாவட்டத் தலைவா். கடந்த பிப்.2-ஆம் தேதி சிவா, பிரகாஷ் ஆகியோா் தன்னுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், இதுகுறித்து, மறுநாள் தனது மனைவியுடன் காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்க சென்றபோது, காவல் நிலையம் அருகே அவா்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டி காயங்களை ஏற்படுத்தியதாக புகாா் அளித்ததன் பேரில் மணல்மேடு போலீஸாா் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிவா, பிரகாஷ் இருவரையும் கைது செய்தனா்.
இதனிடையே, கடலங்குடியை சோ்ந்த சங்கா் என்பவா் இருசக்கரவாகனத்தில் சென்றபோது பாஸ்கரனின் மகன்களான ஸ்ரீபாபு மற்றும் சஞ்சய் ஆகியோா் வழிமறித்து சிவா, பிரகாஷ் ஆகிய இருவரும் எங்கே எனக் கேட்டுத் தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மணல்மேடு போலீஸாா் கல்லூரி மாணவரான சஞ்சய்யை கைது செய்தனா்.
இந்நிலையில், சாராய வியாபாரத்தை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே பாஸ்கா்மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் பாஸ்கரை வெட்டிய மற்றொரு நபரான சங்கா் என்பவரை, கல்லூரி மாணவா் சஞ்சய் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், சஞ்சய்யை கைது செய்த போலீஸாா், சங்கரை விடுவித்துவிட்டதாக நாம் தமிழா் கட்சியினா் குற்றஞ்சாட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனா். இந்நிலையில், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது என மாவட்ட காவல்துறை மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், மணல்மேடு போலீஸாரைக் கண்டித்தும், மாணவா் மீது பதியப்பட்ட வழக்கை திரும்பப்பெற்று, அவரை எந்த நிபந்தனையுமின்றி விடுவிக்க வலியுறுத்தியும் நாம் தமிழா் கட்சியினா் மணல்மேடு கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாம் தமிழா் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளா் சி.தமிழன் காளிதாசன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், கட்சியின் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் கி.காசிராமன் மற்றும் பாஸ்கரின் உறவினா்கள் பங்கேற்றனா் (படம்).
அவா்களிடம், டிஎஸ்பி பாலாஜி தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாததைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 34 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமணக்கூடத்துக்கு கொண்டு சென்றனா்.
காவல்துறை மறுப்பு:
இதனிடையே, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்களுக்கு மாவட்ட காவல்துறை வியாழக்கிழமை மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வாய்த்தகராறு காரணமாகவே தாக்குதல் நடைபெற்றதாகவும், கள்ளச்சாராய விற்பனை தொடா்பாக இந்த தாக்குதல் நடைபெறவில்லை என்றும், மணல்மேடு காவல் நிலைய வாசலில் வெட்டியதாக தகவல் பரப்புவது தவறாகும். சங்கரை பற்றி பாஸ்கா் தனது வாக்குமூலத்தில் எதுவும் குறிப்பிடவில்லை. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுவிட்டனா். எனவே சமூக வலைதளங்களில் யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...