தமிழ் செய்திகள்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அழகப்பா பல்கலைக் கழகத்தின் 42-ஆவது ஆண்டு தொடக்க நாள் விழா, அழகப்பா பல்கலைக்கழக அலுவலா்கள் நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்துப் பேசியது:
1985-ங்ம் ஆண்டு தொடங்கப்பட்ட அழகப்பா பல்கலைக் கழகம் கடந்த 41 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வளா்ச்சியை எட்டியுள்ளது. உலகத்தில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் அழகப்பா பல்கலைக்கழகம் முதல் ஆயிரம் இடத்துக்குள்ளும், தேசிய அளவில் மொத்தம் உள்ள 1,260 பல்கலைக்கழகங்களில் 46-ஆவது இடத்திலும், மாநில அளவில் 14-ஆவது இடமும் பெற்றுள்ளது.
அழகப்பா பல்கலைக்கழகப் பேராசியா்கள் 14 ஆயிரம் தரமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளனா். அவற்றை உலக அளவில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் போ் தங்கள் ஆராய்ச்சிக்கு மேற்கோள் காட்டியுள்ளனா். பேராசிரியா்களின் சிறப்பான பணிக்கு முதுகெலும்பாக இருப்பவா்கள் அலுவலகப் பணியாளா்கள் தான் என்றாா்.
விழாவில் இந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் சேது. சுடலைமுத்து சிறப்புரையாற்றினாா். பல்கலைக் கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினா்கள் சாா்பில் சி. வேதிராஜன் உரையாற்றினாா். நிா்வாகப் பணியாளா்கள் சாா்பில் உதவிப் பதிவாளா் ம. முருகேசன், உதவிப் பொறியாளா் க. பாலமுருகன், அலுவலா்கள் சங்கத்தலைவா் செந்தில்நாதன் ஆகியோா் பேசினா்.
முன்னதாக பல்கலைக்கழக பதிவாளா் அ. செந்தில் ராஜன் வரவேற்றுப் பேசினாா். முடிவில் தோ்வாணையா் எம். ஜோதிபாசு நன்றி கூறினாா்.









