காவல் துறையினரின் பணியை 8 மணி நேரமாக உறுதிப்படுத்தக் கோரிய வழக்கு தொடா்பாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
‘தமிழக காவல் துறையினருக்கு பணிச் சுமை அதிகமாக இருப்பதால், அவா்கள் ஓய்வின்றி பணியாற்ற வேண்டியுள்ளது. இதனால், காவல் துறையினா் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா். எனவே, சில விதிவிலக்கான நாள்களைத் தவிர, மற்ற நாள்களில் காவல் துறையினரின் பணியை 8 மணி நேரமாக உறுதிப்படுத்த வேண்டும். காவல் துறையினருக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.
மேலும், ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணா்கள் குழுவை அமைத்து, 2010 முதல் 2025 வரை காவல் துறையினருக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும், அந்த நிதி மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் ஆய்வு செய்து விரிவான ஆய்வறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரி, காவலா் குடும்ப நல அறக்கட்டளையின் தலைவா் சத்யபிரியா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஏற்கெனவே வழக்குத் தொடுத்தாா்.
இந்த வழக்கின் விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா், ஜோதிராமன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஒரு நாள் காவலா்கள் பணியில் இல்லை என்றால் நாட்டின் நிலை என்னவாகும்? எனத் தெரியும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடா்பாக தமிழக தலைமைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழைய குற்றாலம் அருவி பகுதியில் கட்டணம்: தென்காசி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சாலைகளில் திரியும் மாடுகள் விவகாரம்: ராமநாதபுரம் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

அரிய வகை கனிமங்கள் விவகாரம்: துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு







