பராமரிப்பு இல்லாத பாண்டியன் அதிவிரைவு ரயில் பெட்டிகள் !
மதுரை ரயில் நிலையத்தில் இருந்து இரவு புறப்பட்டு செல்லும் பாண்டியன் அதிவிரைவு ரயிலில் புதிய பெட்டிகளில் பராமரிப்பு இல்லை என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


மதுரை ரயில் நிலையத்தில் இருந்து இரவு புறப்பட்டு செல்லும் பாண்டியன் அதிவிரைவு ரயிலில் புதிய பெட்டிகளில் பராமரிப்பு இல்லை என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரையிலிருந்து இயக்கப்படும் பாண்டியன் அதிவிரைவு ரயிலில் கழிப்பறைகள் சுத்தமாக இல்லை, ஏசி வகுப்பு பெட்டிகளில் இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்று பயணிகள் சிலர் ரயில்வே நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரை ரயில் நிலையத்தில் ரயில்களைப் பராமரிக்கும் பொறுப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பணிகளுக்காக மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்படும். அவ்வாறு ஒப்பந்தங்களை எடுக்கும் தனியார் நிறுவனங்கள் தேவையான பணியாளர்களை வைத்து பணிகளை மேற்கொள்வர். அவர்களே பாண்டியன் அதிவிரைவு ரயிலிலும் பணிகளை மேற்கொள்கின்றனர்.
புகார் குறித்து பயணி ஒருவர் கூறுகையில், பழைய பாண்டியன் ரயில் பெட்டிகளில் சுத்தமில்லாத கழிப்பறைகள், ஏசி இயந்திரங்கள் முறையாக இயங்காதது போன்ற பல்வேறு குறைபாடுகள் இருந்தன. இதேநிலை புதிய எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்ட பிறகும் நீடிக்கிறது. இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் எலித் தொல்லையும் அதிகரித்துள்ளன. இதனால் சேதமடையும் பயணிகளின் உடைமைகளுக்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்க மறுக்கிறது. இதுபோன்ற குறைகளை அதிகாரிகள் விரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும்.
கழிப்பறைகளில் உள்ள கை கழுவும் இடங்களில் சோப்புகளோ அல்லது கை கழுவும் திரவங்களோ வைக்கப்படுவதில்லை, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் பலவற்றில் குப்பைத் தொட்டிகள் இல்லை. இதனால் பயணிகள் குப்பைகளை ரயில் பெட்டிகளிலும், தண்டவாளங்களிலும் வீசிச் செல்லும் நிலை ஏற்படுகிறது என்றார்.
இதுகுறித்து ரயில்வே ஒப்பந்த தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் நௌஷத் கூறுகையில், பயணிகள் வழங்கும் தொகைக்கு நிகரான சேவையை வழங்க வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் கட்டாயம். ஆனால், பராமரிப்பு பணிகள், மின் இணைப்புகளை சரி செய்வது என அனைத்துப் பணிகளும் தனியார் ஒப்பந்தததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு ஒப்பந்தம் எடுக்கும் தனியார் நிறுவனத்தினர், லாபம் ஈட்டுவதற்காக குறைந்த ஆள்களை வைத்து அனைத்து பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்கின்றனர். இதனால் பராமரிப்பு பணியில் தொய்வு ஏற்படுகிறது. மேலும், வேலைப்பளு காரணமாக சிலர் பாதியிலேயே வேலையை விட்டு நின்றுவிடுகின்றனர்.
பாண்டியன் அதிவிரைவுரயிலின் பழைய பெட்டிகளில் இருந்த கழிப்பறைகள், தொட்டி நிறைந்தவுடன் தண்டவாளத்தில் கழிவுகளை கொட்டிச் செல்லும். ஆனால், தற்போது இணைக்கப்பட்ட எல்எச்பி பெட்டிகளில் பயோ டாய்லெட் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரயில் பெட்டிகளுக்கு கீழ் புறம் தனிப் பெட்டி பொருத்தப்பட்டுள்ளது. இதில் தேங்கும் கழிவுகள் அனைத்தும் பாக்டீரியாக்கள் மூலம் ஆவியாக மாற்றப்படும். இதை குறித்த கால இடைவெளிக்குள் சுத்தம் செய்யவில்லை என்றால் கழிவறை அமைந்துள்ள பெட்டி முழுவதும் துர்நாற்றம் வீசுத் தொடங்கும். புதிதாக மாற்றப்பட்டுள்ள இந்த பயோ டாய்லெட்டுகளை சுத்தம் செய்வது குறித்து பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும்.
மதுரையில் இருந்து இரவு புறப்படும் பாண்டியன் அதிவிரைவுரயிலில் மாலை 6.30 மணியளவில் இருந்து பராமரிப்பு பணிகள் துவங்கும். பிட் லயனில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த ரயிலில் கழிப்பறை சுத்தம் செய்வது, பெட்டிகளில் குப்பைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை பராமரிப்பு பணியாளர்கள் மேற்கொள்வர். ஆனால், குறைந்த பணியாளர்களை வைத்து இரண்டு மணி நேரத்திற்குள்ளாக அனைத்துப் பணிகளையும் முடிக்க முடியாத காரணத்தால் பயணிகள் சேவையில் தொய்வு ஏற்படுகிறது. இதற்கு நிரந்தரமான பராமரிப்பு பணியாளர்களை ரயில்வே நிர்வாகம் நியமிப்பது அவசியம்.
ரயில் புறப்படுவதற்கு முன்பு, மேற்கொள்ளப்பட்டுள்ள பராமரிப்பு பணிகளை ரயில்வே அதிகாரி ஒருவர் மேற்பார்வையிடுவது அவசியம். ஆனால், இதை அதிகாரிகள் யாரும் செய்வதில்லை என்றனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: விடுமுறை காலமாக இருப்பதால் பயணிகள் எண்ணிக்கை அதிகளவில் காணப்படும். பாண்டியன் அதிவிரைவுரயிலில் நிலவும் பராமரிப்பு பணிகளில் உள்ள குறைகள் குறித்து ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனத்தினரிடம் தெரிவித்துள்ளோம் விரைவில் இதுபோன்ற அடிப்படைக் குறைகள் போக்கப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...