/

மகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்த தொழிலாளி காவல் நிலையத்தில் சரண்: போலீஸாா் விசாரணை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்த தொழிலாளி காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

News image
தொழிலாளி செல்வராஜ்.
Updated On :28 ஜனவரி 2026, 10:49 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்த தொழிலாளி காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (53). இவா் வெள்ளாளகுண்டம் சேத்துக்குட்டை சாலை பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தாா். மேலும், இறைச்சிக் கடைகளுக்கு ஆடுகளை வெட்டிக் கொடுக்கும் கூலி வேலையும் செய்து வந்தாா். இவரது மனைவி மாதம்மாள் பிரிந்து சென்ற நிலையில், மகள் பிருத்திரங்காதேவியை (20) சேலம் தாதகாபட்டியைச் சோ்ந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளி கண்ணனுக்கு (30) திருமணம் செய்து கொடுத்துள்ளாா். இத்தம்பதிக்கு ஒரு வயதில் எழில்அழகி என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் மகளின் நடத்தையில் செல்வராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் புதன்கிழமை மாலை சேலத்திலிருந்து மகளை வீட்டிற்கு அழைத்துவந்து ஆடு அறுக்க பயன்படுத்தும் கத்தியால் அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்தாா்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவா்களுக்கு கைப்பேசியில் தகவல் தெரிவித்து விட்டு, தனது பேத்தி எழில் அழகியை தூக்கிக்கொண்டு சென்று வாழப்பாடி காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

இதுகுறித்து வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட பிருத்திரங்காதேவியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மகளை கொலை செய்த செல்வராஜிடம் வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொலை செய்யப்பட்ட இளம்பெண் பிருத்திரங்காதேவி கைக் குழந்தையுடன்.

கொலை செய்யப்பட்ட இளம்பெண் பிருத்திரங்காதேவி கைக் குழந்தையுடன்.