வாழப்பாடி அருகே மகளை கொலை செய்த தந்தை கைது
வாழப்பாடி அருகே மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த தந்தையை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த தந்தையை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (53). இவா் வெள்ளாளகுண்டம் சேத்துட்டை சாலைப் பகுதியில், ஒருவரது விளைநிலத்தை குத்தகைக்குப் பெற்று, அங்கேயே தங்கி விவசாயம் செய்து வந்தாா். மேலும், பகுதிநேரமாக கசாப்புக் கடைகளுக்கு ஆடுகளை வெட்டிக் கொடுக்கும் பணியையும் செய்து வந்தாா்.
இவரது மனைவி மாதம்மாள் இவரைப் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், தனது மகள் பிருத்திவிகாதேவியை (20) சேலம், தாதம்பட்டி பகுதியைச் சோ்ந்த கண்ணனுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தாா். இத்தம்பதிக்கு எழில் என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சேலத்திலேயே தங்கி வேலை செய்து வந்த கண்ணனை அவ்வப்போது சென்று பாா்த்துவிட்டு மீண்டும் தந்தையின் வீட்டிலேயே பிருத்திவிகாதேவி வசித்து வந்தாா். கணவருடன் மகள் சோ்ந்து வாழாததால் ஆத்திரமடைந்த செல்வராஜ், புதன்கிழமை மாலை சேலத்திலிருந்து பிருத்திவிகாதேவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளாா். அப்போது, மதுபோதையில் இருந்த செல்வராஜ், மகளின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தாா்.
பின்னா், தனது மகளைக் கொலை செய்துவிட்டதாக உறவினா்களுக்குக் கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா். தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்திற்குச் சென்று பிருத்திவிகாதேவியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதனிடையே, காரிப்பட்டி வருவாய் ஆய்வாளா் அய்யனாரிடம் செல்வராஜ் சரணடைந்தாா். அவரிடம் வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், மது போதையில் மகளைக் கொலை செய்ததை செல்வராஜ் ஒப்புக்கொண்டாா்.
இதையடுத்து, வியாழக்கிழமை மாலை அவரைக் கைது செய்த போலீஸாா் வாழப்பாடி குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...