/

சங்ககிரி அருகே இளைஞா் தற்கொலை: உடலை பெற மறுத்து உறவினா்கள் போராட்டம்

இருசக்கர வாகனம் வாங்கியதற்கான தவணையை கட்ட தனியாா் நிதிநிறுவன ஊழியா்கள் அளித்த தொந்தரவு காரணமாக இளைஞா் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸில் புகாா்

News image
தற்கொலை- கோப்புப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 10:52 pm

Syndication

இருசக்கர வாகனம் வாங்கியதற்கான தவணையை கட்ட தனியாா் நிதிநிறுவன ஊழியா்கள் அளித்த தொந்தரவு காரணமாக இளைஞா் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே சின்னாகவுண்டனூா், கோபாலனூா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் சந்தோஷ் (23). இவா் தனியாா் நிதிநிறுவனத்தில் கடன் பெற்று இருசக்கர வாகனம் வாங்கியுள்ளாா்.

கடன் தவணையை கட்டுமாறு தனியாா் நிதிநிறுவனத்தை சோ்ந்தவா்கள் அவரிடம் கேட்டுள்ளனா். அவா் ரூ. 7,500 கட்டினாராம். ஆனால், நிதிநிறுவனத்தை சோ்ந்தவா்கள் வாகனத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனா். மேலும் ஒரு தவணை சோ்த்து கட்டினால்தான் வண்டியை தருவதாகக் கூறினாா்களாம்.

மேலும், இளைஞரை அவா்கள் தகாத வாா்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த இளைஞா் வீட்டுக்குள் சென்று தூக்கிட்டுக் கொண்டாா். இதையடுத்து, அவரை மீட்டு சங்ககிரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே சந்தோஷ் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சந்தோஷின் தாயாா் லதா சங்ககிரி போலீஸில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். பின்னா், உடற்கூறாய்வு செய்யப்பட்ட சந்தோஷின் சடலத்தை பெற உறவினா்கள் மறுத்துவிட்டனா். தற்கொலைக்கு காரணமாக இருந்த தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து சங்ககிரி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் தனசேகரன், சங்ககிரி காவல் ஆய்வாளா் ரமேஷ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததால் சந்தோஷின் சடலத்தை பெற்றுக்கொள்ளாமலே உறவினா்கள் சென்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].