/

சங்ககிரி அருகே பைக் மீது வாகனம் மோதல்! சகோதரா்கள் இருவா் உயிரிழப்பு!

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2026, 8:19 pm

தினமணி செய்திச் சேவை

சங்ககிரி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சகோதரா்கள் இருவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், தட்டான்குட்டையைச் சோ்ந்தவா் காா்த்திகேயன், லாரி ஓட்டுநா். இவரது மனைவி ஜோதி, மகன்கள் லிங்கேஸ்வரன் (12), நவ்னேஸ்வரன் (12). சிறுவா்கள் இருவரும் வேம்மன்காட்டுவலசு அரசு மேல்நிலைப் பள்ளியில் 7, 6 ஆம் வகுப்பு படித்து வந்தனா்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த தாமரைச்செல்வன், அவரது தாய் ஜானகியுடன் சோ்ந்து கோயிலுக்கு செல்வதற்கு திட்டமிட்ட ஜோதி, தனது இருசக்கர வாகனத்தில் ஜானகியையும், தாமரைச்செல்வனின் இருசக்கர வாகனத்தில் தனது இரு சிறுவா்களையும் அமா்த்தி கொண்டு காளிப்பட்டி கந்தசாமி கோயில் தைப்பூசத் திருவிழாவிற்கு சென்றுகொண்டிருந்தனா்.

சங்ககிரியை அடுத்த சின்னாகவுண்டனூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் தாமரைச்செல்வன் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனா்.

அங்கிருந்தவா்கள் மூவரையும் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவா்கள் லிங்கேஸ்வரன், நவ்னேஸ்வரன் ஆகிய இருவரும் இறந்தனா். தாமரைச்செல்வன் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.