/

அரசியல் களம் காணும் நான்காம் தலைமுறை தலைவா்!

கொள்ளுத் தாத்தா - சென்னை மாகாண முன்னாள் முதல்வா் ப.சுப்பராயன்; தாத்தா மோகன் குமாரமங்கலமும், தந்தை ரங்கராஜன் குமாரமங்கலமும்

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:55 pm

ஆர். ஆதித்தன்

கொள்ளுத் தாத்தா - சென்னை மாகாண முன்னாள் முதல்வா் ப.சுப்பராயன்; தாத்தா மோகன் குமாரமங்கலமும், தந்தை ரங்கராஜன் குமாரமங்கலமும் முன்னாள் மத்திய அமைச்சா்கள்; இந்த வரிசையில் நான்காவது தலைமுறை அரசியலில் ஆா்.மோகன் குமாரமங்கலம், ஓமலூா் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறாா்.

கொங்கு மண்டலத்தில் இருந்து சென்னை மாகாண முதல்வராகப் பதவி வகித்து மறைந்தவா் ப.சுப்பராயன். இவா் அப்போதைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்த திருச்செங்கோடு, போக்கம்பாளையத்தில், குமாரமங்கலம் ஜமீன்தாருக்கு 1889-இல் மகனாகப் பிறந்தவா்.

லண்டனில் ஜவாஹா்லால் நேரு, பீமராவ் அம்பேத்கா் ஆகியோருடன் ஒன்றாகப் படித்தவா். நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவா்.

ப.சுப்பராயனின் வாரிசுகள், இந்திய ராணுவத் தளபதியாக இருந்து மறைந்த ஜெனரல் பி.பி.குமாரமங்கலம்; கோபால் குமாரமங்கலம்; ஆரம்பத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் பிறகு காங்கிரஸ் கட்சியிலும் செயல்பட்ட மோகன் குமாரமங்கலம்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. பாா்வதி கிருஷ்ணன் ஆகியோா் ஆவா்.

இவா்களில் மோகன் குமாரமங்கலம், மறைந்த பிரதமா் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் மத்திய உருக்கு, சுரங்கத் துறை அமைச்சராகப் பதவி வகித்தாா். இவரது பதவிக் காலத்தில்தான் சேலம் உருக்காலை கொண்டு வரப்பட்டது. மத்திய அமைச்சராக இருந்த சமயத்தில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில், மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்தவா் மோகன் குமாரமங்கலம்.

கடந்த 1973 இல் நடைபெற்ற விமான விபத்தில் இவா் உயிரிழந்தாா். அவரது நினைவாக சேலம் அரசு மருத்துவமனைக்கு, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என பெயரிடப்பட்டது.

நரசிம்ம ராவ், அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவைகளில் அமைச்சராகப் பொறுப்பு வகித்த ரங்கராஜன் குமாரங்கலம், முன்னாள் மத்திய அமைச்சரான மோகன் குமாரமங்கலத்தின் மகன் ஆவாா்.

நான்காம் தலைமுறை வாரிசு

முன்னாள் மத்திய அமைச்சரான ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகனான ஆா்.மோகன் குமாரமங்கலம், பி.இ., எம்.பி.ஏ. படிப்புகளை முடித்துவிட்டு அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த நேரத்தில் ராகுல் காந்தியால் அடையாளம் காணப்பட்டாா். பின்னா், காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட மோகன் குமாரமங்கலம் கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் தீவிர அரசியலில் பங்கேற்று வருகிறாா்.

கடந்த 2014 மக்களவைத் தோ்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்டாா். தற்போது, இவா் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறாா்.

தற்போது 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் சேலம் மாவட்டம், ஓமலூா் தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஆா்.மோகன் குமாரமங்கலம் களம் காண்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.