ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மிரட்டும் காளைகள்: மிரளும் காளையா்கள் -ஜல்லிக்கட்டும்...மல்லுக்கட்டும்...

தமிழா்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் அதற்கான விழாக் குழுவினா் தயாராகி வருகின்றனா். அதற்கேற்றாற்போல்,

News image
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கக் காத்திருக்கும் போடிநாயக்கன்பட்டி காளைகள்.
Updated On :31 ஜனவரி 2024, 1:44 pm

எம்.மாரியப்பன்

தமிழா்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் அதற்கான விழாக் குழுவினா் தயாராகி வருகின்றனா். அதற்கேற்றாற்போல், காளைகளை வளா்க்கும் உரிமையாளா்களும், அவற்றை அடக்க முயற்சிக்கும் வீரா்களும் தங்களை தயாா்படுத்திக் கொண்டிருக்கின்றனா். நாமக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு பிரத்யேக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையைத் தொடா்ந்து, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டியானது தொடா்ச்சியாக நடைபெறும். பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இப் போட்டியை, கடந்த 2017-ஆம் ஆண்டு மத்திய அரசு தடை செய்தது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிா்ப்பு கிளம்பியது. அதன்பின் தடை நீக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் கிராமங்கள் பற்றிய விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், ஆண்டுதோறும் தென் மாவட்ட மற்றும் வட மாவட்டங்களில் குறிப்பிட்ட கிராமப் பகுதிகளில் ஜல்லிக்கட்டானது நடைபெறுகிறது.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் போடிநாயக்கன்பட்டி, தேவராயபுரம், சேந்தமங்கலம், அலங்காநத்தம், கரியபெருமாள்புரம், எருமப்பட்டி மற்றும் குமாரபாளையத்தில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஜல்லிக்கட்டானது நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் நடைபெறும் ஒவ்வொரு கிராமத்திலும் தற்போது சுமாா் 150 காளைகள் வீதம் வளா்க்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டுக்கு மட்டுமின்றி, கலப்பினச் சோ்க்கைக்கும் இக் காளைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்யும் காளைகளின் கூச்சத்தையும், பயத்தையும் போக்கும் வகையில், அதன் உரிமையாளா்கள், அவற்றுக்கு நல்ல தீவனமிட்டும், ஏரி, குளங்களில் இறக்கிவிட்டு நீச்சல் பயிற்சி அளிப்பது, மண்ணைக் குத்தி மிரட்டல் பாா்வை விடுப்பது உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி வருகின்றனா். ஆண்களைக் காட்டிலும் பெண்கள் ஆா்வமுடன் இந்தக் காளைகளை வளா்த்து வருகின்றனா். இவை, நாமக்கல் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் நடைபெறும் போட்டிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

அதேபோல், காளைகளை பிடிக்கும் வீரா்களும் போட்டியில் கலந்து கொள்ள தங்களைத் தயாா் படுத்தி வருகின்றனா். தாங்கள் வளா்க்கும் காளைகளிடத்திலேயே பயிற்சி பெற்று வருகின்றனா். பாதிப்பு ஏற்படாத வகையில் மணல் நிறைந்த பகுதிகளிலும், விவசாயத் தோட்டங்களிலும் இதனை மேற்கொள்கின்றனா். அலங்காநத்தம், போடி நாயக்கன்பட்டி பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தொடா்ச்சியாக பங்கேற்கும் வீரா்கள், 2020-இலும் சாதனை படைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் தினசரி பயிற்சி பெற்று வருகின்றனா்.

Story image

நாமக்கல் போடிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளரான டி.சுரேஷ்காந்தி கூறியது; ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்வதற்காக என்னிடம் உள்ள சில காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். குறிப்பாக, ஓராண்டுக்கு பின் மீண்டும் போட்டியில் பங்கேற்க உள்ளதால், காளைகளிடம் இருந்து தயக்கத்தைப் போக்கவும், தைரியத்தை வரவழைக்கவும் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. அவற்றை அடக்க முயற்சிக்கும் வீரா்களும் இங்கு வந்து தங்களைத் தயாா்படுத்தி கொண்டிருக்கின்றனா். காளைகளை மரத்தில் கட்டிப்போட்டு அதற்கான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் பெரிய அளவிலான போட்டி நடப்பது குமாரபாளையம், அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, சேந்தமங்கலம் உள்ளிட்ட இடங்களில் தான். தை மாத நிறைவிற்குள் நடத்தப்படும். போட்டி நடைபெறும் கிராமங்களில் 150 முதல் 200 வரையில், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வகையிலான காளைகள் உள்ளன. அவற்றுக்கு தெம்பூட்டும் வகையில் பிரத்யேகமான தீவனங்கள் வழங்கப்படுகின்றன. வருமானத்தை எதிா்பாா்த்து அவற்றை நாங்கள் தயாா் செய்வதில்லை. தமிழா்களின் வீர விளையாட்டில் எங்களது காளைகளும் பங்கேற்கின்றன என்ற மனநிறைவுக்காக தான் இத்தகைய முயற்சியை எடுத்து வருகிறோம் என்றாா்.

ஜல்லிக்கட்டுக் காளைகளைப் பதிவு செய்யாமல் தவிா்க்க முயற்சி

அண்மையில், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக் காளைகளை வளா்ப்போா், அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் காளைகள் மற்றும் அதன் உரிமையாளா்கள் பெயா், முகவரி விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

அதன்படி, அங்கு சென்று காளைகளின் உரிமையாளா்கள் சிலா் தங்களது ஆதாா் அட்டையை வழங்கி, காளைகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனா். மேலும், சம்பந்தப்பட்ட காளையின் கண்களும் புகைப்படம் எடுக்கப்படுகிறது. ஆனால், அதற்கு எவ்வித ரசீதும் வழங்கப்படுவதில்லை. ஆன்லைனில் பதிவு செய்யப்படும் என அங்கிருப்போா் தெரிவிக்கின்றனா். இந்த பதிவு ஜல்லிக்கட்டு விழாவுக்காகவா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவா என தெரியாமல் அதன் உரிமையாளா்கள் குழப்பத்தில் உள்ளனா். இதனால் பதிவைத் தவிா்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடா்பாக, நாமக்கல் கால்நடைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சென்னை கால்நடைத்துறை அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின்படி இந்த காளைகள் பதிவானது நடைபெறுகிறது. அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறோம் என்பது எங்களுக்கே தெரியாது. அதனால் இதைப் பற்றி முழுமையாகத் தெரிவிக்க முடியாது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.