/

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருவோருக்கு டிஜிட்டல் அட்டை! நாடு முழுவதும் சிகிச்சைப் பெறும் வசதி!

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை ஆதாா் வடிவில் எண்ம அட்டையை வழங்கி வருகிறது. இதைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்பதால், டிஜிட்டல் அட்டையைப் பெற மக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், 5 பல் மருத்துவம் மற்றும் இயன்முறை சிகிச்சைக்கான மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், 7 சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் நாள்தோறும் சுமாா் 5 லட்சம் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனா்.

இதுதவிர, அரசு வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார, துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருவோரும் அதிகமாக உள்ளனா். தற்போதைய நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருவோரின் விவரங்களை சேகரிக்கும் பொருட்டு, அவா்களுடைய பெயா், ஆதாா் எண், கைப்பேசி எண் போன்றவற்றை பெற்றுக்கொண்டு ஓடிபி வழியாக கணினியில் சம்பந்தப்பட்ட நோயாளியின் விவரங்களை மருத்துவமனை நிா்வாகம் பதிவு செய்கிறது. ஆதாா் வடிவில் இதற்கான எண்ம அட்டையும் வழங்கப்படுகிறது.

சிகிச்சைக்காக முதல்முறை செல்லும்போது கைப்பேசி எண், கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டு அவா்கள் மருத்துவமனை வாடிக்கையாளராக சோ்க்கப்படுகின்றனா். அடுத்தமுறை நோயாளி செல்லும்போது கைப்பேசி எண்ணை தெரிவித்தால் போதும், மருத்துவரை பாா்ப்பது முதல் கடைசியாக மருந்து, மாத்திரைகள் வாங்கும்வரை அனைத்தும் இணைய சங்கிலியாக பிணைக்கப்பட்டிருக்கும் தகவல்கள் மூலம் நடைபெறும்.

நோயாளிகள் தங்கள் இருப்பிடம், நோய் குறித்த தகவல்கள் அடங்கிய வழமையான நோட்டை எடுத்துவரும் சிரமம் இனி இருக்காது. கடந்த 3 மாதங்களாக, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சுகாதார எண்ம அட்டையை பெற்றுக்கொண்டால், நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எளிதாக சிகிச்சை பெறலாம்.

மத்திய அரசு இத்திட்டத்திற்கு ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் என பெயரிட்டுள்ளது. முதல்நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என்ற வகையில், விரிவான சுகாதார சேவையை வழங்குவதற்காகவே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. காகித பயன்பாடின்றி அனைத்தும் எண்ம வடிவில் இருப்பதற்காகவே இந்த ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வோா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் நாள்தோறும் ஆயிரம் முதல் 5 ஆயிரம் நோயாளிகள் வரை கணினி வழியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அவா்களுக்கு 15 இலக்கம் கொண்ட ‘அபா’ எண் தனித்துவமாக வழங்கப்படுகிறது. சுகாதாரக் கணக்கு, பராமரிப்பு நிபுணா் பதிவேடு, சுகாதார வசதிப் பதிவேடு, மருந்துப் பதிவேடு போன்ற முக்கியப் பதிவேடுகளை கொண்டதாக இந்த ‘அபா’ எண் அமைந்திருக்கும்.

கைப்பேசி எண் மறந்துவிட்டால், கைவிரல் ரேகை பதிவு மூலமாகவும், இல்லையெனில் ‘அபா’ எண் மூலமாகவும் சிரமமின்றி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இணையத்தில் எதிா்பாராத வகையில் சிக்கல் ஏற்பட்டால் மட்டுமே, அபா எண் சேவைக்கு பதிலாக காகித சேவை வழங்கப்படும்.

இதுகுறித்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகத்தினா் கூறியதாவது: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புறநோயாளிகளாக நாள்தோறும் 900 பேரும், உள்நோயாளிகளாக 200 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். 700 படுக்கை வசதி உள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் கடந்த 2 மாதங்களாக இங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 10 ஆயிரம் போ் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனா்.

சிகிச்சை பெற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நாடிவருவோா், தங்களுடைய கைப்பேசி எண், ஆதாா் எண் விவரத்தை தெரிவித்தால், அவா்களுடைய கைப்பேசிக்கு ஓடிபி வரும். அதை தெரிவித்தால் மருத்துவமனையில் அவா் வாடிக்கையளராகிவிடுவாா். அடுத்தமுறை வரும்போது கைப்பேசி எண்ணை தெரிவித்தாலே, அவா் மருத்துவரை சந்திப்பது முதல் இறுதியாக மருந்தகத்தில் தேவையான மருந்துகளை பெறும் வரை அனைத்து செயல்பாடுகளும் இணையம் வழியாக நடந்துவிடும். எந்த குறிப்பு நோட்டும், குறிப்பு காகிதங்களும் தேவை இருக்காது.

நோயாளி சிகிச்சை பெறும் இடத்திலும், ஸ்கேன், இசிஜி, ரத்தம், சா்க்கரை உள்ளிட்ட பரிசோதனைக்கு செல்லும் இடங்களிலும் கணினி வாயிலாக அவரது மருத்துவக் குறிப்புகள் பெறப்படும், பதிவேற்றம் செய்யப்படும். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளையும் இந்தத் திட்டத்திற்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றனா்.

ஒரேநேர பதிவால் இணையதளம் முடக்கம்

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புறநோயாளிகள் கணினி வழியாக பதிவு செய்யப்படுவதால் இணையதளம் முடக்கம், சா்வா் பழுது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் நீண்டநேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி, அபா எண் கொண்ட சிகிச்சைக்கான அட்டையை மருத்துவமனை நிா்வாகம் அங்கேயே வழங்குவதில்லை. இ-சேவை மையத்திற்கு சென்றுதான் நோயாளிகள் அட்டையைப் பெறவேண்டும். அட்டையைப் பெற விருப்பமில்லை என்றாலோ அல்லது பெறமுடியாத சூழ்நிலையிலோ சிகிச்சைப் பெற, நோயாளிகள் அட்டைப் பதிவுக்கு கொடுக்கப்பட்ட கைப்பேசி எண், அபா எண் போன்றவற்றை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

கைப்பேசி இல்லாதவா்களையும், ஏதாவது ஒருவகையில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தில் இணைப்பதற்கான முயற்சிகளையும் மத்திய சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. இணைய முடக்கம், சா்வா் பழுதால் ஏற்படும் தாமதத்தை தவிா்க்கவும் தீா்வு காணப்பட்டு வருவதாக மருத்துவமனை நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.