மேடை நடனத்துக்கு மீண்டும் அனுமதி கிடைக்குமா?
சேலம், ஜன. 24: கடந்த சில ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வரும் கோயில் திருவிழா நடன நிகழ்ச்சிகளுக்கு மீண்டும் அனுமதி கிடைக்காதா என்ற ஏக்கத்தில் உள்ளனர் சுமார் 750 நடன கலைஞர்கள். தமிழகத்தில், குறிப்பாக


சேலம், ஜன. 24: கடந்த சில ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வரும் கோயில் திருவிழா நடன நிகழ்ச்சிகளுக்கு மீண்டும் அனுமதி கிடைக்காதா என்ற ஏக்கத்தில் உள்ளனர் சுமார் 750 நடன கலைஞர்கள்.
தமிழகத்தில், குறிப்பாக சேலம் மாவட்டத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயில் திருவிழாக்கள் என்றாலே எந்தக் குழுவினரின் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பதைத் தெரிந்துகொள்வதில் இளைஞர் கூட்டம் ஆர்வம் காட்டுவார்கள். முதியவர்கள்கூட இந் நிகழ்ச்சிக்கு ரசிகர்களாகவே மாறியிருந்தனர்.
இதற்குக் காரணம், இந்த நடன நிகழ்ச்சிகளில் சினிமா பாடல்களுக்கு, நடிகர் நடிகையர் எந்த உடையில் ஆடினார்களோ அதே போன்ற உடை பயன்படுத்தப்பட்டது. இது குறித்து பரவலாக புகார்கள் எழுந்ததால், காவல்துறையினர் கண்காணிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இத்தகைய சினிமா கவர்ச்சி நடனங்கள், விழா ஏற்பாட்டாளர்களின் நிபந்தனைகளால் நடத்தப்பட்டதே தவிர, நடன கலைஞர்கள் இதில் ஆர்வத்துடன் ஈடுபடவில்லை என்பதே உண்மை. பிழைப்புக்காக இத்தகைய நடனங்களையும் ஆடுவதற்கு கலைஞர்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.
சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இத்தகைய திருவிழாக்கால நடன, ஆடல்பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையால் தடை விதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 2009 செப்டம்பர் முதல் இந்நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் அனுமதி நிறுத்தப்பட்டது.
2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சேலம் மாவட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட நடனக் குழுக்கள் இருந்தன. நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டதால், குழுக்களின் தற்போது எண்ணிக்கை 50 ஆகக் குறைந்தது.
தற்போது சேலம் மாவட்ட திரைப்பட மேடை நடனக் கலைஞர்கள் சங்கம் என்ற பெயரில் இவர்கள் சங்கம் அமைத்து நடன நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி வருகின்றனர்.
இதுகுறித்து, அச்சங்கத்தின் செயலர் எஸ்.பி. பூபதி கூறியது:
முறையாக நடனம் பயின்ற, இனி ஆபாச நடனம் ஆடமாட்டேன் என்ற உறுதியேற்றுள்ள 750 பேருக்கு எங்கள் சங்கத்தின் அடையாள அட்டை வழங்கி உள்ளோம்.
ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டிருந்த ஏராளமான கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம், சென்னையில் 3 ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்திவருகின்றோம்.
நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் அனுமதி இல்லை என்று போலீஸôரும், மாவட்ட நிர்வாகமும் எங்களது கோரிக்கையை நிராகரிக்கின்றன.
நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியமோ, மேடை நடன நிகழ்ச்சிகளை நாங்கள் தடை செய்யவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிவித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தில் மட்டும் எந்தத் தடையும் எழவில்லை. திருவிழா என்றால் அனுமதி மறுக்கிறார்கள்.
2009-ல் தடை விதிக்கப்பட்ட பிறகு 2010 ஜனவரியில் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், பெருமாகவுண்டம்பட்டி, பூலாம்பட்டி, சிவதாபுரம், அஸ்தம்பட்டி பகுதிகளில் நடன நிகழ்ச்சிகளுக்கு போலீஸôர் அனுமதி அளித்துள்ளனர். இப்போது உயர்நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி, நடத்திக் கொள்ளுங்கள் என்கின்றனர். இதற்கெல்லாம் எங்களிடம் பொருளாதார வசதி ஏது? என்றார் அவர்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறியது:
சேலம் மாவட்டத்தில் சில இடங்களில் ஆபாசம் கூடாது, அதிக நேரம் நடத்தக்கூடாது என்பது உள்ளிட்ட நீதிமன்ற விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. எதிர்காலச் சந்ததியினரை சீரழிக்கும் வகையிலான ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு ஒருபோதும் அனுமதி அளிக்க முடியாது என்றனர்.
கோயில் திருவிழா நடத்துவோரிடம் இதுகுறித்து கேட்டதற்கு அவர்கள் கூறியது: திருவிழாவில் கிராமத்தினர்தான் பங்குகொள்கின்றனர். இவர்கள் சினிமாவில் ஆடும் அதே கவர்ச்சி நடனத்தைத்தான் பார்க்க விரும்புகின்றனர். இது ஆபாசம் என்றால், இதே நடனத்தை வீட்டுக்குள் குடும்பத்தினர் அனைவரும் டிவி முன்னால் உட்கார்ந்து பார்ப்பது எப்படி? பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் ஆடுகிறார்கள். அதை டிவியில் வெளியாகிறது. தடையில்லை. அதே நடனத்தை வயிற்றுப் பிழைப்புக்காக கலைஞர்கள் மேடையில் ஆடினால் ஆபாசம் என்கிறார்கள். என்ன செய்ய? இதில் அரசுதான் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...