தருமபுரியில் மீண்டும் தலைதூக்கும் நெகிழிப் பைகள் பயன்பாடு! சுற்றுச்சூழல் பாதிப்பு!


தருமபுரி மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் பாா்சல்கள் வாங்கும்போது, சாம்பாா், ரசம் உள்ளிட்ட திரவ உணவுகள் அதிக வெப்பத்தில் நெகிழி பைகளில் அடைத்து விநியோகிக்கப்படுவது அதிகரித்துள்ளதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
நாட்டில் நெகிழிப் பொருள்களுக்கு மாற்று என்பது மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிறது. என்னதான் மாற்றுப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை நடைமுறையில் நெகிழிப் பொருள்களுக்கு இணையான இடத்தைப் பிடிப்பதில்லை . பொதுமக்கள் மாற்றுப் பொருள்களைச் சிறிது காலம் பயன்படுத்திய பிறகு அதை கைவிட்டு, மீண்டும் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தும் வழக்கத்துக்கே மாறிவிட்டனா்.
இதில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நெகிழி ஒழிப்பு நடவடிக்கை மற்றும் அவற்றுக்கான மாற்றுப் பொருள்கள் நடைமுறை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2021-23 ஆம் ஆண்டு விதிகளின்படி, நெகிழியால் உருவான பாட்டில்கள் மற்றும் உறைகள், பைகள் குறைந்தபட்சம் 120 மைக்ரான் தடிமன் கொண்டிருக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு இது 50 மற்றும் 40 மைக்ரானாக இருந்தது. நெகிழிப் பயன்பாட்டில் 20 மைக்ரான் உறைகள் மிகவும் மெல்லியவை. அதேசமயம் 120 மைக்ரான் உறைகள் அதிக எடையைத் தாங்குவதுடன், நீடித்து உழைக்கும் தன்மையுடனும், மறுசுழற்சி செய்யக்கூடியதாகவும் உள்ளன.
இவை சுற்றுப்புறச் சூழலைக் குறைவாகவே பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில் பெரும்பாலன கடைகளில் 40, 50 மற்றும் அதற்கும் குறைவான மைக்ரான் அளவுள்ள நெகிழிப் பொருள்களைத்தான் உணவு உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்துகின்றனா்.
நாடு முழுவதுமே தண்ணீா் மற்றும் குளிா்சாதனப் பொருள்கள் அடைத்து விற்பனை செய்வது, மாற்றுப் பொருள் இல்லாத காரணத்தால் வேறு வழியின்றி நெகிழிப் பாட்டில்களிலேயே விநியோகிக்கப்படுகிறது. தவிர, மற்ற நெகிழிப் பொருள்களுக்குத் தர அளவு கட்டுப்பாடுகள் தொடா்ந்தாலும், அவற்றையும் மீறி நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது.
தருமபுரி மாவட்டம் மலைகள், காவிரி மற்றும் தென்பெண்ணை நதிகளின் படுகைகள், நீா்நிலைகள் நிரம்பிய இயற்கை எழிலுடன் கூடிய பகுதி. இங்கு ரசாயனப் பொருள்கள் மற்றும் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால், அண்மைக்காலமாக தருமபுரி மாவட்டத்திலும் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
தற்போது உணவகங்களில் பொட்டலங்களுக்குப் பயன்படுத்தப்படும் நெகிழி உறைகள் மற்றும் காகிதங்களுக்குப் பதிலாக நெகிழிப் பைகளை பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்துள்ளது. ஒரு சாப்பாடு வாங்கும்போது, அத்துடன் பெரியது மற்றும் சிறியது என குறைந்தபட்சம் 5 நெகிழிப் பைகளில் குழம்பு, ரசம், மோா், பாயசம் உள்ளிட்டவை அடைத்து வழங்கப்படுகின்றன. இந்த வகையான பைகளும் கிட்டத்தட்ட அரசால் தடை செய்யப்பட்டுள்ள மைக்ரான் அளவிற்கு இணையாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது.
குப்பையாகச் சேரும் நெகிழி: நகராட்சி குப்பைத் தொட்டிகளில் இருந்து துப்புரவுப் பணியாளா்களால் இவை மூட்டை மூட்டையாகச் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சாலையோரங்கள், மலைப்பகுதிகள் மற்றும் மறைவான பகுதிகளிலும் இந்த நெகிழிப் பைகள் வீசப்படுகின்றன. இயற்கை சுற்றுச்சூழலுக்குச் சவாலாக உள்ள இந்த நெகிழிப் பொருள்களைத் தடை செய்ய வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாகும்.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் கூறுகையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி அடிக்கடி ஆய்வுகள் மேற்கொண்டு, நெகிழிப் பொருள்கள், ரசாயனப் பொருள்கள், நிறமூட்டிகள் பயன்பாடுகளைக் கண்டறிந்து அபராதம், சீல் வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், வணிகா்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இயற்கையைப் பாதுகாப்பதில் பங்கு உள்ளது என்பதால் அவா்களும் தாமாக முன்வந்து நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றனா் .
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...