

நெகிழி (பிளாஸ்டிக்) மாசுபாடு உலகளாவிய பிரச்னையாக மாறியுள்ளது. ஆண்டுதோறும் 19-23 மில்லியன் டன் நெகிழிக் கழிவுகள் நீர்நிலைகளில் கலந்து ஏரிகள், குளங்கள், நதிகள், கடல் ஆகியவற்றை மாசுபடுத்துவதாக ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. நெகிழிக் கழிவுகள் வாழ்விடங்கள், இயற்கையான செயல்பாடுகளை மாற்றியமைத்து, பருவநிலை மாற்றத்துக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் செயல்திறனைக் குறைத்து மக்களின் வாழ்வாதாரம், உணவு உற்பத்தித் திறனை நேரடியாக பாதிக்கின்றன.
1950-களில் தொடங்கி இப்போது வரை உலகம் முழுவதும் சுமார் 9.2 பில்லியன் டன் நெகிழி உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 7 பில்லியன் நெகிழி கழிவுகளாகக் கொட்டப்பட்டு நீர்நிலைகளையும், மண்ணையும் மாசுபடுத்தி வருகின்றன.
ஆண்டுதோறும் 430 மில்லியன் டன் நெகிழி உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு குறுகிய கால பயன்பாட்டுக்குப் பிறகு கழிவுகளாக மாறிவிடுகின்றன. இன்று நெகிழிக் கழிவுகள் சென்றடையாத இடமே பூமியில் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.
நெகிழி பாட்டில்கள், பைகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீர், உணவுப் பொருள்களில்கூட மைக்ரோ, நானோ பிளாஸ்டிக் என்று சொல்லக்கூடிய நுண்ணிய நெகிழித் துகள்கள் கலந்திருக்கின்றன என்பது கசப்பான உண்மை. இந்தப் பின்னணியில் சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த ஓர் உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.
"பாலிஎத்திலீன் டெரப்தலேட் (பெட்) பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர், நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் உப்பு, சர்க்கரை ஆகியவற்றில் மைக்ரோ அல்லது நானோ நெகிழி கலந்திருக்கலாம்' என்பதை நுகர்வோருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதே அந்த உத்தரவு.
வனம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்களை விசாரிக்கும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு பிறப்பித்த உத்தரவில், இந்த எச்சரிக்கை வாசகங்களை சிவப்பு நிற எழுத்தில் அச்சிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) ஆகியவற்றுக்கு தெரிவித்திருக்கிறது. இதன்படி, பெட் பாட்டில்கள் மற்றும் பிற பிளாஸ்டிக் பைகளில் அடைத்து குடிநீர், உப்பு, சர்க்கரையை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு உரிய அறிவுறுத்தலை மத்திய அமைச்சகமும், எஃப்எஸ்எஸ்ஏஐ ஆகியவை வழங்க வேண்டும்.
உணவுப் பொருள்களில் மைக்ரோ, நானோ நெகிழித் துகள்கள் கலப்பது மற்றும் அதைத் தடுப்பது குறித்து எஃப்எஸ்எஸ்ஏஐ, சிஎஸ்ஐஆர்-லக்னௌ இந்திய நச்சுயியல் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐடிஆர்), கொச்சி மத்திய மீன்பிடித் தொழில்நுட்ப நிறுவனம், பிலானி தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டன. ராஜஸ்தான், ஹிமாசல், சண்டீகர், ஹரியாணா, கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய ஆறு இடங்களிலிருந்து பெறப்பட்ட பாட்டில் குடிநீரில் நுண்ணிய நெகிழித் துகள்கள் இருப்பது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதேபோன்று உப்பு, சர்க்கரை மாதிரிகளிலும் நுண்ணிய நெகிழித் துகள்கள் கலந்திருப்பது தெரியவந்தது. அதிலும், அயோடின் கலந்த உப்பில் அதிகபட்சமாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும், இதனால் உடலுக்கு ஏற்படும் தீங்கு குறித்து ஒரு முடிவுக்கு வருவதற்கு ஆய்வைத் தொடர வேண்டும் எனவும் எஃப்எஸ்எஸ்ஏஐ சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், நுண்ணிய நெகிழித் துகள் கலப்பு குறித்து நுகர்வோருக்குத் தெரியப்படுத்த இந்த ஆரம்பகட்ட ஆய்வு முடிவுகளே போதுமானது என நீதிமன்றம் தெரிவித்து அதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
மைக்ரோ பிளாஸ்டிக் என்பது 5 மி.மீ. அளவே கொண்ட நெகிழித் துகள். நானோ பிளாஸ்டிக் என்பது அதைவிடப் பலமடங்கு சிறியது. மனித உடலில் உமிழ்நீர், நுரையீரல், இரைப்பை, ரத்தம், சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றில் நெகிழித் துகள்கள் கலந்திருப்பது ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது. இவை நமது உடலுக்குள் நுழைவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சி இன்னும் ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது.
நெகிழித் துகள்கள் மனிதர்களின் உடலுக்குள் எந்த அளவுக்குக் கலந்துள்ளன என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பம் மேம்படவில்லை என உலக சுகாதார அமைப்பு அதன் 2022-ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. மனிதர்களின் வாழ்க்கையில், சுற்றுச்சூழலில் நெகிழிப் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதனால், நெகிழித் துகள்கள் உணவுப் பொருள்கள் வரை ஊடுருவியுள்ளன. இந்தச் சூழலில் நெகிழித் துகள்கள் உடலுக்குள் செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சி மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
ஆராய்ச்சிகள் ஒருபுறம் இருந்தாலும், நெகிழிப் பொருள்களால் எந்த அளவுக்குப் பயன் இருக்கிறதோ, அதைவிட அதிக அளவுக்கு ஆபத்தும் இருக்கிறது என்பதை உலகம் உணர்ந்துள்ளது.
மறுசுழற்சி செய்யக்கூடிய நெகிழி உற்பத்தி, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழி உற்பத்திக்குத் தடை என நெகிழிப் பொருள்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.
நேரடியாக நெகிழிப் பொருள்களில் உணவு உண்பதைத் தவிர்ப்பது, பாட்டில் குடிநீர், பாட்டில் குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை அருந்தாமல் இருப்பது - இவற்றின் மூலம் உடல்நல பாதிப்புகளைத் தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உதகையில் மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது
நுண்ணிய பார்வையற்ற தன்மை... மாநில விருதுகளைச் சாடிய சேரன்!

தருமபுரியில் மீண்டும் தலைதூக்கும் நெகிழிப் பைகள் பயன்பாடு! சுற்றுச்சூழல் பாதிப்பு!

கும்பகோணம் கடைகளிலிருந்து 3 டன் நெகிழி பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

