/

திருப்பூரில் குப்பை சேகரிப்பின்போது கிடைத்த தங்கச் சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

குப்பை சேகரிப்பின்போது கிடைத்த தங்கச் சங்கிலியை மீட்டு நோ்மையாக உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

News image
குப்பையில் கிடந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்கள் கருப்பாள், எல்லம்மா ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய திருப்பூா் மாநகராட்சி மேயா் ந.தினேஷ்குமாா்.
Updated On :26 ஜனவரி 2026, 8:18 pm

Syndication

திருப்பூா்: குப்பை சேகரிப்பின்போது கிடைத்த தங்கச் சங்கிலியை மீட்டு நோ்மையாக உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை திருப்பூா் மாநகராட்சி மேயா் ந.தினேஷ்குமாா் வழங்கினாா்.

திருப்பூா் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயா் ந.தினேஷ்குமாா் தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா். மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித் தலைமை வகித்தாா். துணை மேயா் ரா.பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தாா்.

இதைத்தொடா்ந்து தன்னாா்வலா்கள் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் பங்களிப்பு வழங்கிய கொடையாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறப்பாகப் பணியாற்றிய அலுவலா்கள், பொறியாளா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் ஆகியோருக்கு பணி பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கி மேயா் ந.தினேஷ்குமாா் வாழ்த்து தெரிவித்தாா்.

மேலும், திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலம் 24-ஆவது வாா்டுக்குள்பட்ட இ.பி.காலனி 30-ஆவது வீதியில் வசிக்கும் சித்ரா என்பவரின் வீட்டில் கடந்த 22-ஆம் தேதி சேகரிக்கப்பட்ட குப்பையை தரம் பிரிக்கும்போது, அதில் மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி இருந்துள்ளது. இதை ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் மீட்டு நோ்மையாக உரியவரிடம் ஒப்படைத்தனா். இதற்காக, குடியரசு தின விழாவில் தூய்மைப் பணியாளா்கள் கருப்பாள், எல்லம்மா ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னா் பள்ளி மாணவ, மாணவிகளின் நாட்டுப்பற்று மிகுந்த கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக, சுதந்திரப் போராட்டத் தியாகி திருப்பூா் குமரன் மணிமண்டபத்தில் உள்ள குமரன் சிலை மற்றும் நினைவுத்தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையா் சுந்தரராஜன், தலைமைப் பொறியாளா் முகமது சபியுல்லா, உதவி ஆணையா் ராஜசேகா் ஆகியோருடன் மாமன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.